கட்டுரைகள் · ஈழ வரலாறு
சிறுமலையிலிருந்து கோப்பாய் வரை – முதல் பெண் மாவீரர்
1967ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4ஆம் திகதி மன்னாரில் பிறந்த சகாயசீலி பேதுருப்பிள்ளை என்ற இளம் பெண், இருபது ஆண்டுகளின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண்கள் ஆயுதப் போராட்ட வரலாற்றில் முதல் பெண் மாவீரராகப் பதியப்போகிறார் என்று அன்று எவரும் நினைத்திருக்க மாட்டார்கள்.
மன்னார் மாவட்டத்தின் ஆட்காட்டிவெளியில் வளர்ந்த சகாயசீலிதான் பின்னர் மாலதி என்ற பெயரில் ஆயுதப் போராட்டத்திற்குள் நுழைந்தார். 1987ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ஆம் திகதி கோப்பாயில் இந்திய அமைதிப்படையுடன் நடந்த போரின்போது உயிரிழந்த அவர், விடுதலைப் புலிகளின் போர்க்களத்தில் உயிரிழந்த முதலாவது பெண் போராளியாக வரலாற்றில் இடம்பிடித்தார்.
ஆனால் மாலதியின் வரலாற்றை 1987ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ஆம் திகதியிலிருந்து மட்டும் ஆரம்பிக்க முடியாது. ஒரு மன்னார் தமிழ்ப் பெண் எவ்வாறு ஆயுதப் போராளியாக உருவானார் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குள் பெண்கள் எவ்வாறு நுழைந்தார்கள் என்பதையும் முதலில் பார்க்க வேண்டும்.
பெண்களின் ஆரம்பப் பங்களிப்பு
1976ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உருவாக்கப்பட்டபோது, அது ஆண்களை மட்டுமே கொண்ட ஒரு சிறிய ஆயுத இயக்கமாக இருந்தது. ஆனால் அதன் ஆரம்பப் பயணத்திலேயே பெண்களின் பங்களிப்பும் இருந்தது. அது முதலில் ஆயுதப் பங்களிப்பாக இருக்கவில்லை. இரகசிய உதவிகள், போராளிகளுக்கு அடைக்கலம் வழங்குதல், காயமடைந்தவர்களைப் பாதுகாத்தல், தகவல்களை எடுத்துச் செல்லுதல், அரசியல் மற்றும் பரப்புரைப் பணிகளுக்கு உதவுதல் என்ற வகையிலேயே பெண்கள் அந்தப் போராட்டத்துடன் இணைந்திருந்தனர்.
1978ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களின் முதலாவது பகிரங்க உரிமைகோரல் அறிக்கையை வெளியிட்டனர். அந்த வரலாற்று அறிக்கையைத் தட்டச்சு செய்தவர் ஊர்மிளா தேவி. ஆயுதம் ஏந்திய பெண் போராளிகள் இன்னும் உருவாகாத காலத்திலேயே, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியமான ஆரம்ப அரசியல் நடவடிக்கைகளில் ஒரு பெண்ணின் பங்களிப்பு இருந்தது.
அதன்பின்னர் சாவகச்சேரி காவல் நிலையத் தாக்குதலில் காயமடைந்த சீலனுக்கு நிர்மலா தனது வீட்டில் அடைக்கலம் வழங்கிய வரலாறும் இருந்தது. இவ்வாறு தமிழீழ விடுதலைக்கான போராட்டத்தில் பெண்களின் ஆரம்பப் பங்களிப்பு பெரும்பாலும் ஆதரவாளர்கள் என்ற நிலையிலேயே இருந்தது.
1983க்குப் பின்னர் ஏற்பட்ட மாற்றம்
இந்த நிலை 1983ஆம் ஆண்டுக்குப் பின்னர் மாறத் தொடங்கியது.
