தமிழ் இணையச் சஞ்சிகைவரலாறு · அரசியல் · உலகப் பார்வை

ஈழ மண்ணின் சுவடுகள்

வரலாற்றைப் பதிவு செய்வோம் · ஆதாரங்களைப் பாதுகாப்போம்

விளம்பரம்

ஈழப்போராட்ட வரலாறு · ஆசிரியர் கட்டுரை

தாஸின் படுகொலையும் சிறிசபாரத்தினத்திற்கான தண்டனையும்

1986 ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலை இயக்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் வரலாற்றுப் பின்னணி

முகவுரை: தமிழீழ விடுதலை இயக்கத்தின் வளர்ச்சியும் உள்முரண்பாடுகளும்

தமிழீழ விடுதலை இயக்கம் என்ற TELO அமைப்பிற்கு 1983 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தால் உத்தரப் பிரதேசத்தில் பயிற்சி கொடுக்கப்பட்டது.

அதில் 20 அல்லது 23 முக்கிய போராளிகளான சிறிசபாரத்தினம், தாஸ், பொபி, குரு, சேனாதி, மீசோராம், செல்வம், சுபாஸ், சுதன், ரமேஸ், சிவபெருமான், பாலையா, மதி, செட்டி, காந்தி, சுகி, புரூஸ், ஞானி, விச்சு, றிச்சி மாஸ்டர் உட்பட மேலும் சிலரது தலைமையின் கீழ் பல நூற்றுக்கணக்கான போராளிகள் பயிற்சியை முடித்துக்கொண்டனர்.

அந்த உத்தரப் பிரதேசத்தில் பயிற்சி முடித்தவர்கள் அனைவரும் வெளியே வந்த பின்னரும் அவர்களின் குழுத் தலைவர்களுக்கே விசுவாசமாக இயங்கினர்.

அது, நான் பெரியவனா? நீ பெரியவனா? என்ற நிலைமையை ஏற்படுத்தியது.

விளம்பரம்

அந்த வகையில், யார் பெரியவர் என்ற தாஸ் குழுவுக்கும் பொபி குழுவுக்கும் ஏற்பட்ட முரண்பாடுகள், ஆயுதம் எதுவுமின்றி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த சுகியைப் பார்க்க வந்த உடுப்பிட்டியைச் சேர்ந்த தாஸையும் அவரது குழுவையும் 1986 ஆம் ஆண்டு சுட்டுப் படுகொலை செய்ய வைத்தது.

முதன்முதலாக மக்கள் முன்னிலையில் நடந்த இந்த மிலேச்சத்தனமான சகோதரப் படுகொலையில் வைத்தியர்கள், தாதிகள் உட்படச் சில பொதுமக்களும் உயிரிழந்தார்கள்.

இதுவும் ஒரு காரணமாகி, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு டெலோ அமைப்பின் மீது நடவடிக்கை எடுக்கும் அவசரத் தேவையையும் ஏற்படுத்தியிருந்தது.

முன்னுரை: டெலோ இயக்கம் ஏன் தடை செய்யப்பட்டது?

தமிழீழ ஆயுதப் போர் வரலாற்றில் தம்மை முதன்முதலில் தோன்றிய இயக்கம் என அறிவித்துப் பெருமை கொண்ட தமிழீழ விடுதலை இயக்கம், தனது தான்தோன்றித்தனமான மக்கள் விரோதச் செயற்பாட்டால் தமிழீழ விடுதலைப் புலிகளால் 1986 ஆம் ஆண்டு தமிழீழ மண்ணில் இயங்கத் தடை விதிக்கப்பட்ட முதல் இயக்கமாக இருந்தது.

என்றாலும், 2001 ஆம் ஆண்டு இந்தத் தமிழீழ விடுதலை இயக்கத்திற்கு, அதன் பின்னர் தடை செய்யப்பட்ட EPRLF போன்ற இயக்கங்களுடனும் மற்றைய அரசியல் கட்சிகளுடனும் இணைந்து அரசியல் செய்யும் அனுமதி தமிழீழ விடுதலைப் புலிகளால் வழங்கப்பட்டது.

ஆனால், ஏன் இந்த டெலோ இயக்கத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுத் தடை செய்யப்பட்டது என்பதை வரலாற்றை அறியாதவர்கள் அறிந்துகொள்ளப் பதிவாக்குகின்றேன்.

1. நடந்தது என்ன? தாஸ்–பொபி முரண்பாட்டின் பின்னணி

தாஸ் - மேம்படுத்தப்பட்ட படம்
மேம்படுத்தப்பட்ட படம்

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறிசபாரத்தினம், தமிழ்நாட்டிலிருந்து 1985 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் இந்திய அரசு கொடுத்த பெருந்தொகையான ஆயுதங்களுடன் வந்து, யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது சொந்த ஊரான கல்வியங்காட்டில் முகாமிட்டுத் தங்கியிருந்தார்.

அதே கல்வியங்காட்டில் பிறந்து, அந்த டெலோ அமைப்பின் முக்கிய உறுப்பினராக இருந்த பொபி, அந்தப் பகுதியில் செல்வாக்கு மிக்கவராக இருந்தார்.

ஆனாலும், டெலோ அமைப்பின் தலைவரான சிறிசபாரத்தினம் மற்றும் நான் மேலே செல்வாக்கு மிக்கவர் எனக் குறிப்பிட்ட பொபி என்ற இருவரையும்விட, அந்த இயக்கத்திலும் சரி, மக்கள் மத்தியிலும் சரி, அதிக செல்வாக்கு மிக்கவராக வடமராட்சியைச் சேர்ந்த தாஸும் அவரது குழுவும் இருந்ததனால், பொபிக்கும் தாஸுக்கும் பலத்த முரண்பாடு இருந்தது.

இதனைச் சரிசெய்ய முடியாத சிறிசபாரத்தினம், தாஸைக் கொல்வதற்கான உத்தரவைப் பொபியிடம் தெரிவித்திருந்தார்.

நேரடியாகத் தாஸுடன் மோத முடியாத பொபியும் அவரது குழுவும் தாஸைக் கொல்வதற்குத் தருணம் பார்த்துக் காத்திருந்தனர்.

2. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தாஸ் படுகொலை

அந்த நேரத்தில் டெலோ இயக்கத்தின் மற்றுமொரு முக்கியஸ்தரான சுகியை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பார்வையிடுவதற்காக, 1986 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11 ஆம் திகதி ஆயுதம் எதுவுமின்றி வந்த தாஸையும் அவரது நான்கு சகாக்களையும், வைத்தியசாலைக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த பொபி குழு சுட்டுக் கொன்றது.

அத்துடன், அந்த வைத்தியசாலைக்கு மருத்துவச் சிகிச்சைக்காக வந்திருந்த நீதவான் கிருபாகரனையும் அங்கு பணியாற்றிய தாதி ஒருவரையும் கொன்று, மேலும் சில பொதுமக்களைக் காயப்படுத்தியிருந்தது.

அந்தக் காலத்தில் சிங்கள இராணுவம்கூட வைத்தியசாலைக்குள் நுழைந்து எந்தத் தமிழரையும் சுட்டுக் கொல்லாதபோது, ஈழப்போராட்ட வரலாற்றில் மறக்க முடியாத வடுவாக இந்தப் படுபாதகச் செயலை, அந்தக் கண்மூடித்தனமான துப்பாக்கிப் பிரயோகத்தை, அந்தச் சகோதரப் படுகொலையை எந்தவிதத் தயக்கமுமின்றி நடத்தி, ஈழப்போர் வரலாற்றில் இந்திய இராணுவத்திற்கு முன்னதாக வைத்தியசாலைக்குள் சென்று தமிழர்களைப் படுகொலை செய்த முதல் இயக்கம் எனவும் தமிழீழ விடுதலை இயக்கம் தன்னைப் பதிவு செய்துகொண்டது.

