செய்திகள் · உலகம்
நைஜீரியாவின் 66ஆவது சுதந்திர தினம் – நாடு முழுவதும் இன்று பொது விடுமுறை

அபுஜா – 2026ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1ஆம் திகதி
ஆபிரிக்காவின் அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடான நைஜீரியா தனது 66ஆவது சுதந்திர தினத்தை இன்று, 2026ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1ஆம் திகதி கொண்டாடுகிறது.
நைஜீரியா 1960ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1ஆம் திகதி பிரித்தானிய காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்றது. அதன் 66 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சுதந்திர தினத்தை முன்னிட்டு அக்டோபர் 1ஆம் திகதியை நாடு முழுவதும் பொது விடுமுறையாக நைஜீரிய கூட்டாட்சி அரசு அறிவித்துள்ளது. உள்துறை அமைச்சர் ஒலுபுன்மி துன்ஜி-ஓஜோ, கூட்டாட்சி அரசின் சார்பில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
நைஜீரியாவிலும் வெளிநாடுகளிலும் வாழும் நைஜீரிய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த அவர், தேசிய ஒற்றுமை, தேசப்பற்று, அமைதியான இணைவாழ்வு மற்றும் பரஸ்பர மரியாதையை வலுப்படுத்தும் நாளாக சுதந்திர தினத்தை பயன்படுத்துமாறு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த ஆண்டின் 66ஆவது சுதந்திர தினம் “From Reforms to Stability: Consolidating Nigeria’s Renewed Hope for Shared Prosperity” என்ற கருப்பொருளின் கீழ் கொண்டாடப்படுகிறது. அண்மைக் கால பொருளாதார மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்களின் பயன்களை நிலைநிறுத்தி, அவற்றை பொதுமக்களின் வாழ்க்கைத் தர முன்னேற்றம் மற்றும் பொருளாதார வாய்ப்புகளாக மாற்றுவது இந்தக் கருப்பொருளின் நோக்கம் என அரசு தெரிவித்துள்ளது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு நைஜீரிய ஜனாதிபதி போலா அகமது டினுபு இன்று காலை 7 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவரது உரை தேசிய தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையங்கள் ஊடாக ஒளிபரப்பப்படும் என ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது.
இந்த ஆண்டின் சுதந்திர தின நிகழ்வுகளை பெரிய அளவிலான கொண்டாட்டங்களாக இல்லாமல் ஒப்பீட்டளவில் எளிமையான முறையில் நடத்துவதற்கு கூட்டாட்சி அரசு தீர்மானித்துள்ளது. செப்டம்பர் 24ஆம் திகதி நடைபெற்ற உலக ஊடக மாநாட்டுடன் நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டு, இஸ்லாமிய ஜும்ஆ தொழுகை மற்றும் கிறிஸ்தவ தேவாலய ஆராதனை உள்ளிட்ட நிகழ்வுகளும் முன்னதாக இடம்பெற்றன.
சுதந்திர தின பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக தலைநகர் அபுஜா அமைந்துள்ள Federal Capital Territory பகுதியில் மட்டும் Nigeria Security and Civil Defence Corps சுமார் 3,000 அதிகாரிகளைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தியுள்ளது.
1960ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றபோது சர் அபுபக்கர் தஃபாவா பலேவா நைஜீரியாவின் முதலாவது பிரதமராகப் பதவி வகித்தார். சுதந்திரம் பெற்ற மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் 1963ஆம் ஆண்டு நைஜீரியா குடியரசாக மாறியதுடன், நம்டி அசிகிவே நாட்டின் முதலாவது ஜனாதிபதியானார்.
சுதந்திரத்திற்குப் பின்னர் நைஜீரியா இராணுவ ஆட்சிகள், உள்நாட்டுப் போர் மற்றும் பல்வேறு அரசியல் மாற்றங்களை எதிர்கொண்டது. 1999ஆம் ஆண்டு மீண்டும் ஜனநாயக ஆட்சிக்கு திரும்பிய நைஜீரியா, தற்போது தொடர்ந்து 27 ஆண்டுகளாக அரசியலமைப்பு அடிப்படையிலான ஜனநாயக ஆட்சியைப் பேணி வருகிறது.
66 ஆண்டுகால சுதந்திரப் பயணத்தை நினைவுகூரும் இந்த நாளில், நாட்டின் பன்முக இன, மொழி மற்றும் மத வேறுபாடுகள் நைஜீரியாவின் பலமாக இருக்க வேண்டும் என்றும், அமைதி மற்றும் நிலைத்தன்மையே எதிர்கால வளர்ச்சிக்கான அடித்தளம் என்றும் நைஜீரிய அரசு வலியுறுத்தியுள்ளது.

வாசகர் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…