தமிழ் இணையச் சஞ்சிகைவரலாறு · அரசியல் · உலகப் பார்வை

ஈழ மண்ணின் சுவடுகள்

வரலாற்றைப் பதிவு செய்வோம் · ஆதாரங்களைப் பாதுகாப்போம்

விளம்பரம்

திருமலை மண்ணின் முத்துக்கள்

2. கழகப்புலவர் பெ.பொ. சிவசேகரம் – திருமலை மண்ணின் கல்விப் பிதாமகர்!

2. கழகப்புலவர் பெ.பொ. சிவசேகரம் – திருமலை மண்ணின் கல்விப் பிதாமகர்!

திருமலை மண்ணின் முத்துக்கள்!

திருகோணமலை நகரில் பெருந்தெருப் பள்ளியும் சண்முக வித்தியாலயமும் ஒன்றாய் இணையும் ஒரே புள்ளி இராஜவரோதயம் வீதி. அங்கேயே கல்வியில் சிறந்து, தாம் பெற்ற கல்வியால் எமது மண்ணின் பல மைந்தர்களுக்குக் கற்பித்து, அவர்களைக் கல்வியில் உச்சம் தொடவைத்த ஐயா பெ.பொ. சிவசேகரனாரின் வாழ்விடமும் அமைந்திருந்தது.

ஆங்கிலம், தமிழ் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களைக் கற்பித்த ஆசிரியராக ஐயா அவர்கள் இருந்தாலும், திருகோணமலை மண்ணில் பல தமிழ் பண்டிதர்களும் தமிழறிஞர்களும் உருவாகுவதற்குக் காரணமாக இருந்தவர்களில் அவரும் ஒருவராவார். அத்தோடு தம்மிடம் தமிழ் கற்க வந்த மாணவர்களிடம் கற்பித்தலுக்காகப் பணம் பெற்றுக்கொள்ளவில்லை என்பதே குறிப்பிட்டுப் பாராட்டக்கூடிய விடயமாகும்.

அந்தக் காலத்தில் பெ.பொ.சி என்று செல்லமாக அழைக்கப்பட்ட ஐயா அவர்கள், இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும் கவியோகி, மகரிஷி என்று போற்றப்பட்டவருமான சுத்தானந்த பாரதியார் அவர்களால், திருகோணமலைத் திருவள்ளுவர் கழகத்தில் தமது கவிப்புலமைக்காகப் பாராட்டப்பட்ட கௌரவத்திற்குரியவர் என்பதும் எமது முன்னைய தலைமுறையினரிடமிருந்து அறிந்த செய்தியாகும்.

எங்கள் திருகோணமலை மண்ணில் பல ஆண்டுகளாக எமக்கு முந்திய தலைமுறையினருக்குத் திருக்குறளை விளக்கிப் பாடமெடுத்த ஐயா அவர்கள், திருவள்ளுவர் கழகத்தின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றி, அதன் மூலம் தமிழுக்கு உயிர் கொடுத்தவர்களில் ஒருவராவார்.

1950களிலேயே திருகோணமலைத் திருவள்ளுவர் கழகத்தின் சொற்பொழிவாளராக விளங்கிய ஐயா சிவசேகரனார் அவர்கள், திருக்குறளை வெறுமனே மனப்பாடம் செய்து ஒப்புவிப்பதற்கான நூலாகக் கருதாமல், அதன் பொருளையும் வாழ்க்கை நெறிகளையும் மாணவர்களுக்கு விளக்கிக் கற்பிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார்.

தமிழ் இலக்கணத்திலும் இலக்கியத்திலும் சிறந்து விளங்கிய ஐயா அவர்கள் கவிதை இயற்றுவதிலும் தனித்துவமான புலமை பெற்றிருந்தார். அவர் இயற்றிய கவிதைகள் பின்னாளில் ‘கழகப்புலவர் பெ.பொ.சி. கவிதைகள்’ என்ற பெயரில் 1998ஆம் ஆண்டு ஈழத்து இலக்கியச் சோலை வெளியீடாக 302 பக்கங்களைக் கொண்ட நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

திருக்குறள், கம்பன், தமிழ், சமயம், இயற்கை, சமூக வாழ்வியல் எனப் பல்வேறு விடயங்களை மையமாகக் கொண்டு அவர் இயற்றிய கவிதைகளில், ‘ஈழத்தமிழ் நாடே’, ‘ஈழத்து மக்களே’, ‘கோணமலை’, ‘ஏழையின் கண்ணீர்’, ‘கம்பன் புகழ்’ போன்ற பாடல்களும் இடம்பெற்றுள்ளன. இவை ஐயா அவர்களிடம் இருந்த தமிழ்ப்பற்றையும் தாம் வாழ்ந்த மண்ணின் மீதான அக்கறையையும் எடுத்துக்காட்டுகின்றன.