திருநெல்வேலித் தாக்குதலும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட 1983ஆம் ஆண்டு ஜூலை இனவன்முறையும் தமிழீழ ஆயுதப் போராட்டத்தின் போக்கையே மாற்றின. அந்த நிலையில் 29 முழுநேர உறுப்பினர்களைக் கொண்டிருந்த விடுதலைப் புலிகள் இயக்கம், இந்திய அரசு தரவிருந்த ஆயுதப் பயிற்சிக்காக தனது ஆளணியை வேகமாக விரிவுபடுத்தத் தொடங்கியது.
தமிழீழத் தளத்தில் பண்டிதரின் கீழ் மாத்தையா, சந்தோசம் மாஸ்டர், பசீர் காக்கா, ஜோகன் பாதர், ராமு போன்றவர்கள் புதியவர்களை இணைக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த அந்தக் காலத்தில்தான், பெண்களையும் ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் பணிக்குள் கொண்டுவரும் முயற்சி உருவாக்கப்பட்டது.
பல்கலைக்கழக மாணவிகளான சாந்தி, ரதி, புனிதா ஆகியோருடன் பல்கலைக்கழக மாணவியாக இல்லாத காமினியும் அந்த ஆரம்பகாலப் பெண்கள் அரசியல் பிரிவுக்குள் உள்வாங்கப்பட்டனர். அப்போதும் பெண்களின் கைகளில் ஆயுதங்கள் கொடுக்கப்படவில்லை. அரசியல் வேலை, பரப்புரை, மக்கள் தொடர்பு, மருத்துவ உதவி போன்ற பணிகளில்தான் அவர்களின் பங்களிப்பு இருந்தது.
ஆனால் பெண்களின் பயணம் அங்கேயே நின்றுவிடவில்லை.
1984ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மாணவர் உண்ணாவிரதப் போராட்டம் அந்த மாற்றத்தின் இன்னொரு முக்கியமான கட்டமாக அமைந்தது. 1983ஆம் ஆண்டு இனவன்முறையால் தென்னிலங்கைப் பல்கலைக்கழகங்களில் கல்வியைத் தொடர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்ட தமிழ் மாணவர்களின் கல்வி உரிமையை முன்வைத்து ஒன்பது மாணவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உண்ணாவிரதத்தில் இறங்கினர்.
அவர்களில் ஜெயா, வனஜா, லலிதா, மதிவதனி ஆகிய நான்கு பெண்களும் இருந்தனர். 1984ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16ஆம் திகதி இரவு உண்ணாவிரதத்தில் இருந்த அந்த மாணவர்கள் விடுதலைப் புலிகளால் அங்கிருந்து அகற்றப்பட்டு இந்தியாவிற்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இந்தக் காலத்தில்தான் பெண்களின் பங்களிப்பு அரசியல் மற்றும் உதவிப் பணிகளுக்குள் மட்டும் இருக்க வேண்டுமா என்ற கேள்விக்கான சிந்தனை எழுந்தது. ஆண்கள் ஆயுதப் பயிற்சி பெறுகிறார்கள் என்றால், பெண்களுக்கும் அதே உரிமையும் பொறுப்பும் இருக்க வேண்டாமா என்ற வகையில் அந்தச் சிந்தனை வலுப்பெற்றது.
அதற்கான வரலாற்றுப் பதில் 1985ஆம் ஆண்டில் கிடைத்தது.
சிறுமலையில் முதல் மகளிர் இராணுவப் பயிற்சி
1985ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ஆம் திகதி இந்தியாவின் தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சிறுமலைக் காட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது மகளிர் இராணுவப் பயிற்சிப் பாசறை ஆரம்பமானது.
அந்த முதலாவது அணியில் 91 பெண் போராளிகள் இருந்தனர்.

அந்த 91 பெண்களில் ஒருவர்தான் மன்னார் ஆட்காட்டிவெளியைச் சேர்ந்த சகாயசீலி பேதுருப்பிள்ளை என்ற மாலதி. தமிழீழ ஆயுதப் போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பை ஒரு புதிய நிலைக்குக் கொண்டு சென்ற அந்த முதலாவது மகளிர் அணியில்தான் மாலதியும் தனது இராணுவ வாழ்க்கையை ஆரம்பித்தார்.