3. தாஸ் படுகொலைக்கு எதிரான மக்கள் பேரணியும் துப்பாக்கிச் சூடும்

இதன் காரணமாக, டெலோ அமைப்பின் அந்தத் தாக்குதலைக் கண்டித்தும், கொல்லப்பட்ட தாஸினதும் அவருடன் மரணித்த மற்றவர்களினதும் உடல்களைக் கேட்டும் கல்வியங்காடு முகாம் நோக்கி வந்த மக்கள் பேரணி மீதும், மனச்சாட்சிக்குச் சிறிதும் அஞ்சாமல் துப்பாக்கிப் பிரயோகம் செய்து, ஆண், பெண் உட்பட இரு தமிழ் மக்களை அவ்வியக்கம் கொன்றது.

1983 ஆம் ஆண்டு ஜூலைக் கலவரத்தின் பின்னர், யார் எவர் என்று இல்லாமல் சமூகவிரோதிகள் உட்படப் பலரை டெலோ அமைப்பு உள்வாங்கிக்கொண்டதனாலும், 1985 ஆம் ஆண்டு இந்திய அரசு கொடுத்த அதிகளவிலான ஆயுத பலத்தினாலும், மனிதாபிமானமின்றி மக்களை மதிக்காமல் சண்டித்தனப் போக்கில் தான்தோன்றித்தனமாக அந்த இயக்கத்தின் உறுப்பினர்கள் செயற்பட்டார்கள்.

இதன் காரணமாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் மருதனார்மடம், மானிப்பாய் போன்ற பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் டெலோ இயக்க உறுப்பினர்களுக்கு இடையே சிறு சிறு முறுகல்கள் ஏற்பட்டிருந்தன.

ஆனால், அவை அனைத்தும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறுப்பாளர்களின் நடவடிக்கைகளினால், அந்த இயக்க உறுப்பினர்கள் அத்துமீறாதவாறு கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டிருந்தன.

4. டெலோவின் உள்முரண்பாடுகளும் புலிகளுடனான உறவும்

ஆரம்பகாலம் முதல் தங்கத்துரை தலைமையிலான தமிழீழ விடுதலை இயக்கம் தொடங்கி, சிறிசபாரத்தினம் தலைமையிலான தமிழீழ விடுதலை இயக்கம் வரை, டெலோ இயக்கத்துடன் சுமூகமான உறவினை விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வே. பிரபாகரனும் அவரது தளபதிகளும் பேணி நடந்தாலும், புலிகள் மீதான வெறுப்பை டெலோ அமைப்பின் தலைமை தனது உறுப்பினர்களுக்கு விதைத்துக்கொண்டே வந்தது.

அந்த வகையில், டெலோ அமைப்பிற்குள் தாஸ்–பொபி முரண்பாடு வருவதற்கு முன்னரே, அந்த அமைப்பின் தலைவர் சிறிசபாரத்தினத்துடன் முரண்பட்டுக்கொண்ட அவருக்கு அடுத்த நிலையில் இருந்த சுதனும், தாஸுக்கு முன்னர் அவ்வியக்கத்தின் இராணுவப் பொறுப்பாளராக இருந்த ரமேசும், புலிகளின் உதவியுடன் சிறிசபாரத்தினத்தைக் கொலை செய்ய முயன்றார்கள் என்ற பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்த அந்த அமைப்பு, அவர்களைக் கொல்லும் நோக்கோடு கடத்தி வைத்திருந்தது.

ஆனாலும், இந்திய அரசின் தலையீட்டினால் அவர்கள் அந்த டெலோ அமைப்பால் கொல்லப்படாமல் காப்பாற்றப்பட்டனர்.

அதாவது, அந்த டெலோ இயக்கம் தனது இயக்கத்தின் உள்பகையைப் புலி எதிர்ப்பாக்கி, அந்தப் புலி வெறுப்பைத் தனது டெலோ இயக்க உறுப்பினர்களுக்குப் போதித்து வந்தது என்பதோடு, அதனையும் அந்த அமைப்பின் கொள்கைகளில் ஒன்றாக்கி வைத்திருந்தது.

என்றாலும், தாஸ் இருக்கும் வரை புலிகளுக்கும் டெலோவிற்குமான உறவு சுமூகமானதாகவே இருந்தது என்பதே யதார்த்தமாகும்.

5. தாஸ் படுகொலைக்குப் பின்னர் டெலோ முன்வைத்த குற்றச்சாட்டுகள்

தாஸ் படுகொலையின் பின்னர், அந்தத் தமிழீழ விடுதலை இயக்கம் தாம் தாஸைக் கொன்ற காரணத்தை நியாயப்படுத்த, தாஸ் மீதும் அவரது குழு மீதும் சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆலாலசுந்தரம் மற்றும் தர்மலிங்கம் போன்றவர்களின் படுகொலை, அத்துடன் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கோயில்கள் உட்படப் பல கொள்ளைச் சம்பவங்களின் தொடர்புகள் என்பனவற்றைத் தாஸும் அவரது குழுவும் செய்தார்கள் என்ற குற்றச்சாட்டுகள் நம்ப முடியாதவையாக இருக்க, அது விடுதலைப் புலிகளுக்கு மட்டுமல்லாது யாழ்ப்பாண மக்களுக்கும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் மீது நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியிருந்தது.

அத்துடன், அப்பாவித் தமிழ் மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு கொலை செய்த முதல் இயக்கம் என்ற வகையிலும் அவ்வியக்கம் யாழ்ப்பாணத் தமிழ் மக்களின் தார்மீக ஆதரவையும் இழந்திருந்தது.

6. கடலில் உயிரிழந்த போராளிகளின் நினைவேந்தலும் இரு இயக்கங்களுக்கிடையிலான பதற்றமும்

இதனால், டெலோ இயக்கத்தினால் தாஸும் அவரது குழுவினரும் படுகொலை செய்யப்பட்ட 43 ஆம் நாளில், அதாவது 1986 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி, இந்தியாவிலிருந்து வந்த டெலோ இயக்க உறுப்பினர்கள் 11 பேர் சிங்களக் கடற்படையால் கொல்லப்பட்டபோதும், தமிழ் மக்கள் எவரும் எழுச்சிபூர்வமாக நினைவுகூரவில்லை.

அந்த நிகழ்வு நடந்து நான்கு நாட்களின் பின்னர், இந்தியாவிலிருந்து வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் படகு 1986 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி சிங்களக் கடற்படையால் தாக்குதலுக்கு உள்ளாகி, அதில் பயணித்த பத்து உறுப்பினர்கள் வீரமரணம் அடைந்தபோது, அந்த வீரமரணத்தைத் தமிழ் மக்கள் உணர்வுபூர்வமாக நினைவுகூர்ந்தனர்.

இதனால் விசனமடைந்து டெலோ இயக்கத் தலைமை ஆத்திரத்தில் இருக்க, அந்தத் தலைமையின் விசனம் டெலோ அமைப்பின் உறுப்பினர்களுக்குப் புலிகள் மீதான ஆத்திரத்தை மேலும் அளவிற்கதிகமாக்கியது.

டெலோ தலைமையின் புலிகள் மீதான விசனத்தால், அந்த அமைப்பின் உறுப்பினர்களுக்கு ஏற்பட்ட அளவிற்கதிகமான ஆத்திரம், 1986 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் திகதி அரியாலைப் பகுதியில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த புலிகள் உறுப்பினர்களோடு வலிந்து தர்க்கம் செய்து வம்பிற்கு இழுக்க வைத்தது.

அந்த வாக்குவாதம் மேலும் அதிகமாகி, டெலோ உறுப்பினர்கள் திட்டமிட்டபடி புலிகள் இயக்க உறுப்பினர்களை நேரடியாகத் தாக்கும் அளவிற்கு அது சென்றது.

7. அரியாலைச் சம்பவமும் அதன் தொடர்ச்சியும்

இந்தச் செய்தி, டெலோ குழுவினால் தாக்குதலுக்குள்ளான புலிகள் உறுப்பினர்களால் தொலைத்தொடர்புச் சாதனம் மூலம் அன்றைய புலிகளின் நடா வீட்டின் பொறுப்பாளரான நடாவிற்கு அறிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக உடனடியாகச் சம்பவ இடம் நோக்கி விரைந்த நடா, புலிகளைத் தாக்கிய டெலோ உறுப்பினர்கள் துவிச்சக்கர வண்டியில் வந்துகொண்டிருப்பதைக் கண்டு, அவர்களை வழிமறித்துப் பிடித்து, அடித்துக் கண்டித்து எச்சரித்து அனுப்பினார்.