இதைவிட ஐயா சிவசேகரனார் அவர்கள் தமிழுக்கு மட்டுமல்லாது சமயத்திற்கும் ஆற்றிய தொண்டுகளில் ஒன்றாக, திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் மீது அவர் பாடிய அந்தாதிப் பாடல்களையும் குறிப்பிடலாம்.

அவரது ‘காளி கவிமாலை’, ‘திருகோண நாயகர் ஊஞ்சல்’, ‘கதிர்காம மாலை’ போன்ற சமயப் பாடல்களும் அவரிடம் இருந்த இறைபக்திக்கும் தமிழ்ப்புலமைக்கும் எடுத்துக்காட்டுகளாகின்றன.

1994ஆம் ஆண்டு வெளியான திருகோணமலை வில்லூன்றிக் கந்தசுவாமி ஆலய கும்பாபிஷேக மலரில் இடம்பெற்றுள்ள ‘வினைதீர்க்கும் வில்லூன்றிக் கந்தன்’ என்ற பாடலும் ஐயா சிவசேகரனாரின் படைப்புகளில் ஒன்றாகும்.

அத்தோடு இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான சுவாமி விவேகானந்தரால் நிறுவப்பட்ட இராமகிருஷ்ண மிஷனின் திருகோணமலைக் கிளையில் அவர் ஆற்றிய தன்னார்வ நிர்வாகத் தொண்டும் குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழுக்கும் சமயத்திற்கும் தொண்டாற்றியதோடு தாம் வாழ்ந்த திருகோணமலை மண்ணின் வரலாற்றிலும் ஐயா அவர்கள் அக்கறை கொண்டிருந்தார். திருக்கோணமலை என்ற பெயர் உருவாகிய விதம் குறித்தும் அவர் ஆய்வு செய்திருந்ததாக அறிய முடிகின்றது.

இவை யாவும் இந்தச் சிவனடியான் பிறப்பதற்கு முன்னரே ஆரம்பமான ஐயா சிவசேகரனாரின் தமிழ்த் தொண்டுகளுடன் தொடர்புடையவையே.

ஆயினும், நான் சிறுவனாக இருந்த காலத்தில் எனது தந்தையாருக்குக் கல்வி கற்பித்த ஆசிரியராக ஐயா சிவசேகரனார் அவர்கள் இருந்ததாலும், நாங்கள் வசித்த சாரதா வீதிக்கு அருகிலேயே அவர் வாழ்ந்ததாலும், எமது வீட்டிற்கு அடிக்கடி வந்துசெல்லும் அவருடன் பேசிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருந்தது என்பது பெரும் பாக்கியமே.

1980களின் ஆரம்பத்தில் முன்னாள் காலைக்கதிர் பத்திரிகையின் நிர்வாக இயக்குநர் திரு. நடேசபிள்ளை வித்தியாதரன் அவர்களின் முயற்சியால் உருவாக்கம் பெற்ற திருகோணமலை கம்பன் கழகத்தில் எனது தந்தையார் தலைவராகவும், ஐயா சிவசேகரனார் புரவலராகவும் இருந்தமையால், அவருடன் மேலும் நெருக்கமாகப் பழகும் வாய்ப்பும் பல கம்பராமாயணப் பாடல்களுக்கான விரிவான விளக்கங்களை அறிந்து கற்றுக்கொள்ளும் சந்தர்ப்பமும் இந்த அடியவனுக்குக் கிடைத்தது.

அந்தத் திருகோணமலை கம்பன் கழகத்தின் மூலம், அக்காலத்தில் ஒன்பதாம், பத்தாம் வகுப்புகளுக்கான தமிழ்ப் பாடத்திட்டத்தில் கம்பராமாயணத்தின் சுந்தரகாண்டத்திலுள்ள காட்சிப்படலம் இடம்பெற்றிருந்தமையால், திருகோணமலையில் உள்ள அந்த வகுப்பு மாணவர்களுக்குத் தமிழ் இலக்கணத்தையும் கம்பராமாயணத்தையும் கற்பிப்பதற்கான சிறப்புப் பயிற்சிகள் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தன.