இதற்கு முன்புவரை தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பு பெரும்பாலும் ஆதரவாளர், அரசியல் செயற்பாட்டாளர், மருத்துவ உதவியாளர், பரப்புரைப் பணியாளர் என்ற நிலைகளுக்குள் இருந்தது. சிறுமலைப் பயிற்சியுடன் அந்த எல்லை முறியத் தொடங்கியது. பெண்களும் ஒழுங்கமைக்கப்பட்ட ஆயுதப் போராளிகளாக உருவாக்கப்பட்டனர்.
சிறுமலைப் பயிற்சி சாதாரண முகாம் ஒன்றில் வழங்கப்பட்ட அடிப்படைப் பயிற்சி அல்ல. மலை, காடு, பாறைகள், ஏற்ற இறக்கங்கள் நிறைந்த கடினமான இயற்கைச் சூழலுக்குள் ஒரு கெரில்லாப் போராளியை உருவாக்கும் வகையிலேயே பயிற்சி அமைந்திருந்தது. அதிகாலை ஐந்து மணிக்கே பயிற்சிகள் ஆரம்பமாகும். ஓட்டம், உடற்பயிற்சி, கயிறு ஏறுதல், மலை ஏறுதல், தடைகளைத் தாண்டுதல் என்பவற்றுடன் துப்பாக்கிகளைக் கையாளுதல், ஆயுதங்களைப் பிரித்துப் பொருத்துதல், சூட்டுப் பயிற்சி, அணிநடை, கெரில்லாத் தாக்குதல் முறைகள், புலனாய்வு, அடிப்படை மருத்துவம், அரசியல் வகுப்புகள், தற்காப்புக் கலைகள் எனப் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன.
ஆண் போராளிகளுக்கு வழங்கப்பட்ட இராணுவப் பயிற்சிகளிலிருந்து பெண்களை விலக்கிவைக்காமல், அவர்களையும் முழுமையான போராளிகளாக உருவாக்க வேண்டும் என்பதே அந்தப் பயிற்சியின் அடிப்படையாக இருந்தது.
முதலாவது மகளிர் பயிற்சிப் பாசறையின் முக்கியப் பயிற்சியாளராக விடுதலைப் புலிகளின் ஆரம்பகால இராணுவத் தளபதிகளில் ஒருவரான பொன்னம்மான் செயற்பட்டார். பாரதிராஜா முகாம் பொறுப்பை ஏற்றிருந்தார். செல்வராசா மாஸ்டர், நேசன் ஆகியோரும் பயிற்சிப் பணிகளில் பங்காற்றினர். இந்திரன் மாஸ்டர் அணிநடை மற்றும் ஆயுதச் சூட்டுப் பயிற்சிகளிலும், மனோ மாஸ்டர் கெரில்லாத் தாக்குதல் முறைகளிலும், மாதவன் மாஸ்டர் புலனாய்வுப் பயிற்சிகளிலும், சோதி மாஸ்டர் தற்காப்புப் பயிற்சிகளிலும் பங்காற்றினர். மருத்துவ மற்றும் அரசியல் வகுப்புகளும் அந்தப் பயிற்சியின் பகுதிகளாக இருந்தன.

சிறுமலையில் துப்பாக்கியைச் சுடுவது மட்டும் கற்றுக்கொடுக்கப்படவில்லை. ஒரு போராளி தனது அடிப்படைத் தேவைகளை மற்றவர்களைச் சார்ந்திருக்காமல் நிறைவேற்றக்கூடியவராக இருக்க வேண்டும் என்பதும் பயிற்சியின் ஒரு அங்கமாக இருந்தது. மலையடிவாரத்திலிருந்து உணவுப் பொருட்களை மேலே சுமந்து செல்வது, தங்களது இருப்பிடங்களைத் தாங்களே அமைத்துக்கொள்வது, அடிப்படை வசதிகளை உருவாக்குவது என முகாமின் அன்றாட வாழ்க்கையே அவர்களின் பயிற்சியாக மாறியது.