இதன் காரணமாக மேலும் சினம் கொண்ட டெலோ அமைப்பின் தலைமையும் அதன் முக்கிய உறுப்பினர்களும், அரியாலையில் நடந்த அந்தப் பிரச்சினையைத் தங்களின் கோட்டை என்று தாமே கூறிக்கொண்ட, தமது இயக்கத் தலைவர் சிறிசபாரத்தினத்தின் ஊரான கல்வியங்காட்டுக்குள் இழுத்துவந்து, தங்களின் வலிமையைச் சிங்களக் கடற்படையால் 1986 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் திகதி கொல்லப்பட்ட தம் இயக்க உறுப்பினர்களை நினைவுகூராத தமிழ் மக்களுக்குக் காட்டவும், அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குத் தமது ஆள்பலத்தையும் ஆயுதபலத்தையும் வைத்துப் பாடம் புகட்டவும் எண்ணினார்கள்.

இதன் காரணமாகப் புலிகளின் முக்கிய உறுப்பினர்களில் எவரையாவது கடத்த நினைத்த அவர்களுக்கு, அதே கல்வியங்காட்டைச் சேர்ந்த அப்பகுதிப் பொறுப்பாளரான சராவைக் குறிவைத்துக் கடத்துவது இலகுவானதாக இருக்கவில்லை.

8. யார் இந்தச் சரா?

சரா - மேம்படுத்தப்பட்ட படம்
மேம்படுத்தப்பட்ட படம்

சரா, விடுதலைப் புலிகளில் இணைவதற்காக ஜெர்மனியிலிருந்து வந்து, தன்னை விடுதலைப் புலிகளுடன் இணைத்துக்கொண்டு, புலிகளின் மூன்றாம் பயிற்சிப் பாசறையில் பயிற்சி பெற்றவர் ஆவார்.

இவர் இயல்பில் துணிச்சல் மிக்கவராகவும், டெலோ தமது கோட்டை என்று அறைகூவிய கல்வியங்காட்டு ஊர்மக்களினால் நேசிக்கப்பட்டவராகவும் இருந்தார்.

இதுவும் அவரைக் கடத்துவது இலகுவானதாக இல்லாமைக்கான ஒரு காரணமாக இருந்தது.

இதனால் சினம்கொண்டு அலைந்து திரிந்த டெலோ இயக்கத்தினருக்கு, கட்டைப்பிராய் என்னுமிடத்தில் 1986 ஆம் ஆண்டு ஏப்ரல் 27 ஆம் திகதி கடலில் மரணித்த விடுதலைப் புலிகளை நினைவுகூர்ந்து அப்பகுதி மக்களால் கட்டப்பட்ட பதாகைகள் கண்ணில் பட, அவற்றை அந்த டெலோ உறுப்பினர்கள் அறுத்தெறிந்தனர்.

அதனைத் தடுக்கப் போன பொதுமக்களும் அவர்களால் தாக்கப்பட்டனர்.

இந்தத் தகவல் புலிகள் இயக்கத்தின் கோப்பாய்ப் பொறுப்பாளரான முரளிக்கு அறிவிக்கப்பட, சம்பவ இடத்திற்கு வந்த அவரைப் புலிகள் உறுப்பினரைக் கடத்த எதிர்பார்த்துக் காத்திருந்த டெலோ இயக்கத்தினர், அரியாலைச் சம்பவம் நடந்த அதே நாளில் கடத்தினார்கள்.

9. யார் இந்தக் கோப்பாய் முரளி?

கோப்பாய் முரளி - மேம்படுத்தப்பட்ட படம்
மேம்படுத்தப்பட்ட படம்

1986 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி கட்டைப்பிராயில் வைத்து டெலோ இயக்கத்தினால் கடத்தப்பட்ட கோப்பாய்ப் பிரதேசப் பொறுப்பாளரான முரளி என்ற வேலுப்பிள்ளை ரட்ணசிங்கம் அவர்கள், 1958 ஆம் ஆண்டு ஆவரங்கால் என்ற ஊரில் உள்ள புத்தூர்ப் பகுதியில் பிறந்தவராவார்.

அவர் லண்டனில் இருந்தபோது, போராட்டம் உச்சமடைந்த காலத்தில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் அறிமுகத்தினால் லண்டனிலிருந்து வந்து, 1983 ஆம் ஆண்டு புலிகள் அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டு, புலிகளின் முதலாவது இந்தியப் பயிற்சிப் பாசறையில் விக்டர் என்ற மருசலீன் கியூஸ்லஸின் தலைமையில் பயிற்சி பெற்றவராவார்.

அத்துடன், 1985 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் திகதியன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரான பண்டிதரது அச்சுவேலி முகாம் மீதான சிங்கள இராணுவத்தின் தாக்குதலின்போது, அருகாமையில் இருந்த இவரது வீடும் சுற்றிவளைக்க வந்த இலங்கை இராணுவத்தினால் முற்றாகச் சேதத்திற்குள்ளானது.

இதன் பின்னர், இவரது சகோதரரான தம்பி என்ற வேலுப்பிள்ளை இராசகோபால் அவர்களும் தன்னை விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைத்துக்கொண்டு, பயிற்சிக்காகத் தமிழகம் செல்கையில், தமிழீழக் கடற்பரப்பில் வைத்து 1985 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி சிறிலங்கா கடற்படையினரால், ஈழப்போர் வரலாற்றில் முதன்முதலில் தாக்குதலுக்குள்ளான படகில் பயணித்து வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

அந்த வகையில், இரு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் இளைய சகோதரர் வீரமரணம் அடைந்து ஒரு வருட காலத்தில், அவரது மூத்த சகோதரரான கோப்பாய்ப் பிரதேசப் பொறுப்பாளர் முரளி தமிழீழ விடுதலை இயக்கத்தினால் கடத்தப்பட்டார் என்ற செய்தி, தட்டாதெருச் சந்திக்கு அண்மையில் உள்ள புலிகளின் தலைமை முகாமில் இருந்த யாழ். மாவட்டத் தளபதி கிட்டு என்ற சதாசிவம் கிருஷ்ணகுமாரின் காதுகளை எட்டுவதற்கு முன்னர், அந்த முகாமிற்கு வந்த புலிகளின் மூத்த உறுப்பினரும் முள்ளிவாய்க்காலின் முடிவுரை வரை நின்ற மூத்த போராளியுமான பசீர் காக்கா அவர்கள், கடலில் மரணித்த வீரவேங்கைகளின் புகைப்படங்களை வீரவணக்கத்திற்காக வைக்க வேண்டியிருந்ததனால், சந்துரு என்ற போராளியை அழைத்துக்கொண்டு, றெமிங்டனின் பொறுப்பில் புலிகளின் புகைப்படப் பிரிவு இருந்த இருபாலைக்கு, தமிழீழ விடுதலை இயக்கத்தின் கோட்டையான கல்வியங்காட்டில் உள்ள பழம் வீதி ஊடாகப் பயணித்தார்.

10. பசீர் காக்கா டெலோ இயக்கத்தால் கடத்தப்பட்ட சம்பவம்

மோட்டார் சைக்கிளில் சென்ற பசீர் காக்காவையும் சந்துருவையும், கல்வியங்காடு ஞானபாஸ்கரோதயா சனசமூக நிலையத்திற்கு அப்பால் நித்தியின் தலைமையில் வழிமறித்த டெலோ உறுப்பினர்கள், அரியாலையில் நடந்த சம்பவம் பற்றிப் பேச வேண்டும் எனப் பலவந்தமாக அழைத்தனர்.

அவர்கள் அழைத்த தொனியில் நிலைமையை ஊகித்துக்கொண்ட மூத்த போராளியான பசீர் காக்கா, இளம் போராளியான சந்துரு அச்சகத்திற்குப் போக வேண்டும் என்ற அவசியத்தை டெலோ உறுப்பினர்களுக்குத் தெரிவித்து, அவர்களின் பதிலுக்குக் காத்திருக்காமல் சாதுரியமாகச் சந்துருவை அனுப்பிவைத்தார்.