அந்த வகுப்புகளில் கலந்துகொண்ட ஒவ்வொரு மாணவரிடமும் தலா 50 சதம் மாத்திரமே வசூலிக்கப்பட்டது என்பதும் இன்றுவரை எனது நினைவில் நிற்கின்றது.

இதன் மூலம் எங்கள் மண்ணின் கல்விப் பிதாமகரான ஐயா சிவசேகரனாரிடம் நேரடியாகத் தமிழ் இலக்கணத்தையும் கம்பராமாயணத்தையும் கற்கும் வாய்ப்பு எமது சந்ததியைச் சேர்ந்த பலருக்கும் கிடைத்திருந்தது.

திரு. ந. வித்தியாதரன் மற்றும் திரு. இரா. பாலேந்திரநாதன் ஆகியோரின் முயற்சியால் ஒழுங்குசெய்யப்பட்ட திருகோணமலை கம்பன் விழாக்களின் கவியரங்குகள், பட்டிமன்றங்கள் மற்றும் விவாத மேடைகளிலும் ஐயா சிவசேகரனார் அவர்கள் பங்கேற்றிருந்தார்.

குறிப்பாக அந்த விழாக்களின் முன்னும் பின்னும் ஓய்வு நேரங்களில் கலாநிதி பொன். இராதாகிருஷ்ணன், வித்துவான் வேலன், சிவராமலிங்கம் ஆசிரியர், எனது தந்தையார் மற்றும் கம்பவாரிதி ஜெயராஜ் போன்றவர்களுடன் ஐயா சிவசேகரனார் அவர்கள் தமிழ் இலக்கண இலக்கியங்கள் பற்றிப் பேசும்போதும் விவாதிக்கும்போதும் வெளிப்படுத்திய தமிழறிவு இந்தச் சிவனடியானை வியக்க வைத்தது மட்டுமல்லாது, அவரிடமிருந்து பல விடயங்களைக் கற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பையும் ஏற்படுத்தியிருந்தது.

அந்தக் காலத்தில் தமிழறிஞர்கள் ஒன்றுகூடி இலக்கியம் பற்றிப் பேசும் இடங்களில், அவர்களின் உரையாடல்களை அருகிலிருந்து கேட்டுக்கொண்டிருப்பதே எம்மைப் போன்ற இளைஞர்களுக்குப் பெரும் கல்வியாக அமைந்திருந்தது.

கம்பராமாயணத்தின் பாடல்களுக்கான பொருள் விளக்கங்களைக் கூறும்போது, அதில் அமைந்துள்ள சொற்களின் இலக்கணச் சிறப்பையும் இலக்கிய நயத்தையும் ஐயா சிவசேகரனார் அவர்கள் எடுத்துரைக்கும் விதம், அவரிடம் இருந்த ஆழமான தமிழ்ப்புலமையை உணர்த்துவதாக இருந்தது.

அந்த வயதில் அவரிடம் கேட்டறிந்த பல விடயங்கள் இன்றும் எனது நினைவில் நிற்கின்றன. குறிப்பாக ஒரு பாடலின் பொருளை விளங்கிக்கொள்வதற்கும் அந்தப் பாடலில் அமைந்துள்ள கவிநயத்தை உணர்ந்துகொள்வதற்கும் இடையிலான வேறுபாட்டை அவரைப் போன்ற தமிழறிஞர்களுடன் பழகியதன் மூலமே அறிந்துகொள்ள முடிந்தது.

ஐயா அவர்களிடம் இருந்த தமிழ்மொழி மீதான காதல் மாணவர்களுக்கு இலவசமாகக் கற்பித்துக்கொடுப்பதோடு மட்டும் நின்றுவிடவில்லை. அதிகாலை வேளைகளில் துயில் கொள்ளும் மாணவர்களின் வீடுகளுக்கே சென்று, அவர்களைத் தட்டி எழுப்பி அழைத்துவந்து கற்பித்துக்கொடுக்கும் அளவுக்கு அவரது கல்வித் தொண்டு மகத்துவம் நிறைந்ததாக இருந்தது.