அந்தச் சிறுமலைக் காட்டில்தான் சகாயசீலி பேதுருப்பிள்ளை என்ற இளம் பெண் மாலதி என்ற ஆயுதப் போராளியாக உருவானார்.
சமூக எல்லைகளைத் தாண்டிய பெண்கள்
அந்தக் காலத்து தமிழ்ச் சமூகத்தின் நிலையை வைத்துப் பார்க்கும்போது இந்த மாற்றத்தின் முக்கியத்துவம் இன்னும் தெளிவாகிறது. பெண் வீட்டுக்குள் இருக்க வேண்டும், தனியாகப் பயணிக்கக்கூடாது, குடும்பத்தின் முடிவுகளுக்குள் வாழ வேண்டும், போர் என்பது ஆண்களுக்குரியது, ஆயுதம் ஆண்களின் கையில்தான் இருக்க வேண்டியது என்ற எண்ணங்கள் வலுவாக இருந்த காலம் அது.
அத்தகைய சமூகச் சூழலிலிருந்து வந்து சிறுமலையில் பயிற்சியை முடித்த பெண்கள் பின்னர் தாயகம் திரும்பினர். மன்னார் மாவட்டத் தளபதி விக்டரின் கட்டுப்பாட்டில் பெண் போராளிகளும் நேரடிப் போருக்குத் தயாராக்கப்பட்டனர்.
பெண்களின் முதல் போர்க்களம்
1986ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி தளபதி விக்டர் தலைமையில், மன்னார் தீவைப் பிரதான நிலப்பரப்புடன் இணைக்கும் சுமார் இரண்டு மைல் நீளமான கடல்வழித் தரைப்பாதையில் அமைந்திருந்த பாலம் தகர்க்கப்பட்டது.
செப்டம்பர் மாதம் 2ஆம், 3ஆம், 4ஆம் திகதிகள் ஆகிய மூன்று நாட்கள் தொடர்ந்து மன்னார் தீவில் உள்ள கோட்டைப் பகுதி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. அந்த நேரத்தில் களமுனையின் ஒரு பகுதியில் தீபா தலைமையில், முன்னேறிவரும் இராணுவத்தைத் தடுக்கும் நடவடிக்கையில் முதல்முதலாகப் பெண் போராளிகள் களமிறங்கினர்.
அதன் பின்னர், அதே தீபாவின் தலைமையில் மீண்டும் 1986ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12ஆம் திகதி மன்னார் அடம்பன் பகுதியில் நடந்த மிகப் பெரிய போரே மகளிர் அணியின் ஆரம்பகால நேரடிப் போர்க்களங்களில் முக்கியமானதாக அமைந்தது. சிறுமலையில் ஆயுதத்தைக் கையாளக் கற்ற பெண்கள் இப்போது உண்மையான போர்க்களத்தில் சிறிலங்கா இராணுவத்தை எதிர்கொண்டனர்.
அதுவரை பெண்கள் அரசியல் பணியாளர்கள், மருத்துவ உதவியாளர்கள், பரப்புரையாளர்கள் என்ற நிலைகளில் இருந்து வந்திருந்தால், அடம்பனுக்குப் பின்னர் அவர்கள் ஆயுதப் போராட்டத்தின் நேரடிப் பங்காளிகளாகவும் மாறியிருந்தனர்.
மாலதியும் அந்த முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்.

ஆனால் மாலதி என்ற பெயரை தமிழீழம் முழுவதும் அறியச் செய்த சம்பவம் 1987ஆம் ஆண்டில்தான் நடந்தது.
இந்திய–இலங்கை ஒப்பந்தத்திலிருந்து ஆயுத மோதல் வரை
1987ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் திகதி இந்திய–இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தானது. அதனைத் தொடர்ந்து இந்திய அமைதிப்படை வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்குள் வந்தது. இந்தியா தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு ஒரு தீர்வைப் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கை அப்போது தமிழ் மக்களின் பெரும் பகுதியிடம் இருந்தது.