தான் அந்தத் தமிழீழ விடுதலை இயக்கத்திடம் கைதானதைத் தளபதி கிட்டுவிடம் தெரிவிக்கத் தன்னை அனுப்பினார் என்பதைச் சந்துரு உணர்ந்துகொண்டதனால், சந்துரு என்ற அந்தப் போராளி, புலிகளின் புகைப்படப் பிரிவு இருந்த இருபாலைக்குச் செல்லாமல் இராசபாதை வழியாகத் தலைமை முகாமுக்கு விரைந்தார்.

பசீர் காக்கா டெலோ அமைப்பால் தடுத்து வைக்கப்பட்ட செய்தியைச் சொல்லச் சென்றபோது, கோப்பாய் முரளியை டெலோ அமைப்பு கடத்திய செய்தி அறிந்து, கொதிநிலையில் மாவட்டத் தளபதி கிட்டு அவர்களும் அந்தத் தலைமை முகாமில் இருந்த போராளிகளும் இருப்பதை உணர்ந்துகொண்டார்.

என்றாலும், அவர் தளபதி கிட்டுவிற்குப் பசீர் காக்காவும் டெலோ அமைப்பால் பலவந்தமாகத் தடுக்கப்பட்டார் என்ற செய்தியையும் தெரிவித்தார்.

இதனால் கிட்டு என்ற சதாசிவம் கிருஷ்ணகுமார் அதிசினம் கொண்டார்.

11. யார் இந்தப் பசீர் காக்கா?

பசீர் காக்கா - மேம்படுத்தப்பட்ட படம்
மேம்படுத்தப்பட்ட படம்

தளபதி கிட்டு அவர்கள், பசீர் காக்கா டெலோ அமைப்பால் பலவந்தமாகக் கடத்தப்பட்டார் என்ற சந்துருவின் தகவலைக் கேட்டு அதிசினம் கொண்டார் என்பதற்குப் பல காரணங்கள் இருந்தன.

ஈழப்போர் வரலாற்றில் பசீர் காக்கா வெறும் பெயர் அல்ல; முழு மனித சரித்திரம்.

1955 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி அரியாலையின் நாயன்மார்கட்டுப் பகுதியில் பிறந்த பசீர் காக்கா என்ற மனோகர் முத்துக்குமார் அவர்கள், 1981 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்போடு தன்னை இணைத்துக்கொண்டார்.

தான் இணைந்துகொண்ட காலத்தில் விடுதலைப் புலிகளின் முதல் தளபதியான ஆசீர் என்ற லூக்காஸ் சார்ள்ஸ் அன்ரனியின் தலைமையில் பல சம்பவங்களில் பங்குகொண்டாலும், இவரது முதல் தாக்குதல் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திலேயே ஆரம்பமானது.

இத்தாக்குதலில் சீலன் காயமடைந்து, பல நாட்களின் பின்னர் நடந்த சுற்றிவளைப்பில் அவர் வீரமரணம் எய்த, அதற்குப் பழிவாங்கலாகச் செல்லக்கிளி அம்மான் தலைமையில் மேதகு தேசியத் தலைவர் உட்படப் புலிகளின் மூத்த தளபதிகள் களமாடிய வரலாற்றுப் புகழ்மிக்க திருநெல்வேலிச் சமரில் தலைவருடன் உறுதியாக நின்ற 18 பேரில் இவரும் ஒருவராவார்.

அத்துடன், தளபதி கிட்டுவின் தலைமையில் நடந்த உமையாள் புரச்சமரிலும் உறுதியுடன் நின்ற வேங்கை என்பதோடு, ஈழமண்ணில் தமிழர்களுக்கு எட்டாமலே போய்விடுமோ எனத் தமிழர்களாகிய நாங்கள் இன்றுவரை ஏங்கும் அம்பாறை மாவட்டம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் முதல் மாவட்டத் தளபதியாகத் தேசியத் தலைவரால் அவரது சிறப்புத் தகுதி அறிந்து நியமிக்கப்பட்ட இந்தப் பசீர் காக்கா, ஈழப்போர் வரலாற்றில் நடைபெற்ற முதல் சிறையுடைப்பை உறுதியுடன் செய்தவரும் ஆவார் என்பதனைப் பதிவிடுகின்றேன்.

தேசியத் தலைவருடன் ஆரம்பகாலத்திலிருந்து இணைந்து ஆயுதப் போரில் பல சாகசங்களை வரலாறாக எழுதிய பசீர் காக்காவின் முழுமையான ஆயுதப் போராட்டப் பங்களிப்பை, அவர் முள்ளிவாய்க்காலின் துயர முடிவுவரை சென்று இன்னும் தாயகத்தில் வாழ்வதனால், மரியாதைக்குரிய அவரின் இன்றைய நிலை அறிந்து அதிகம் பதிவிடாமல் கடக்கின்றேன்.

ஈழநாதம் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த அவர், விடுதலைப் போராட்டம் பற்றிய விழிப்புணர்வை ஈழமக்களுக்கும் ஏற்படுத்தினார் என்பதை இத்தோடு கூறி, அவரைப் பற்றிய சிறு வரலாற்றுக் குறிப்பை அறியாத பலர் அறியப் பதிவிட்டிருக்கின்றேன்.

அத்துடன், இத்தகைய புகழ்மிக்க புலிகளின் மூத்த உறுப்பினரான பசீர் காக்காவை டெலோ அமைப்பு கடத்தியது மட்டும் தளபதி கிட்டு அவர்களின் சினத்தைத் தூண்டவில்லை.

மாறாக, விடுதலைப் புலிகள் அமைப்பில் மேதகு தேசியத் தலைவரது திருமணத்தின் பின் நடந்த முதல் திருமணமான பசீர் காக்காவின் திருமண ஏற்பாடுகளை மேதகு பிரபாகரனிடம் பேசி அனுமதி வாங்கியவரும் இந்தத் தளபதி கிட்டு அவர்களே.

பசீர் காக்கா அவர்களது இந்தத் திருமணம், அவர் டெலோவால் கடத்தப்படுவதற்குச் சில நாட்களுக்கு முன்னர், அதாவது 1986 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி நடைபெற்றபோது, அந்தத் திருமணத்தில் ஒரு சாட்சியாகக் கையொப்பமிட்டவரும் தளபதி கிட்டு ஆவார்.

இதற்குச் சில மாதங்களுக்கு முன்னர், டெலோ அமைப்பினால் புலிகளின் உறுப்பினர்களான ஐடியா வாசு மற்றும் சண்முகம் கடத்தப்பட்டபோது, அப்போதைய யாழ். மாவட்ட அரசியல் பொறுப்பாளரான திலீபனிடம் டெலோவுடன் பேசி விடுவிக்குமாறு உத்தரவிட்ட தளபதி கிட்டு, இம்முறை கோப்பாய் முரளி மற்றும் பசீர் காக்கா அவர்களது தனிப்பட்ட நிலை அறிந்து,

“அரை மணி நேரத்திற்குள் பசீர் காக்கா, முரளி இருவரையும் விடுதலை செய்யாவிட்டால் நேரடியாக மோதுவோம்!”

என்ற முடிவோடு அந்த எச்சரிக்கைச் செய்தியைக் கல்வியங்காட்டு முகாமில் உள்ள டெலோ தலைமை அறிந்துகொள்ள அனுப்பினார் என்பதோடு, அந்தப் பதற்றமான சூழலிலும் தொடர்புகொள்பவர் பொருத்தமான ஆளாக இருக்குமாறு பார்த்துக்கொண்டார்.

12. கட்டைப்பிராயில் தொடங்கிய ஆயுத மோதல்

கட்டைப்பிராய் - மேம்படுத்தப்பட்ட படம்
மேம்படுத்தப்பட்ட படம்

இதன் பின்னர், தளபதி கிட்டுவின் உத்தரவில் கட்டைப்பிராயில் உள்ள டெலோ முகாம் நோக்கி விடுதலைப் புலிகளின் படையணி, ஒரு பிக்கப் வாகனம் மற்றும் வான் ஒன்றின் மூலம் மூன்றாம் கட்டை என்ற கட்டைப்பிராய்ச் சந்தியைச் சென்றடைந்தது.

