spirituality
சுவாமி சங்கரானந்தா அருளிய திருக்கோணேஸ்வரத் திருப்பதிகம்

“ஆழி அலை சூழ கோணமலை வாழும் சிவபெருமானே”
பண் : காந்தாரம்
தாளம் : திருச்சபை
ஸ்தலம் : கோணமலை
இறைவன் : கோணேசர்
1
பாரும் விண்ணும் பரந்த பரம்பொருளே
மாலும் அயனும் காணா நின்ற முழுமுதலே
நாளும் என்னுள் மெய்ஞானம் தந்து மிளிரும் மெய்ச்சுடரே
வாருமென் முன்னே வருகவென்று உமை அழைக்கும் என்பாவை
பாரும் ஆழி அலை சூழ கோணமலை வாழும் சிவபெருமானே
2
ஞானசம்பந்தன் பாடி அழைக்கா பதிகம் ஒன்று பாடி
உமை அழைக்கும் வரமொன்றை வேண்டித் தொழுது நின்று
மெய் மறந்து உமை நினைத்து பரவசத்தில் சிவனடியான்
பாடுமிப் பாவை கேட்டு என் முன்னே வாரும்
ஆழி அலை சூழ கோணமலை வாழும் சிவபெருமானே
3
தாரும் பொன்னும் பொருளும் அருள் நிதியாவும்
வாழும் இவ்வையகத்தே நாளும் வறுமையில்லா வாழ்வும்
நோயும் பிணியுமில்லா நிலை ஈந்தென்னை ஆக்கி காத்து அருள
வாரும் என் முன்னே ஈசனே
ஆழி அலை சூழ கோணமலை வாழும் சிவபெருமானே
4
பிறப்பாரும் மண்ணில் இருப்பாரும் இறப்பாரும்
வழிதேடி வந்தாரும் உழைத்தங்கே பிழைப்பாரும்
உனைக் காண வருவாரும் வாழ வழிதந்த மண்ணை ஆளும் தேசனே
மாதுமை நேசனே வருகவென் முன்னே
ஆழி அலை சூழ கோணமலை வாழும் சிவபெருமானே
5
மான் மேயும் மந்திகள் தாவும் தும்பிகள் பாடும்
குயில் கூவும் வண்டுலாவும் இயல்சூழ
மலைமேலமர்ந்து அருள் வீசும் ஈசனே திருமலையின் வாசனே
என் பெருமானே வருகவென் முன்னே
ஆழி அலை சூழ கோணமலை வாழும் சிவபெருமானே
6
கல்லால மரமும் பாபநாசமும் நில்லாத மனத்தையும்
நிலைத்திடப் பண்ண வில்லான புருவ மங்கையோடிணைந்து
பொல்லா வினையை இல்லாவொழிக்கும் எம் பெருமானே
வருகவென் முன்னே
ஆழி அலை சூழ கோணமலை வாழும் சிவபெருமானே
7
வல்லாதி இராவணன் வாள் கொண்டு அறுத்தெடுக்க
அருங்கருணை கொண்டவனை ஆட்கொண்ட
கல்லாதி மலை மீது வாழ்கின்ற தெய்வமே ஆதிமூலமே
கோணேச நாதனே வருகவென் முன்னே
ஆழி அலை சூழ கோணமலை வாழும் சிவபெருமானே
8
ஆதியும் அந்தமும் இல்லா அருட்சுடரே
பாலனை காக்க காலனை உதைத்த பெருந்தகையே
ஆலவிடமுண்டு அமரர்கள் காத்த அமுதீசனே
சிவனே என்றழைக்க என் முன்னே வருக
ஆழி அலை சூழ கோணமலை வாழும் சிவபெருமானே
9
ஆடும் பொற்பாதமும் காக்கும் திரிசூலமும்
மானும் மழுவும் வார்சடை நதியும்
அணிகல நாகமும் அன்னை சிவகாமியும்
வெள்ளை எருதும் கொண்டெழுந்து அழைத்த குரல் கேட்டு
கண் முன்னே வருக
ஆழி அலை சூழ கோணமலை வாழும் சிவபெருமானே
10
வாழும் வாழ்வை சிவமென முழுதாய்
நாளும் பொழுதும் சிவமே நெறியாய்
பாடிப் பணிந்து போற்றித் துதித்து
வருகவென வரமொன்றை தருக
உமையோடு துணையாக வருக என் முன்னே
ஆழி அலை சூழ கோணமலை வாழும் சிவபெருமானே
சுவாமி சங்கரானந்தா🙏

வாசகர் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…