அன்றைய காலத்தில் மாணவர்கள் ஆசிரியர்களைத் தேடிச் சென்று கல்வி கற்றுக்கொண்டிருந்த நிலையில், ஒரு ஆசிரியர் தமது மாணவர்களின் வீடுகளுக்கே சென்று அவர்களை அழைத்துவந்து கற்பித்துக்கொடுத்தார் என்பது சாதாரணமாகக் கடந்துசெல்லக்கூடிய விடயமல்ல.

அது அவர் தமிழ்மொழியின் மீது கொண்டிருந்த பற்றையும், தம்மிடம் கல்வி கற்கும் மாணவர்கள் சிறந்த அறிவாளிகளாக உருவாக வேண்டும் என்ற அக்கறையையும் எடுத்துக்காட்டுகின்றது.

இன்று கல்வி கற்பிப்பதை ஒரு தொழிலாகவும் வருமானத்திற்கான வழியாகவும் பலர் கருதும் நிலையில், தாம் கற்ற கல்வியை அடுத்த தலைமுறைக்கு வழங்குவதையே பெரும் தொண்டாகக் கருதி வாழ்ந்த ஐயா சிவசேகரனார் போன்ற ஆசிரியர்களை நினைத்துப் பார்க்கும்போது, எமது முன்னைய தலைமுறையினரிடம் இருந்த கல்விப் பற்றின் மகத்துவத்தை உணர முடிகின்றது.

திருகோணமலை நகரில் வாழ்ந்த பல பட்டதாரிகளும் பேராசிரியர்களும் தமிழறிஞர்களும் ஐயா சிவசேகரனாரிடமே தமது தாய்மொழிக் கல்வியைப் பெற்றவர்கள் என்பதை இங்கு நினைவுகூர விரும்புகின்றேன்.

அவ்வாறு பல தலைமுறைகளுக்குக் கல்வி கற்பித்த ஐயா அவர்கள், தாம் பெற்ற தமிழறிவையும் இலக்கியப் புலமையையும் தமக்குள் வைத்துக்கொள்ளாமல் மற்றவர்களுக்கும் வழங்கி மகிழ்ந்தவராவார்.

ஒரு மண்ணின் பெருமை என்பது அந்த மண்ணில் பிறந்த அரசியல் தலைவர்களாலும் செல்வந்தர்களாலும் மட்டும் உருவாவதில்லை. அந்த மண்ணில் வாழ்ந்த ஆசிரியர்கள், தமிழறிஞர்கள், கவிஞர்கள், சமயப் பெரியோர்கள் போன்றவர்களின் அர்ப்பணிப்பான பணிகளாலும் உருவாகின்றது.

அவ்வாறான பெரியோர்களில் ஒருவராகவே எமது திருகோணமலை மண்ணின் கழகப்புலவர் பெ.பொ. சிவசேகரனார் அவர்கள் விளங்குகின்றார்.

அவரது கல்வித் தொண்டினால் பயனடைந்த மாணவர்களும், அவரிடம் தமிழ் கற்றறிந்தவர்களும், அவருடன் நெருங்கிப் பழகியவர்களும் இன்று எங்கு வாழ்ந்தாலும், அவர்களின் நினைவுகளில் ஐயா சிவசேகரனாரின் தமிழ்ப்பற்றும் கற்பித்தல் பணியும் நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

எமது மண்ணில் வாழ்ந்து மறைந்த இவ்வாறான பெரியோர்களின் வாழ்க்கையையும் அவர்கள் ஆற்றிய தொண்டுகளையும் இன்றைய தலைமுறையினருக்கு எடுத்துக்கூறுவதன் மூலமே எமது மண்ணின் வரலாற்றுப் பெருமைகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்ல முடியும்.

எனவே, எங்கள் திருமலை மண்ணின் மூத்த ஆசிரியரும் சிறந்த தமிழறிஞருமான கழகப்புலவர் பெ.பொ. சிவசேகரனார் அவர்களின் கல்வி, தமிழ், சமயத் தொண்டுகளை நினைவுகூர்வதோடு, அவருடன் நேரடியாகப் பழகி, அவரிடமிருந்து தமிழ் இலக்கிய விளக்கங்களைக் கேட்டுக் கற்றுக்கொண்ட அனுபவங்களையும் பகிர்ந்துகொள்வதில் இந்தச் சிவனடியான் பூரண மகிழ்ச்சி கொள்கின்றேன்.

சுவாமி சங்கரானந்தா 🙏

← பிரிவுக்குத் திரும்ப