மூன்றாம் கட்டை என்ற கட்டைப்பிராய்ச் சந்தியைப் புலிகளின் படையணி சென்றடைந்த வேளையில், யாராவது ஆயுதங்களுடன் வந்தால் சுடுமாறு டெலோ இயக்க உறுப்பினர்களுக்கு அந்த டெலோ இயக்கப் பொறுப்பாளர்களினால் இடப்பட்ட கட்டளைக்கு இணங்க, கட்டைப்பிராய்ச் சந்தியைச் சென்றடைந்த புலிகளின் படையணியைக் கண்டதும் ஒரு டெலோ உறுப்பினரது துப்பாக்கி முழங்கியது.

இதனைத் தொடர்ந்து புலிகளின் துப்பாக்கிகளும் சடசடக்கத் தொடங்கின.

இதனைத் தொடர்ந்து, டெலோ அமைப்பால் பசீர் காக்கா தடுத்து வைக்கப்பட்ட முகாமில்,

“அவங்கள் வந்திட்டாங்கள்!”

என்று கூறியபடி டெலோ அமைப்பைச் சேர்ந்த ஒருவர் செய்தி கொண்டுவந்தார்.

இந்தச் செய்தியைக் கேட்டு அந்த முகாம் சற்றுப் பதற்றமானதோடு, பிறிதொரு அறையிலிருந்து கோப்பாய் முரளியும் இழுத்து வரப்பட்டார்.

பசீர் காக்காவிற்கும் கோப்பாய் முரளிக்கும் ஒருவர் டெலோவால் பிடிபட்டது மற்றவருக்குத் தெரியாததனால், பசீர் காக்காவும் கோப்பாய் முரளியும் ஒருவரையொருவர் பார்த்து அதிர்ச்சி கொண்டனர்.

அந்த அதிர்ச்சி வெகுநேரம் தொடரும் முன்னரே டெலோ உறுப்பினர்கள், தமது பொறுப்பாளர்களான நித்தி மற்றும் கமலின் உத்தரவில் இருவரது கண்களையும் கைகளையும் கட்டினர்.

சற்று நேரத்தில் முகாமிற்குச் சமீபமாகத் துப்பாக்கி வேட்டுச் சத்தங்கள் அதிக அளவில் கேட்கத் தொடங்கின.

“இவங்கள் ரெண்டு பேரையும் போட்டால் சரிவரும்!”

என்று ஒரு டெலோ உறுப்பினர் கூற,

வேறொருவர்,

“வேண்டாம்! இவங்களை வச்சுத் தப்புவோம்!”

என்றார்.

அதனை மற்றவர்களும் ஏற்றுக்கொண்டனர்.

பருத்தித்துறை இராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்த விடுதலைப் புலிகளின் தாக்குதல் நடவடிக்கைக்காக, மன்னார் மற்றும் வன்னி மாவட்டங்களில் இருந்தும் அதிகளவிலான புலிகள் உறுப்பினர்கள் வந்திருந்தமையால், அவர்களும் டெலோவின் பலம்பொருந்திய கல்வியங்காட்டைச் சுற்றிவளைத்தனர்.

பிழையான நேரத்தில் பிழையாக எடுத்த டெலோவின் புலிகளுக்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கை அவர்களுக்குச் சதியானது.

கல்வியங்காட்டுப் பிரதேசத்தில் உள்ள டெலோ இயக்க முகாம்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் குறிவைக்கப்பட்டு முற்றுகைக்கு உள்ளான வேளையில், யாழ். மாவட்டத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் ஏனைய படையணிகளுக்கும் தாக்குதல் செய்தி அனுப்பப்பட்டது.

13. வட்டுக்கோட்டையில் மூத்த போராளி லிங்கம் கொல்லப்பட்ட சம்பவம்

இதனால், கல்வியங்காடு டெலோ உறுப்பினர்களுக்கு வரும் உதவிகளைத் தடுக்கும் நோக்கத்தோடு ஆயுதங்களைக் களையும் நடவடிக்கையில், வட்டுக்கோட்டையில் உள்ள டெலோவின் முகாமிற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரான லிங்கம் அவர்களின் தலைமையில் மதன் வீடு மற்றும் குப்பு வீடு உள்ளடங்கிய புலிகளின் அணி ஒன்று சென்றிருந்தது.

மூத்த போராளி லிங்கம் அவர்கள் சென்றிருந்த அந்த டெலோ இயக்கத்தின் வட்டுக்கோட்டை முகாமிற்கு வெளியே காவல் கடமையில் இருந்த டெலோ உறுப்பினரின் கையிலிருந்து முழங்கிய இயந்திரத் துப்பாக்கி, வாகனத்திலிருந்து இறங்கிய அந்த மூத்த போராளி லிங்கத்தின் முகத்தைச் சல்லடையாக்கியது.

தமது மூத்த போராளி லிங்கம் சாய்க்கப்பட்டதனால் அதிசினம் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளினால் உடனடியாக அந்த முகாமும், மேலும் வட்டுக்கோட்டை, மூளாய் போன்ற பகுதிகளில் இருந்த டெலோவின் பல முகாம்களும் தாக்கி அழிக்கப்பட்டன.

அதில் டெலோ அமைப்பின் முக்கிய உறுப்பினர்களான ஈழமன்னன், சங்கர்லால் உட்பட மேலும் பலர் கொல்லப்பட, சுழிபுரத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் வயிற்றில் காயமடைந்தார்.

வரலாற்றுப் புகழ்மிக்க திருநெல்வேலித் தாக்குதலில் மல்லாகத்திலிருந்து சைக்கிளில் பசீர் காக்காவுடன் வந்து அந்தத் தாக்குதலில் பங்குபற்றிய தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் லிங்கம், டெலோ இயக்கத்தால் கொல்லப்பட்டது என்பது சாதாரணமானது அல்ல.

14. யார் இந்த லிங்கம்?

லிங்கம் - மேம்படுத்தப்பட்ட படம்
மேம்படுத்தப்பட்ட படம்

1960 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி வல்வெட்டித்துறையில் பிறந்த சிங்காரவேல் செல்வகுமார் என்ற லிங்கம், கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளராகி, 1980 ஆம் ஆண்டு தனது 20 ஆவது வயதில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உதவியாளராகச் செயற்பட ஆரம்பித்தார்.

தன்னை முழுநேர உறுப்பினராக 1981 ஆம் ஆண்டு இணைத்துக்கொண்டு, அதே ஆண்டில் இராணுவப் பயிற்சியைப் பெற்றுக்கொண்டார்.

தான் இணைந்துகொண்ட காலத்தில் விடுதலைப் புலிகளின் முதல் தளபதியான ஆசீர் என்ற லூக்காஸ் சார்ள்ஸ் அன்ரனியின் தலைமையிலும், சார்ள்ஸ் அன்ரனி காயமடைந்திருந்த காலத்தில் அவருக்குப் பின்னர் தாக்குதல் தளபதியாக இருந்த சங்கர் சத்தியநாதன் தலைமையிலும், 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட வரலாற்றுப் புகழ்பெற்ற திருநெல்வேலித் தாக்குதலில் செல்லக்கிளி அம்மான் தலைமையிலும், அதன் பின்னர் தாக்குதல் தளபதியான சதாசிவம் கிருஷ்ணகுமார் என்ற கிட்டுவின் தலைமையிலும் நடத்தப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் பல்வேறுபட்ட தாக்குதல்களிலும் முக்கிய பங்கு வகித்தவராவார்.

அத்துடன், இந்திய ஆயுதப் படைகளால் உத்தரப் பிரதேசத்தில் பொன்னம்மான் தலைமையில் நடைபெற்ற பயிற்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து மூத்த போராளிகளான புலேந்தி அம்மான், விக்டர், கிட்டு, ராஜேஸ், கணேஸ், அருணா, சுப்பண்ணா, யோகன் பாதர், பொட்டு அம்மான் ஆகியோருடன் லிங்கமும் ஓர் அணித் தலைவராக இருந்து பயிற்சியை முடித்துக்கொண்டு தமிழ்நாடு வந்தார்.