அந்த நம்பிக்கையின் அடிப்படையில் விடுதலைப் புலிகளும் ஆயுத ஒப்படைப்பை ஆரம்பித்தனர்.
ஆனால் அந்த நம்பிக்கை நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை.
1987ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் திலீபனின் உண்ணாவிரதப் போராட்டமும் அவரது மரணமும் நிகழ்ந்தன. அதன்பின்னர் இந்திய அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான உறவு வேகமாக மோசமடைந்தது. அக்டோபர் மாதத்தை அடைந்தபோது நேரடி ஆயுத மோதல் தவிர்க்க முடியாத நிலையை எட்டியிருந்தது.
1987ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 9ஆம் திகதியிலிருந்து இந்திய அமைதிப்படையின் இராணுவ நடவடிக்கைகள் தீவிரமடைந்தன. மறுநாள் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் இந்திய இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான நேரடிப் போர் ஆரம்பமானது.
இந்தியாவின் மீது வைத்திருந்த நம்பிக்கையில் கீழே வைக்கப்பட்ட ஆயுதங்களை மீண்டும் கையில் எடுக்க வேண்டிய நிலை விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்டது.
அந்தப் போரின் ஆரம்ப நாளிலேயே மாலதியின் இறுதி நாளும் வந்தது.
கோப்பாயில் மாலதியின் இறுதி நாள்
1987ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ஆம் திகதி கோப்பாய் கிறேசர் வீதிப் பகுதியில் பெண் போராளிகள் தயார் நிலையில் இருந்தனர். மாலதி, கஸ்தூரி, விஜி, ஜெனா, தயா, ரஞ்சி உள்ளிட்ட பெண் போராளிகள் அந்த அணியில் இருந்தனர். அவர்களிடம் AK-47 துப்பாக்கிகள் இருந்தாலும் போதுமான ரவைகள் இருக்கவில்லை. அனைவரிடமும் முறையான ரவைப் பைகள் கூட இருக்கவில்லை. கிடைத்த ரவைகளைத் துணிகளில் கட்டிக்கொண்டு போரிட வேண்டிய சூழல் இருந்தது.
நாவற்குழிப் பக்கத்திலிருந்து இந்திய இராணுவம் முன்னேறியபோது இரு தரப்பினருக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை ஆரம்பமானது. எண்ணிக்கையிலும் ஆயுத பலத்திலும் அதிகமாக இருந்த இந்திய இராணுவத்தை எதிர்த்துப் பெண் போராளிகள் போரிட்டனர்.
சண்டை நீடித்தது. அவர்களிடம் இருந்த ரவைகள் குறைந்துகொண்டே சென்றன. இந்திய இராணுவம் அதிக எண்ணிக்கையில் முன்னேறிய நிலையில் அதே இடத்தில் தொடர்ந்து நின்று போரிட முடியாத சூழல் ஏற்பட்டது. பெண் போராளிகள் பின்வாங்கத் தொடங்கினர்.
அந்தப் போரின்போதுதான் மாலதி குண்டுக்காயமடைந்தார்.
காயமடைந்த மாலதியால் நடக்க முடியவில்லை. அவருடன் இருந்த விஜி அவரை அங்கிருந்து கொண்டு செல்ல முயன்றார். ஆனால் இந்திய இராணுவம் நெருங்கிக்கொண்டிருந்தது.
அந்த நேரத்திலும் மாலதியின் கவலை தனது உயிரைப் பற்றியதாக மட்டும் இருக்கவில்லை. தனது ஆயுதம் எதிரியின் கைகளுக்குச் சென்றுவிடக்கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். தன்னை விட்டுவிட்டுத் தனது ஆயுதத்தை எடுத்துச் செல்லுமாறும், அந்த ஆயுதத்தை அண்ணையிடம் கொடுக்குமாறும் விஜியிடம் மாலதி கேட்டார்.
“என்னை விட்டிட்டு ஆயுதத்தைக் கொண்டுபோ. என் ஆயுதத்தை அண்ணையிடம் கொடு” என்ற பொருளில்தான் அவரது இறுதி வேண்டுகோள் பின்னர் சக போராளிகளின் நினைவுகளில் வாழ்ந்தது.
