கட்டுரைகள் · ஈழ வரலாறு
சிங்களப் பேரினவாதத்தின் கொடூரங்களை மறந்துவிட்டு விடுதலைப் புலிகளைப் பரிகாசிப்பவர்களுக்கு ஒரு வரலாற்றுப் பதிவு!

சுவாமி சங்கரானந்தா
திருகோணமலை மாவட்டத்தில் சிங்களப் பௌத்தப் பேரினவாதத்தால் தமிழர்கள் அனுபவித்த கொடுமைகளைப் பற்றிப் பேசும்போது, பலருக்கும் 1983ஆம் ஆண்டு கறுப்பு யூலை இனவன்முறைகள்தான் நினைவுக்கு வருகின்றன. ஆனால் அதற்கு முன்னரும் அதன் பின்னரும் திருகோணமலையின் பல பகுதிகளில் அப்பாவித் தமிழர்கள் தாக்கப்பட்டதும், கொல்லப்பட்டதும், அவர்களுடைய வீடுகளும் சொத்துகளும் தீக்கிரையாக்கப்பட்டதும் மறந்துவிடக்கூடிய வரலாறு அல்ல.
அத்தகைய கொடுமைகளில் ஒன்றாக, திருகோணமலை பன்குளத்தில் செல்லத்துரை என்ற அப்பாவித் தமிழ்க் குடும்பத் தலைவர் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்த வாய்மொழிச் சாட்சி இன்றும் என் நினைவில் நிற்கின்றது.
திருகோணமலை உவர்மலைப் பகுதியைச் சேர்ந்த, ஐந்து பிள்ளைகளின் தந்தையான செல்லத்துரை, மனைவியுடனும் பிள்ளைகளுடனும் குடும்ப வாழ்க்கையை நடத்திவந்த ஒரு சாதாரண உழைப்பாளி.
அவர் அரசியல் அதிகாரத்திற்காகப் போட்டியிட்டவரல்ல. ஆயுதம் ஏந்திப் போராடியவரல்ல. மற்றவர்களுக்குத் தீங்கு விளைவிக்க நினைத்தவருமல்ல. ஓர் அரச ஊழியராக இருந்து ஓய்வூதியம் பெற்றுக்கொண்டு, தனது குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக உழைத்த ஒரு விவசாயி.
அவர் திருகோணமலை நகருக்குப் பத்து மைல் தொலைவில் அமைந்துள்ள பன்குளத்தில் வயல் வைத்து விவசாயம் செய்துவந்ததால், தனது வயல் வேலைகளுக்காக அங்கு சென்று தங்குவது வழக்கம்.
அவ்வாறு ஒரு வார இறுதியில் தனது வயலுக்குச் சென்று தங்கியிருந்தபோது, 1977ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3ஆம் திகதி தந்தை செல்வா என அழைக்கப்படும் எஸ். ஜே. வி. செல்வநாயகத்தின் அஸ்தி திருகோணமலைக்குக் கொண்டுவரப்பட்டதன் காரணமாக,
திருகோணமலைப் பகுதியில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் அரசின் தூண்டுதலால் சிங்களப் படைகளின் ஒத்துழைப்போடு தீவிரமடைந்திருந்தன.
சிங்கள இனவெறிக் கும்பல்கள் தமிழர்களின் வீடுகளையும் வணிக நிலையங்களையும் தாக்கின. தமிழர்களின் கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன.
தமிழ்ப் பொதுமக்கள் தாக்கப்பட்டனர். பெண்களும் குழந்தைகளும் முதியவர்களும் பாதுகாப்பற்ற சூழலுக்குத் தள்ளப்பட்டனர்.
அந்தக் கொடூரமான சூழ்நிலையில், தான் தங்கியிருந்த பன்குளப் பகுதியில் இருந்து, 1977ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6ஆம் திகதி திருகோணமலையில் உள்ள தனது வீட்டுக்கு மிதிவண்டியில் திரும்பிக்கொண்டிருந்த செல்லத்துரை அவர்கள் சிங்கள வன்முறைக் கும்பலின் பிடியில் சிக்கிக்கொண்டார்.
வயல் வேலைக்காகச் சென்றிருந்த அவரைச் சிங்கள வன்முறையாளர்கள் பிடித்து, கடுமையாகத் தாக்கி, கை, கால்களை வெட்டி, நெல் மூட்டைகளுடன் அவரைப் போட்டுத் தீ வைத்து எரித்துக் கொன்றார்கள்.
உறவுகளே!
ஒரு மனிதனை அடித்துக் கொல்வதே கொடூரம் என்னும்போது, அவரைத் தீயிட்டு எரித்துக் கொல்வது என்பது எத்தகைய மனிதநேயமற்ற செயல் என்பதை நீங்களே எண்ணிப் பாருங்கள்.