1984 ஆம் ஆண்டு மதுரையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறுப்பாளராகக் கடமையாற்றிய அவர், தமிழக மக்களுடனும் நல்லுறவை வளர்த்துக்கொண்டார்.

ஆரம்பகாலங்களில் தேசியத் தலைவரின் உதவியாளராகவும் மெய்ப்பாதுகாவலராகவும் விளங்கிய லிங்கம் அவர்கள், தேசியத் தலைவரால் நேசிக்கப்பட்ட ஒருவருமாவார்.

1985 ஆம் ஆண்டின் இறுதியில் தளம் திரும்பிய லிங்கம் அவர்கள், சக போராளிகள் ஒவ்வொருவருடனும் சகஜமாகப் பழகினார்.

இயக்கம் இராணுவச் சீருடை அணியாத காலத்திலும் இராணுவச் சீருடைக்கு ஒத்த உடையணிந்து கம்பீரமாகவே காட்சியளிப்பார்.

கடமையில் கண்டிப்பானவரானாலும், அவர் எல்லோருடனும் பழகும் எளிமையான தன்மையினால் அவர் மீது மற்றைய இளம் போராளிகள் அனைவரும் பேரன்பு கொண்டிருந்தனர்.

இப்படியான மரியாதைக்குரிய மூத்த போராளி லிங்கம் அவர்கள், 1986 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி சங்கரத்தைச் சந்திக்கு அருகாமையில் உள்ள டெலோ முகாமின் வாயிலில் டெலோ இயக்கத்தினரால் கொல்லப்பட்டதனால், டெலோ இயக்கத் தலைவர் சிறிசபாரத்தினத்தைக் குறிவைத்துக் கல்வியங்காடு முற்றுகையைத் தமிழீழ விடுதலைப் புலிகள் மேலும் இறுக்கமாக்கினர்.

15. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் டெலோவின் ஆயுதக் களைவு நடவடிக்கை

யாழ்ப்பாண மாவட்டத்தில் கல்வியங்காடு முற்றுகையைத் தமிழீழ விடுதலைப் புலிகள் மேலும் இறுக்கமாக்கி, டெலோ இயக்கத் தலைமையைக் குறிவைத்து நடவடிக்கைகளை மேற்கொண்ட வேளையில், டெலோ இயக்கத்தின் மீதான ஆயுதக் களைவு நடவடிக்கையை வன்னிப் பெருநிலப்பரப்பு மற்றும் மன்னார் மாவட்டம், அத்துடன் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்கள் உட்படத் திருகோணமலை மாவட்டத்திலும் ஆரம்பித்திருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொக்கட்டிச்சோலையில் இருந்த டெலோ முகாம், மாவட்டத் தளபதியாக இருந்த குமரப்பாவின் ஒருங்கிணைப்பில் பொட்டு அம்மான் தலைமையில் தாக்கப்பட்டுச் சிலர் கொல்லப்பட்டார்கள்.

என்றாலும், அதிக எதிர்ப்புகளை டெலோ இயக்கம் கொடுக்காததனால், டெலோ இயக்க உறுப்பினர்களின் ஆயுதக் களைவின் பின்னர் அவர்களில் அதிகமானவர்கள் அவரவர் வீடுகளுக்கும், மேலும் சிலர் யாழ். மாவட்டத்திற்கும் செல்ல மட்டக்களப்பு மாவட்டப் புலிகளின் தலைமை அனுமதி அளித்திருந்தது.

திருகோணமலை மாவட்டத்தைப் பொறுத்த அளவில், அன்றைய மாவட்டத் தளபதிகளாக இருந்த புலேந்தி அம்மான் மற்றும் சந்தோசம் மாஸ்டர், அத்துடன் மூதூர் பிராந்தியத் தளபதியாக இருந்த மூத்த உறுப்பினர் கணேஸ் ஆகியோரினால் எந்தவித மோதல்களுமின்றி டெலோ உறுப்பினர்கள் ஆயுதக் களைவின் பின்னர் அவரவர் வீடுகளுக்கோ அல்லது அவர்களுக்குப் பாதுகாப்பான பிரதேசங்களுக்கோ செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

என்றாலும், மதி என்ற டெலோ இயக்க முக்கியஸ்தர் சரணடையாது தப்பியோட முயன்றபோது விடுதலைப் புலிகளால் மரணதண்டனைக்கு உள்ளாக்கப்பட்டார்.

வன்னிப் பெருநிலப்பரப்பின் முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் எட்டுப் போராளிகள் கொல்லப்பட்டாலும், தளபதிகளான ஜெயம், பசீலன் மற்றும் சுசீலனின் தலைமையில், அன்றைய வன்னி மாவட்டத் தளபதி மாத்தையாவின் ஒருங்கிணைப்பில் டெலோ இயக்கத்தின் ஆயுதக் களைவு நடவடிக்கையைத் தமிழீழ விடுதலைப் புலிகள் நிறைவேற்றினார்கள்.

16. கல்வியங்காடு முற்றுகையும் டெலோ உறுப்பினர்களின் சரணடைவும்

இது ஒருபுறம் நடக்க, யாழ்ப்பாண மாவட்டத்தில் கல்வியங்காடு பகுதியில் முற்றுகை இறுக்கமாகிக்கொண்டு செல்ல, வட்டுக்கோட்டை, மூளாய், சுழிபுரம் போன்ற பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மோதிக்கொண்ட டெலோ உறுப்பினர்கள் காரைநகர் நோக்கிப் பின்வாங்கினர்.

சன் என்ற மாயவன் போன்ற சில டெலோ உறுப்பினர்கள் தப்பிச் சென்றனர்.

இந்தத் தாக்குதல்கள் நடந்துகொண்டிருந்த வேளையில், திருநெல்வேலிச் சந்தைப் பகுதியில் வாகனத் தரிப்பிடத்திற்குக் காவலாக இருந்த டெலோ உறுப்பினர்கள் சிலரும் கொல்லப்பட்டார்கள் என்பது துரதிர்ஷ்டவசமானது.

என்றாலும், கல்வியங்காடு பகுதியில் நடந்த மோதலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அலிஸ்ரன் என்ற போராளி காயமடைந்து, அதீத இரத்தப் பெருக்கால் மறுநாள் காலை மரணமானார் என்பதும் துரதிர்ஷ்டவசமானதே.

இவை அனைத்தும் வெளியில் நடந்துகொண்டிருக்க, கல்வியங்காடு பகுதியில் டெலோ இயக்கப் பொறுப்பாளர்களான நித்தி மற்றும் கமலின் உத்தரவில் கண்கள் கட்டப்பட்ட பசீர் காக்காவும் கோப்பாய் முரளியும், டெலோ இயக்கம் அடைத்து வைத்திருந்த இடத்திலிருந்து தப்பித்துக்கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளைச் சென்றடைந்தனர்.

என்றாலும், யாழ். மாவட்டத்தில் டெலோ அமைப்பிடமிருந்து ஆயுதங்களைக் களையும் நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளினால் மேற்கொள்ளப்பட்ட வேளையில், கல்வியங்காடு பகுதியில் டெலோ என்ற தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறிசபாரத்தினத்தைக் குறிவைத்து, டெலோ இயக்கத்தின் பலம்பொருந்திய கோட்டையான கல்வியங்காடு, கட்டைப்பிராய் பகுதிகளில் மிகவும் உக்கிரமான மோதலையும் ஆயுதக் களைவு நடவடிக்கையையும் விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் மேற்கொண்டனர்.

அந்தத் தமிழீழ விடுதலைப் புலிகளின் உக்கிரமான தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாத டெலோ இயக்கத்தவர்களில் சிலர் கொல்லப்பட, பலர் சரணடைய ஆரம்பித்தார்கள்.