தன்னை மீட்பதற்காக மற்ற போராளிகளும் அங்கே சிக்கிக்கொள்ளக்கூடாது, தனது ஆயுதம் எதிரியிடம் செல்லக்கூடாது, இந்திய இராணுவத்தின் கைகளில் தான் உயிருடன் சிக்கக்கூடாது என்ற முடிவுடன் தனது ஆயுதத்தைச் சக போராளியிடம் ஒப்படைத்த மாலதி, கழுத்தில் அணிந்திருந்த சயனைட்டை உட்கொண்டார்.
1987ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ஆம் திகதி கோப்பாய் மண்ணில் சகாயசீலி பேதுருப்பிள்ளை என்ற மாலதியின் இருபது ஆண்டுகால வாழ்க்கை முடிவடைந்தது.
போர்க்களத்தில் உயிரிழந்த முதல் பெண் போராளி
விடுதலைப் புலிகளின் பெண் போராளிகளில் நேரடிப் போரின்போது உயிரிழந்த முதலாவது பெண் மாலதி.
அவருக்கு முன்பாகப் பெண்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவளித்திருந்தார்கள். அரசியல் வேலைகளில் ஈடுபட்டிருந்தார்கள். பரப்புரை செய்திருந்தார்கள். காயமடைந்த போராளிகளைப் பாதுகாத்திருந்தார்கள். பின்னர் ஆயுதப் பயிற்சியும் பெற்றிருந்தார்கள். நேரடிப் போர்க்களத்திலும் நின்றிருந்தார்கள்.
ஆனால் அந்தப் பெண் போராளிகள் வரிசையில் போர்க்களத்தில் உயிரிழந்த முதல் பெயர் மாலதி.
அதனால்தான் அவரது மரணம் ஒரு தனிப்பட்ட பெண் போராளியின் மரணமாக மட்டும் நின்றுவிடவில்லை. தமிழீழப் பெண்கள் ஆயுதப் போராட்டத்தின் நேரடிப் பங்காளிகளாக மாறிவிட்டார்கள் என்பதை அடையாளப்படுத்திய ஒரு வரலாற்றுப் புள்ளியாக அது அமைந்தது.
அதன்பின்னர் அக்டோபர் மாதம் 10ஆம் திகதி விடுதலைப் புலிகளின் நினைவுகூரல் மரபில் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டது.

மாலதிக்குப் பின்னர் விரிந்த பெண்களின் இராணுவப் பங்களிப்பு
மாலதிக்குப் பின்னர் பெண்களின் இராணுவப் பங்களிப்பு மேலும் விரிவடைந்தது. சிறுமலையில் 91 பெண்களுடன் ஆரம்பித்த அந்தப் பயணம் பின்னர் ஆயிரக்கணக்கான பெண் போராளிகளை உருவாக்கியது. பெண்களே அடுத்த தலைமுறைப் பெண்களுக்குப் பயிற்சி வழங்கினர். பெண் தளபதிகள் உருவானார்கள். தனியான மகளிர் படையணிகள் உருவாக்கப்பட்டன.
காலாட்படை முதல் கனரக ஆயுதப் பிரிவுகள் வரை பெண்கள் சென்றார்கள். எதிர்கவசம், வானெதிர்ப்பு ஆயுதம், மருத்துவம், தகவல் தொடர்பு, புலனாய்வு, அரசியல், நிர்வாகம், கடற்படை எனப் பல்வேறு கட்டமைப்புகளுக்குள் பெண்களின் பங்களிப்பு விரிந்தது.
பின்னர் மாலதியின் பெயரிலேயே ஒரு மகளிர் படையணியும் உருவாக்கப்பட்டது.
ஆனால் மாலதியின் முக்கியத்துவம் அவரது பெயரில் ஒரு படையணி உருவாக்கப்பட்டதில் மட்டும் இல்லை.