அந்த மனிதர் யாருக்காக உழைத்தார்? தனது மனைவிக்காகவும் ஐந்து பிள்ளைகளுக்காகவும்தானே!
வயலுக்குச் சென்ற தந்தை மீண்டும் வீட்டுக்கு வருவார் என்று எதிர்பார்த்திருந்த குடும்பத்திற்கு ஏற்பட்ட இழப்பை யாரால் ஈடுசெய்ய முடியும்?
இவ்வாறு அந்தக் கொடூர பௌத்த சிங்களப் பேரினவாதிகளால் ஒரு தந்தையின் உயிர் மட்டுமல்ல, ஒரு குடும்பத்தின் பாதுகாப்பும் எதிர்கால நம்பிக்கையும் சிதைக்கப்பட்டன.
இது ஒரு குடும்பத்தின் துயரம் மட்டுமல்ல. இவ்வாறு கொடுமைக்குள்ளான பல தமிழர்கள் தமது சொந்த மண்ணிலேயே எவ்வாறு பாதுகாப்பற்றவர்களாக மாற்றப்பட்டார்கள் என்பதை உணர்த்தும் வேதனையான சம்பவங்கள் ஆயிரம் இருக்கின்றன.
இவ்வாறான கொடூரங்கள் மற்றும் தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்கள் திருகோணமலையில் நடைபெற்ற அந்தக் காலங்களில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அங்கு உருவாகியிருக்கவில்லை.
பின்னாளில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் தாக்குதல் தளபதியாக விளங்கிய சீலன் என்ற சார்ல்ஸ் அன்ரனியும்கூட அப்போது அந்த இயக்கத்தில் இணைந்திருக்கவில்லை.
அப்படியானால், அப்பாவித் தமிழர்கள் எதற்காகத் தாக்கப்பட்டார்கள்?
செல்லத்துரை போன்ற சாதாரண விவசாயிகள் எதற்காகக் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள்?
விடுதலைப் புலிகள் என்பதற்காகவா? இல்லை, தமிழர்கள் என்பதற்காகவா?
தமிழர்களுக்கு இத்தகைய கொடுமைகளை இழைத்த இலங்கை பௌத்தப் பேரினவாத அரசாங்கத்தினதும், அதன் பாதுகாப்புப் படைகளினதும் தமிழ் மக்கள் மீதான கொலைகளை மூடிமறைத்து வக்காலத்து வாங்கிக்கொண்டு,
அந்த அநீதிகளால் உதயமாகி, அந்த அநீதிகளுக்கு எதிராகப் போராடிய விடுதலைப் புலிகளுக்குப் பாசிசப் பட்டம் கட்ட முனையும் ஒட்டுக்குழுக்களும், தமிழ்த் தேசிய அரசியலைக் கண்டு ஒவ்வாமை அடையும் தனிநபர்களும், ஞானம் பெற்ற மனிதாபிமானிகள் போல் பேசாமல்,
அப்பாவித் தமிழ் மக்கள் மீது சிங்களப் பௌத்தப் பேரினவாதத்தால் நடத்தப்பட்ட இனவன்முறைகளைப் பற்றித் தெரிந்துகொண்டு, தமிழர்களின் ஆயுதப் போராட்டம் வளர்ச்சியடைந்ததற்கான வரலாற்றுப் பின்னணியைப் புரிந்துகொண்டு, இப்போது களத்தில் இல்லாத புலிகளையும் அவர்கள் முன்னெடுத்த ஆயுதப் போராட்டத்தையும் விமர்சிக்க வேண்டும்.
சிங்களப் பௌத்தப் பேரினவாதத்தால் தமிழர்களின் அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்டதும், அகிம்சை வழியிலான போராட்டங்கள் பலனளிக்காமல் போனதும், தமிழர்களின் உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உருவானதும் ஆயுதப் போராட்டம் தோன்றக் காரணமானது என்ற வரலாற்று உண்மையை உணர்ந்து,
அமைதியான ஒரு சமூகத்திற்குள் விடுதலைப் புலிகள் என்ற ஓர் ஆக்ரோஷமான அமைப்பு பிறப்பெடுக்கக் காரணமானவர்கள் காலங்காலமாக இலங்கை என்ற பௌத்த மேலாதிக்க நாட்டை ஆண்டுவரும் சிங்களப் பேரினவாதிகளே என்ற உண்மையை வரலாற்றில் பதிவிடத் தயங்கும் அனைவரும், தமிழ்த் தேசியத்திற்குப் பலன்தராத சிங்களத்தின் அடிவருடிகள் என்பதோடு, சிங்களத்தின் நலத்தை மேவும் கறுப்பு ஆடுகள் என ஆணித்தரமாகப் பதிவு செய்கின்றேன்.

வாசகர் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…