ஈழப்போராட்ட வரலாறு · ஆசிரியர் கட்டுரை
1987 – யாழ்ப்பாணப் பண்ணை விடுதி மினி முகாம் மீதான தாக்குதல்
1987 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் யாழ்ப்பாணக் குடாநாட்டின் இராணுவ நிலை
1987 ஆம் ஆண்டின் ஆரம்பப் பகுதியில், யாழ்ப்பாணக் குடாநாடு வேறு இயக்கங்கள் அற்று முழுமையாகவே விடுதலைப் புலிகளின் தளக்கட்டுப்பாட்டுப் பிரதேசமாகத் திகழ்ந்த வேளையில்,
அங்கே பலாலி, காங்கேசன்துறை, காரைநகர், கோட்டை, நாவற்குழி, பருத்தித்துறை, வல்வெட்டித்துறை எனப் பல முகாம்களுக்குள் இருந்த சிங்களப் படைகள் வெளியே வந்து முன்னேற முடியாதவாறு,
அத்தருணத்தில் இருந்த விடுதலைப் புலிகளின் படையணிகள் சிங்கள இராணுவத்தை முடக்கி வைத்திருந்தன.
இந்த நிலையில், யாழ் குடாநாட்டில் முன்னேற முடியாது முடங்கியபடி, ஏற்பட்ட தனது தொடர்ச்சியான தோல்விகளால் நகர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருந்த சிங்கள இராணுவம்,
தங்களது பிரதான முகாம்களைப் பாதுகாக்க, அதற்கு அருகாமையில் மினி முகாம்களை அமைக்க எத்தனித்தது.
அவ்வாறு யாழ் நகரத்தின் கோட்டை முகாம்களுக்குள் இருந்த சிங்கள இராணுவமும்,
தாம் முடக்கம் அடைந்திருந்த நிலையில்,
தமது பின்னடைவுகளைச் சமநிலைப்படுத்தவும்,
வழங்கல் மற்றும் பாதுகாப்பு வலையமைப்பை வலுப்படுத்தவும்,
தமது கோட்டை முகாமில் இருந்து அதற்கான முயற்சிகளில் இறங்கியது.
அந்த முயற்சியின் ஒரு பகுதியாக,
1987 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7 ஆம் திகதி அன்று யாழ்ப்பாணக் கோட்டை முகாமையும், மண்டைதீவு முகாமையும்,
தங்களது வழங்கல் வசதிக்காக இணைக்கும் இடைநிலையாக,
பண்ணை விடுதி மற்றும் தொலைத்தொடர்பு நிலையம் போன்ற இடங்களைக் குறிவைத்து, அவற்றைக் கைப்பற்றி மினி முகாம்களை அமைக்கும் நகர்வொன்றைச் சிங்கள இராணுவம் மேற்கொண்டது.
இந்த இராணுவ நகர்வைத் தடுத்து நிறுத்த,
புலிகளால் தொடுக்கப்பட்ட முறியடிப்புத் தாக்குதலில்,
அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்றுக் கிராமத்தைச் சேர்ந்த பாறூக் என்ற அகமது லெப்பை முகமது ஹனீபா மற்றும்,
சீலன் என்ற தங்கையா சிவகுமார் ஆகிய விடுதலைப் புலிகள் வீரமரணம் அடைந்தார்கள் என்றாலும்,
பண்ணை விடுதி மற்றும் தொலைத்தொடர்பு நிலையம் போன்ற சிங்கள இராணுவம் குறிவைத்த இடங்கள் இராணுவத்தால் கைப்பற்றப்பட்டன.
நாவற்குழி முகாம் மீதான தாக்குதல் முயற்சியும் எதிர்பாராத வெடி விபத்தும்:

அந்த மினி முகாம்களைத் தகர்த்து, மீண்டும் இராணுவத்தை இருந்த இடத்திற்குப் பின்நகர்த்த வேண்டிய தேவை புலிகளுக்கு இருந்தாலும்,
முதலில் புலிகள், தாங்கள் ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி,
நாவற்குழி படை முகாமைத் தாக்கத் திரட்டிய வேவுத் தகவல்களின் அடிப்படையில்,
யாழ்ப்பாண மாவட்டத்தில் முடக்கப்பட்டிருந்த முகாம்களில் ஒன்றான,
சாவகச்சேரி பகுதியில் அமைந்துள்ள நாவற்குழி முகாமைத் தாக்கி அழிக்கும் நோக்கத்தோடு,
புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான பொன்னம்மான் என்ற அற்புதனின் தலைமையில்,
1987 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி அன்று புறப்பட இருந்த புலிகளின் தாக்குதல் முயற்சி,
எதிர்பாராது நடைபெற்ற தவறுதலான வெடி விபத்தினால்,
அந்தத் தாக்குதலுக்குத் தலைமை தாங்க இருந்த அற்புதன் என்ற பொன்னம்மான் உட்பட,
பத்து விடுதலைப் புலிகள் வீரமரணமடைய,
அந்தத் தாக்குதல் நடைபெறாது விட்டாலும்,
இந்தத் தாக்குதல் முயற்சியின் முழுமையான விபரங்களை அறிந்த இலங்கை இராணுவம்,
தாங்கள் புலிகளால் எப்போதும் தாக்கப்படுவோம் என்ற அச்சம் காரணமாக,
யாழ்ப்பாண மாவட்டத்தில் தாங்கள் இருந்த அத்தனை இராணுவ முகாம்களிலும்,
எதிர்த்தாக்குதலுக்குத் தயாரான நிலையிலேயே இருந்தது.
அவ்வாறே கோட்டை இராணுவத்தால் விஸ்தரிக்கப்பட்ட பண்ணை விடுதி மினி முகாமும்,
பலப்படுத்தப்பட்டு, அங்கே பொலிஸாரும் இராணுவமும் நிலைகொண்டு பலமான நிலையிலேயே இருந்தனர்.
பண்ணை விடுதி மினி முகாம் மீதான தாக்குதலுக்கான திட்டமிடல்
தளம் திரும்பி இருந்த தலைவர்:

தேசியத் தலைவர் அவர்கள் 1987 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5 ஆம் திகதி,
தமிழீழத் தளம் திரும்பி, அங்கே தளக்கட்டுப்பாட்டுப் பிரதேசமாக இருந்த யாழ் மாவட்டத்தில் தங்கியிருந்த அந்தக் காலகட்டத்தில்,
தமிழீழ விடுதலைப் புலிகளின் யாழ் மாவட்டத் தளபதியாக இருந்த கிட்டு என்ற சதாசிவம் கிருஷ்ணகுமார் அவர்கள்,

யாழ் நகரில் இராணுவ ரீதியாக முக்கியமான இடமாக இருந்த அந்தப் பண்ணை விடுதி மினி முகாமைத் தகர்க்கும் முடிவினை எடுத்தார் என்ற போதும்,
அந்தத் தாக்குதலுக்கான முழுப் பொறுப்பும், அந்த நேரத்தில் மன்னார் மாவட்டத் தளபதியாக இருந்த ராதா என்ற கனகசபாபதி ஹரிச்சந்திரா அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என்ற வகையில்,
அந்தத் தாக்குதலைத் திட்டமிட்டுச் செம்மையாகச் செய்ய,
தளபதி ராதா அவர்கள் யாழ் கோட்டையைச் சுற்றி, காவல் அரண்களில் காவல் கடமைகளில் இருந்த புலிகளில் துடிப்பான இளம் புலிகளான,
கிர்மானி, கட்ட மோகன், சேது, கீத், ராசா போன்றவர்களை அந்த முகாமை அண்டி ஊடுருவவிட்டு, தாக்குதலுக்குத் தேவையான தகவல்களைத் திரட்டி எடுத்த பின்னர்,
1987 மார்ச் 23 – பண்ணை விடுதி மினி முகாம் மீதான அதிரடித் தாக்குதல்:

1987 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் திகதி நள்ளிரவு 1:20 மணி அளவில்,
யாழ் மாவட்டத் தளபதியாக இருந்த கிட்டு அவர்களின் ஒருங்கிணைப்பில்,
தளபதி ராதா அவர்களின் கட்டளையின் வழிநடத்தலில்,
பண்ணை விடுதி மினி முகாம் மீது புலிகளின் அதிவேகமான அதிரடித் தாக்குதல்,
மும்முனைகளில் மேற்கொள்ளப்பட்டது.
கொட்டடி, கோட்டையை அண்டிய பகுதி மற்றும் கடற்கரைப் பகுதி ஆகிய மூன்று திசைகளிலும் இருந்து புலிகள் முன்னேறும் வகையில், அந்தத் தாக்குதல் திட்டமிடப்பட்டு,
கொட்டடிப் பகுதியில் இருந்து மூத்த போராளி மதன் தலைமையில் கிர்மானி, சந்திரன், செவ்வேள், அருணன் உள்ளிட்ட பலர் முன்னேறினார்கள்.
அதேவேளையில், கோட்டையை அண்டிய பகுதியிலும் கடற்கரைப் பகுதியிலும் இருந்து இருபதுக்கும் குறைவான போராளிகளைக் கொண்ட ஒரு சிறப்புக் குழு பாரத் தலைமையில் முகாமை ஊடறுத்து உட்புகுந்து,
நேரடி அதிரடித் தாக்குதலை முன்னெடுத்தது.
அந்தக் குழுவில் தலைவரின் மெய்ப்பாதுகாப்பு அணியில் இருந்த அஜீத் உள்ளிட்டவர்களோடு, கட்ட மோகன், ராசா, வேந்தன் பிரபு மற்றும் இருபாலை ஐயர், சேது, மன்னார் ஐயர், மோகன் ராம் மற்றும் கீத் கிருபன் போன்றோரும் இணைந்து வீரத்துடன் செயல்பட்டு,
உபசாந்த குணதிலக, பாலித்த கருணதிலக, அமரசேன ஆகிய மூன்று சிங்களப் பொலிஸ் கான்ஸ்டபிள்களையும்,
சிறி மொர, சந்திர சிறி, பக்கமிவெவ, உபேவன்சே, திலக்குமார ஆகிய ஐந்து இராணுவத்தினரையும் கைது செய்தார்கள் என்ற வகையில்,
மொத்தமாக எட்டுப் பாதுகாப்புப் படையினர் புலிகளால் கைது செய்யப்பட்டனர்.
இந்தக் கைதில் ஒருபக்கம் தலைமை தாங்கிய பாரத், அத்தருணத்தில் தளபதி கிட்டுவின் மெயின் என அழைக்கப்படும் பிரதான முகாமில் இருந்த இருபாலை ஐயர்,
தலைவரின் மெய்ப்பாதுகாவலராக இருந்த அஜீத் உட்பட மேலும் சில போராளிகள் நேரடியாகச் சம்பந்தப்பட்டிருந்தனர்.
வீரச்சாவடைந்த போராளிகளுக்கு வீரவணக்கம்
இந்த வெற்றிகரமான அதிரடித் தாக்குதலின்போது,
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராளிகளான,
துரை என்ற மரியாம்பிள்ளை கிறிஸ்ரலோ,
அருணன் என்ற சிவசுப்பிரமணியம் ரகுராஜன்,
பண்டிதர் என்ற இரத்தினசபாபதி வேணுகோபால்,
ராஜ்மோகன் என்ற அழகக்கோன் யூட் ராஜ்குமார்,
ஆகியோர் வீரச்சாவினைத் தழுவிக்கொண்டார்கள் என்பதைப் பதிவு செய்து,
அவர்களுக்கு எனது வீரவணக்கத்தைச் செலுத்தி,
அவர்களின் உயிர்த்தியாகம், அந்தக் காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் நிலவிய கடுமையான இராணுவ மோதல்களின் தீவிரத்தையும், நிலப்பரப்புக் கட்டுப்பாட்டிற்காக நடைபெற்ற போராட்டத்தின் விலையையும் நினைவூட்டுகிறது என்பதைத் தெரிவிக்கின்றேன்.
சுவாமி சங்கரானந்தா🙏

வாசகர் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…