ஒரு சமூக மாற்றத்தின் அடையாளம்
தமிழ்ச் சமூகத்தில் பெண்களின் இடம் வேகமாக மாறத் தொடங்கிய ஒரு காலத்தின் அடையாளமாகவும் மாலதி இருந்தார். பெண் வீட்டுக்குள் மட்டுமே வாழ வேண்டியவர் என்ற நிலையைத் தாண்டி, தனது அரசியல் முடிவைத் தானே எடுக்கக்கூடியவர், ஒரு இயக்கத்தில் இணையக்கூடியவர், கடினமான இராணுவப் பயிற்சியை எதிர்கொள்ளக்கூடியவர், போர்க்களத்தில் நேரடியாக நிற்கக்கூடியவர் என்ற மாற்றத்தின் முதல் தலைமுறைக்குள் மாலதி இருந்தார்.
ஆயுதம் ஏந்துவதே பெண் விடுதலையின் முழுமையான அளவுகோல் அல்ல. பெண்ணின் முழுமையான விடுதலை கல்வி, பொருளாதார சுதந்திரம், குடும்பத்திற்குள் சம உரிமை, சமூக மற்றும் அரசியல் தீர்மானங்களில் சம பங்கு, தனது வாழ்க்கையைத் தானே தீர்மானிக்கும் உரிமை எனப் பல பரிமாணங்களைக் கொண்டது.
ஆனால் பெண்களால் முடியாது என்று காலங்காலமாக வரையப்பட்டிருந்த பல சமூக எல்லைகளை அந்தத் தலைமுறை உடைத்தது என்பதையும் மறுக்க முடியாது.
அந்த மாற்றத்தின் ஆரம்பத் தலைமுறையில் மாலதியும் ஒருவர்.

மன்னார் ஆட்காட்டிவெளியில் வளர்ந்த சகாயசீலி பேதுருப்பிள்ளை, தமிழ்நாட்டின் சிறுமலைக் காட்டில் முதலாவது மகளிர் அணியுடன் இராணுவப் பயிற்சி பெற்றார். தாயகம் திரும்பினார். நேரடிப் போர்க்களத்தில் நின்றார். இறுதியாக 1987ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ஆம் திகதி கோப்பாயில் இந்திய இராணுவத்துடனான போரில் உயிரிழந்தார்.
அவர் வாழ்ந்தது இருபது ஆண்டுகள் மட்டுமே.
ஆனால் அந்த இருபது ஆண்டுகளின் இறுதிக் காலம் தமிழீழப் பெண்களின் ஆயுதப் போராட்ட வரலாற்றோடு அவரது பெயரைப் பிரிக்க முடியாதபடி இணைத்துவிட்டது.
ஒரு காலத்தில் போராட்டத்திற்கு ஆதரவளித்த பெண்களிலிருந்து அரசியல் செயற்பாட்டாளர்கள் உருவானார்கள். அந்த அரசியல் செயற்பாட்டாளர்களின் பின்னால் ஆயுதப் பயிற்சி பெற்ற பெண்கள் உருவானார்கள். சிறுமலையில் பயிற்சி பெற்ற அந்த முதல் 91 பெண் போராளிகளிலிருந்து நேரடிப் போர்க்களத்திற்குச் சென்ற தலைமுறை உருவானது.
அந்தப் பாதையில் போர்க்களத்தில் முதலில் உயிரிழந்தவர் மாலதி.
ஆகவே மாலதியின் வரலாறு ஒரு பெண் போராளியின் இறுதி நாளைப் பற்றிய வரலாறு மட்டும் அல்ல. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பு ஆதரவாளர்கள் என்ற நிலையிலிருந்து அரசியல் செயற்பாட்டாளர்கள், ஆயுதப் போராளிகள், தளபதிகள் எனப் பரிணமித்த ஒரு காலத்தின் நீண்ட வரலாற்றின் முதல் பெயராக மாலதியின் பெயர் நிலைத்து நிற்கின்றது.
சுவாமி சங்கரானந்தா 🙏


வாசகர் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…