ஆகையால், மோதலை நிறுத்தும் நோக்கத்தோடு தமிழீழ விடுதலைப் புலிகளும் டெலோ இயக்கத்தவர்களைச் சரணடையக் கோரி, வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த ஒலிபெருக்கிகள் மூலம் சுற்றுவட்டாரங்களில் எல்லாம் அறிவித்துக்கொண்டிருந்தார்கள்.

இதனாலும் அதிகமானவர்கள் சரணடைந்தனர்.

டெலோ இயக்கத்தின் சார்பில் திம்புப் பேச்சுவார்த்தைக்குச் சென்ற டெலா (TELA) இயக்கத்தின் தலைவர் ஒப்ரோய் தேவனின் தம்பியான சின்ன பருவா, நல்லூரில் உள்ள வீடொன்றில் பதுங்கியிருந்தார்.

அவரைக் கைது செய்யும்போது அவருக்குக் காலில் காயம் ஏற்பட்டது.

இதே நேரத்தில், பசீர் காக்கா மற்றும் கோப்பாய் முரளியைக் கடத்தி இந்த இரு இயக்கங்களின் மோதலை ஆரம்பித்த டெலோ இயக்கத்தின் நித்தி உட்பட இன்னும் சிலரும் கைது செய்யப்பட்டனர்.

ஆனாலும், அதுவரையிலும் கைது செய்யப்படாத சிறிசபாரத்தினத்தைக் குறிவைத்துப் புலிகளின் தேடுதல் தொடர்ந்தது.

17. கோண்டாவிலில் சிறிசபாரத்தினம் கொல்லப்பட்ட சம்பவம்

சிறிசபாரத்தினம் - மேம்படுத்தப்பட்ட படம்
மேம்படுத்தப்பட்ட படம்

டெலோ இயக்கத் தலைவர் சிறிசபாரத்தினம், தாஸ் படுகொலையில் முக்கியச் சூத்திரதாரியாக இருந்த பொபி மற்றும் இன்னும் சிலரும் கோண்டாவிலுக்குப் பின்வாங்கிச் சென்று அங்கிருந்த புகையிலைத் தோட்டம் ஒன்றில் பதுங்கிக்கொண்டார்கள்.

டெலோ இயக்கத் தலைவர் சிறிசபாரத்தினம் உட்பட டெலோ இயக்க உறுப்பினர்கள் இவ்வாறு பதுங்கியிருக்கும் தகவல், யாழ். மாவட்டத்தில் அன்றைய புலனாய்வு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருந்த ஐடியா வாசுவிற்குக் கிடைத்தது.

அந்தத் தகவலின் உண்மைத்தன்மை உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், புலிகளின் படையணியினர் கோண்டாவிலை நோக்கிச் சென்று சரியான இடத்தை முற்றுகையிட நெருங்கிய தருணத்தில், நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த பொபி, சிறிசபாரத்தினத்தின் கைத்துப்பாக்கியையும் பறித்துக்கொண்டு தப்பியோட, அவரோடு எஞ்சிய டெலோ இயக்க உறுப்பினர்களும் புலிகளிடமிருந்து தப்பிச் சென்றார்கள்.

இந்த நிலையில், டெலோ இயக்கத் தலைவர் சிறிசபாரத்தினம், யாருமற்ற நிலையில் கோண்டாவிலில் உள்ள புகையிலைத் தோட்டத்தில் தனித்து விடப்பட்டார்.

அப்போது, புலிகளின் அணியினர் டெலோ இயக்கத்தால் கைவிடப்பட்டு யாருமற்ற நிலையில் இருந்த டெலோ இயக்கத் தலைவர் சிறிசபாரத்தினத்தை நெருங்கியபோது, அங்கு அவர் முறுகல் நிலையை ஏற்படுத்தியதால், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த மன்னார் மாவட்டத் தளபதி விக்டரின் மெய்ப்பாதுகாவலராக இருந்த போராளி ஒருவரால் சிறிசபாரத்தினத்தின் காலில் சூடு விழுந்தது.

அதன் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தால் டெலோ இயக்கத் தலைவர் சிறிசபாரத்தினத்திற்கு மரணதண்டனையும் வழங்கப்பட்டது.

18. சுதன்–ரமேஸ் பிரச்சினையும் சிறிசபாரத்தினத்தின் மரணமும்

1984 ஆம் ஆண்டு டெலோ இயக்கத்தின் உள்ளியக்கப் பிளவான சுதன்–ரமேஸ் பிரச்சினையில், ரமேசும் சுதனும் பிரபாகரனிடமிருந்து கைத்துப்பாக்கியை வாங்கிச் சிறிசபாரத்தினத்தைக் கடத்திக் கொலை செய்யத் திட்டமிட்டார்கள் எனக் கூறி, டெலோ இயக்கத் தலைவர் சிறிசபாரத்தினத்தின் பெயரில், டெலோ இயக்கத்தினர் 1984 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் திகதி கையெழுத்திட்டு அறிக்கையை விடுத்து, சுதன் மற்றும் ரமேசைக் கொலை செய்யும் நோக்கோடு கடத்தினார்கள்.

ஆனால், அன்றைய காலத்தில் டெலோ இயக்கத்தின் முக்கியஸ்தராக இருந்த மனோ மாஸ்டரின் சகோதரரான சுதன் கடத்தப்பட்டதனால் விசனம் கொண்ட டெலோ இயக்கத்தின் முக்கியஸ்தரான மனோ மாஸ்டர், தன் சகோதரன் சுதன் மற்றும் ரமேசின் விடுதலையைக் கோரி மெரினா கடற்கரையில் அகிம்சை ரீதியான ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்தார்.

இதனால் இச்செய்தி தமிழ்நாட்டுக் காவல்துறையினதும் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களினதும் காதுகளை எட்டியது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களான, தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானப்படையின் முதல் தளபதியான வைத்தியலிங்கம் சொர்ணலிங்கம் என்ற சங்கர் மற்றும் மட்டு. மண்ணின் முதல் மாவீரரான லெப்டினன்ட் ராஜா என்ற பரமதேவா போன்றவர்களின் புலனாய்வுத் தகவல்களினால், சுதன் மற்றும் ரமேஸ் டெலோ குழுவின் உள்ளியக்கச் சகோதரப் படுகொலையிலிருந்து தமிழக முதல்வரின் உத்தரவில் தமிழகக் காவல்துறையால் காப்பாற்றப்பட்டு, தமிழீழ விடுதலைப் புலிகளிடம் கையளிக்கப்பட்டு, வேதாரண்யக் கரையிலிருந்து தமது சொந்த இடங்களான தொண்டமானாறு மற்றும் கம்பர்மலைக்குப் பாதுகாப்பாக அனுப்பப்பட்டனர்.

1984 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் திகதி சிறிசபாரத்தினத்தினால் அறிக்கை விடப்பட்ட இந்த நிகழ்வு நடந்து சரியாக இரண்டு வருடங்கள் முடிவடைந்த மறுநாளான 1986 ஆம் ஆண்டு மே மாதம் 6 ஆம் திகதி, அந்த டெலோ இயக்கத் தலைவர் விடுதலைப் புலிகளின் துப்பாக்கியாலேயே தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டார் என்பது விசித்திரமானதே.

19. சிறிசபாரத்தினத்தின் இறுதிச் சடங்கும் மோதலின் முடிவும்

தமிழீழ விடுதலைப் புலிகளினால் மரணதண்டனைக்கு உள்ளான டெலோ இயக்கத் தலைவர் சிறிசபாரத்தினத்தின் உடல், அவர் தண்டனைக்கு உள்ளான அதே நாளாகிய 1986 ஆம் ஆண்டு மே மாதம் 6 ஆம் திகதி, இருபாலையில் உள்ள சுடுகாட்டில் உரிய முறையில், சிறிசபாரத்தினத்துடன் நெருங்கிப் பழகிய தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் ஒருவரால் எரியூட்டப்பட்டது.

அத்துடன், தமிழீழ விடுதலைப் புலிகளின் மீது டெலோ இயக்கம் வலிந்து திணித்த சண்டையும் முடிவுக்கு வந்தது.

