தமிழ் இணையச் சஞ்சிகைவரலாறு · அரசியல் · உலகப் பார்வை

ஈழ மண்ணின் சுவடுகள்

வரலாற்றைப் பதிவு செய்வோம் · ஆதாரங்களைப் பாதுகாப்போம்

விளம்பரம்

செய்திகள் · இலங்கை

இலங்கையின் பொருளாதாரம் வளர்ச்சி கண்டாலும் அபாயங்கள் தொடர்கின்றன – சர்வதேச நாணய நிதியம்!

IMF மற்றும் இலங்கை அதிகாரிகள் கலந்து கொண்ட சந்திப்பு

தொடர்ச்சியான வெளிப்புற அதிர்ச்சிகளுக்கு மத்தியிலும் இலங்கையின் பொருளாதாரம் மீட்சிப் பாதையில் தொடர்ந்து முன்னேறி வருவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. செப்டம்பர் 10 முதல் 23ஆம் திகதி வரை இலங்கையில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட IMF குழு, விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின் ஏழாவது மீளாய்வு மற்றும் 2026ஆம் ஆண்டுக்கான Article IV ஆலோசனை தொடர்பாக இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

2026ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இலங்கையின் பொருளாதார நடவடிக்கைகள் 4.2 சதவீதம் விரிவடைந்துள்ளன. இதன் மூலம் தொடர்ந்து 11 காலாண்டுகளாக பொருளாதார வளர்ச்சி பதிவாகியுள்ளதாக IMF குறிப்பிட்டுள்ளது. அதேவேளை, நாட்டின் மொத்த உத்தியோகபூர்வ வெளிநாட்டு நாணயக் கையிருப்பு ஆகஸ்ட் மாத இறுதியில் 6.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது. வங்கித் துறையும் போதுமான மூலதனத்துடனும் இலாபகரமான நிலையிலும் இருப்பதாக IMF தெரிவித்துள்ளது.

எனினும், பொருளாதார வளர்ச்சியுடன் புதிய சவால்களும் உருவாகியுள்ளன. உலகளாவிய எண்ணெய் விலை அதிர்ச்சியின் காரணமாக இலங்கையின் வருடாந்த பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 8 சதவீதமாக உயர்ந்துள்ளது. மத்திய கிழக்குப் போர் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது குறித்த நிச்சயமற்ற தன்மை, உலக வர்த்தகக் கொள்கைகளில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் El Niño காலநிலை விளைவுகள் ஆகியவை இலங்கையின் பொருளாதாரத்திற்கு தொடர்ந்தும் கீழ்நோக்கிய அபாயங்களாக இருப்பதாக IMF எச்சரித்துள்ளது.

அரச வருவாயை நிலையான முறையில் அதிகரிப்பதற்கான நடுத்தரகால வருவாய் திட்டமொன்றை உருவாக்குதல், வரி செலுத்துவோர் அடிப்படையை விரிவுபடுத்துதல், வரி விலக்குகள் மற்றும் சலுகைகளை மறுபரிசீலனை செய்தல், வரி நிர்வாகத்தை மேம்படுத்துதல் ஆகியவை முக்கியமான அடுத்தகட்ட நடவடிக்கைகளாக IMF சுட்டிக்காட்டியுள்ளது. அதேபோன்று அரச நிறுவனங்களால் ஏற்படக்கூடிய நிதி அபாயங்களைக் கட்டுப்படுத்த மின்சாரம் மற்றும் எரிபொருள் விலைகளில் செலவு மீட்பு முறையைத் தொடர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

விளம்பரம்
IMF குழுவின் கலந்துரையாடல்

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் விலை நிலைத்தன்மையைப் பேணுவதற்கும் மத்திய வங்கி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்றும் IMF வலியுறுத்தியுள்ளது. தற்போதைய 5 சதவீத பணவீக்க இலக்கைத் தொடர்வது பொருத்தமானது என்றும், வெளிநாட்டு அதிர்ச்சிகளை எதிர்கொள்வதற்கும் நாணயக் கையிருப்பை மேலும் அதிகரிப்பதற்கும் மாற்று விகிதத்தில் போதுமான நெகிழ்வுத்தன்மை அவசியம் என்றும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், பொருளாதாரத்தை வெறும் நிலைப்படுத்தும் கட்டத்திலிருந்து நீண்டகால வளர்ச்சிக்கான மாற்றுக் கட்டத்திற்குக் கொண்டு செல்ல கட்டமைப்புச் சீர்திருத்தங்கள் தொடர வேண்டும் என IMF தெரிவித்துள்ளது. வர்த்தகத்தைத் திறந்துவிடுதல், தொழில் மற்றும் தொழிலாளர் சட்டங்களை நவீனப்படுத்துதல், முதலீட்டை ஈர்த்தல், நிதிச் சேவைகளுக்கான அணுகலை விரிவுபடுத்துதல் மற்றும் டிஜிட்டல் மயமாக்கலை முன்னெடுத்துச் செல்லுதல் போன்ற நடவடிக்கைகள் வேலைவாய்ப்பையும் மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்த உதவும் என கூறப்பட்டுள்ளது.

இந்த முறை IMF குழு யாழ்ப்பாணத்திற்கும் விஜயம் செய்து வடக்கு மாகாணத்தின் பொருளாதார வாய்ப்புகள் குறித்து தனியார் துறை மற்றும் சிவில் சமூகத்தினருடன் கலந்துரையாடியுள்ளது. விவசாயம், மீன்பிடி, சுற்றுலா, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, போக்குவரத்து இணைப்புகள் மற்றும் திறன் மேம்பாடு போன்ற துறைகளில் முதலீடுகளை அதிகரிப்பதன் மூலம் வடக்கில் வளர்ச்சியையும் வேலைவாய்ப்பையும் உருவாக்க முடியும் என IMF குறிப்பிட்டுள்ளது. அதேவேளை பொருளாதார வளர்ச்சியின் பலன்கள் பரவலாக மக்களைச் சென்றடைய சமூகப் பாதுகாப்பும் வலுப்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின் ஏழாவது மீளாய்வு இன்னும் நிறைவடையவில்லை. இலங்கை அரசாங்கத்துக்கும் IMF அதிகாரிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன. பணியாளர் மட்ட உடன்பாட்டை விரைவில் எட்டுவதையும், அதன் பின்னர் ஏழாவது மீளாய்வை நிறைவு செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதையும் இலக்காகக் கொண்டுள்ளதாக IMF செப்டம்பர் 23ஆம் திகதி தெரிவித்துள்ளது.

← இலங்கைச் செய்திகள்