டெலோ இயக்கத்தின் முக்கியஸ்தர் சின்ன பருவா உட்பட அந்த இயக்கத்தின் காயமடைந்தவர்கள் மற்றும் சரணடைந்தவர்கள், கல்வியங்காடு பகுதியில் மட்டுமல்லாது யாழ். மாவட்டத்தின் சகல பகுதிகளிலிருந்தும் முழுமையான விசாரணைகளின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளால் விடுதலை செய்யப்பட்டார்கள்.

20. மோதலில் உயிரிழந்தவர்களும் மறக்க முடியாத துயரங்களும்

பசீர் காக்காவையும் கோப்பாய் முரளியையும் கடத்தி, டெலோ இயக்கத்தால் விடுதலைப் புலிகள் மீது வலிந்து திணிக்கப்பட்ட துயரமிக்க இந்த மோதலில் டெலோ இயக்க உறுப்பினர்கள் பலர் கொல்லப்பட்டனர்.

இதில் அதிகமான டெலோ உறுப்பினர்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருந்தார்கள்.

அத்துடன், திருநெல்வேலிப் பகுதியில் வாகனத் தரிப்பிடத்திற்குக் காவலாக இருந்த டெலோ இயக்கத்தைச் சேர்ந்த முகில்வண்ணன், நகுலன் என்ற திருகோணமலை இளைஞர்கள் இருவர் சுடப்பட்ட பின் டயர் போட்டு எரிக்கப்பட்டார்கள் என்பது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

இந்தச் சம்பவம் நடந்த திருநெல்வேலிப் பகுதியைத் தலைமை தாங்கிய விடுதலைப் புலிகளின் மூன்றாம் பயிற்சிப் பாசறையில் பயிற்சி பெற்ற வசாவிளானைச் சேர்ந்த ஹரன் என்ற உறுப்பினர், பின்னாளில் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலகி மும்பையில் போதைவஸ்துக் கடத்தலில் ஈடுபட்டிருந்தபோது, அந்தக் குழுவுக்குள் ஏற்பட்ட முரண்பாட்டால் தங்கியிருந்த விடுதி அறையில் அந்தக் குழுவினரால் துயரமான முறையில் கொல்லப்பட்டார்.

அத்துடன், புலிகளின் மூத்த உறுப்பினர் லிங்கம் கொல்லப்பட்ட வட்டுக்கோட்டையில் இருந்த டெலோ இயக்கப் பயிற்சி முகாமில், கண் வருத்தத்தில் படுத்திருந்த சில டெலோ உறுப்பினர்கள் கொல்லப்பட்டதும் துன்பகரமானது.

அங்கு கொல்லப்பட்டவர்களில் ஒருவரான குமாரதாஸ் என்ற டெலோ உறுப்பினர், தாஸ்–பொபி முரண்பாட்டின்போது திருகோணமலையைச் சேர்ந்த யேசு என்ற பொறுப்பாளரின் குழுவுடன் வட்டுக்கோட்டையிலிருந்து வடமராட்சிக்குச் சென்றவராவார்.

இந்த டெலோ இயக்கத்தில் தாஸ் குழுவில் இருந்த திருகோணமலையின் உப்புவெளியைச் சேர்ந்த யேசு என்பவர், தமிழீழ விடுதலைப் புலிகளின் மூன்றாம் பாசறையில் பயிற்சி பெற்ற பழனி என்பவரின் சகோதரராவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தாஸ் சுடப்பட்ட பின், பொறுப்பாளர் யேசுவின் அனுமதியுடன் தனது சொந்த ஊரான வட்டுக்கோட்டைக்குக் குமாரதாஸ் திரும்பியபோது, சிறிசபாரத்தினத்தின் டெலோ குழுவால் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

வயோதிபத் தாய் தகப்பனுக்கு பல்லாண்டுகளுக்குப் பின் பிறந்த, வீட்டிற்கு ஒரே பிள்ளையான இவரும் அந்த முகாம் விடுதலைப் புலிகளால் தாக்கப்பட்ட சம்பவத்தில் கொல்லப்பட்டது என்பது மிகவும் துயரமானது.

அத்துடன், டெலோ இயக்கத்தைத் தடை செய்யும் இந்த நடவடிக்கையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி லிங்கம் உட்பட அலிஸ்ரன், ரமேஸ் ஆகியோரும், வன்னிப் பிராந்தியத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் திலகன், லோகன், நிமல், ஜெயந்தன், நாகேந்திரன், விஸ்வன், சிவகுமார், லங்கேஸ், அலிஸ்ரன், ரமேஸ் ஆகியோரும் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்கள்.

21. டெலோ இயக்கத்தின் மீதான தடையும் அதன் பின்னணியும்

துயரமான இந்தச் சம்பவங்களுக்குக் காரணமான டெலோ இயக்கத்தின் அடாவடித்தனமான கடத்தல் செயற்பாட்டினால், டெலோ இயக்கத்தைத் தடை செய்ய வேண்டிய தேவை தமிழீழ விடுதலைப் புலிகளின் அன்றைய யாழ். மாவட்டத் தளபதியாக இருந்த சதாசிவம் கிருஷ்ணகுமார் என்ற கிட்டுவுக்குத் தவிர்க்க முடியாமல் இருந்தது என்பதே யதார்த்தமாகும்.

அத்துடன், இந்த டெலோ இயக்கம் தடை செய்யப்பட்ட பின்னர், அந்த டெலோ இயக்கத்தால் பொதுமக்களிடமும் வழிபாட்டுத் தலங்களிலுமிருந்து கொள்ளையிடப்பட்ட நகைகள் உட்படப் பல பொருட்கள் கஸ்தூரியார் வீதியில் இருந்த வீடு ஒன்றில் மக்கள் பார்வைக்குக் காட்சிக்கு வைக்கப்பட்டு, அந்த நிகழ்வின் புகைப்படங்கள் பத்திரிகைகளில் வெளிவந்தன.

அதன் பின்னர் நகைகள், வாகனங்கள் என்பனவும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

22. இந்திய–இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் டெலோ இயக்கத்தின் செயற்பாடுகள்

அத்துடன், விடுதலைப் புலிகளால் மன்னிப்பு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்ட பல டெலோ உறுப்பினர்கள் இந்தியா சென்று, இந்திய ஆயுதப் படையிடம் உத்தரப் பிரதேசத்தில் அதிசிறப்புப் பயிற்சி பெற்றனர்.

இந்திய–இலங்கை ஒப்பந்த காலத்தில் இந்திய இராணுவம் தமிழீழப் பிரதேசங்களுக்கு வந்தபோது, அவர்களுடன் ஒட்டுக்குழுவாக வந்து, இந்திய அமைதிப்படையுடன் விடுதலைப் புலிகளின் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டபோது, பல விடுதலைப் புலிகளின் மரணத்திற்கும் பல அப்பாவி மக்களின் மரணத்திற்கும் காரணமானார்கள்.

அத்துடன், கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற கூட்டுப் பாலியல் படுகொலைக்கும் காரணமானார்கள்.

முடிவுரை: வரலாற்றை உணர்ந்து தமிழினத்தின் ஒற்றுமைக்காகப் பணியாற்றுவோம்

இவற்றையெல்லாம் உணர்ந்து, ஒவ்வொரு வருடமும் சிறிசபாரத்தினத்தின் நினைவு நாளில் வந்து, சகோதரப் படுகொலை, புலிப்பாசிசம் என்று கதறுவதை விடுத்து, அந்தத் துன்பம் தரும் நிகழ்வைக் கடந்து, தமிழீழத் தேசியத் தலைவரினால் அரசியல் ரீதியில் தமிழினத்தின் ஒற்றுமை கருதித் தடை செய்யப்பட்ட இயக்கங்களை உள்வாங்கி உருவாக்கப்பட்ட அரசியல் கடமைகளை உணர்ந்து, தமிழினத்தின் ஒற்றுமைக்காக ஒன்றாக நின்று பணியாற்றுவோம்.

சுவாமி சங்கரானந்தா 🙏
நிறுவனர் மற்றும் பிரதம ஆசிரியர்
ஈழ மண்ணின் சுவடுகள் இணையச் சஞ்சிகை

விளம்பரம்
← கட்டுரைகளுக்குத் திரும்புங்கள்Read in English →