கட்டுரைகள் · ஈழ வரலாறு · வரலாற்றுக் கருத்துக் கட்டுரை
ஒபரோய் தேவனுக்குப் புலிகளால் வழங்கப்பட்ட மரண தண்டனை — அதன் பின்னணி என்ன?
ஈழத் தமிழ் ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பகாலத்தில் தங்கத்துரை, குட்டிமணி ஆகியோருடன் இணைந்து செயற்பட்டு, பின்னர் தமிழீழ விடுதலை இராணுவம் என்ற தனியான இயக்கத்தை வழிநடத்தியவர் ஒபரோய் தேவன்.
தங்கத்துரை–குட்டிமணியுடன் இருந்த காலத்தில் விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணிய அவரது வாழ்க்கை, பின்னாளில் ஏற்பட்ட முரண்பாடுகளுக்கு மத்தியில், 1983ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி புலிகளால் அவருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையுடன் முடிவுக்கு வந்தது.
ஒப்ரோய் தேவனின் ஆரம்பகால அரசியல் ஈடுபாடு
1958ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பிறந்த குலசேகரம் தேவசேகரம், கொழும்பிலுள்ள லங்கா ஒபரோய் விடுதியில் பணியாற்றியதால், தேவன் என்ற அவரது பெயருடன் ஒபரோய் என்பதும் இணைந்து, ஒபரோய் தேவன் எனப் பலராலும் அறியப்பட்டார்.
ஒபரோய் தேவனது அரசியல் ஈடுபாடு என்பது அவர் ஆயுத இயக்கத்தில் இணைந்த பின்னர் தோன்றியதல்ல.
மாத்தளையில் கல்வி கற்ற தேவன், 1974ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதி மீண்டும் யாழ்ப்பாணத்தில் குடியேறிய பின்னர், தமிழர் விடுதலைக் கூட்டணியின் கூட்டங்களிலும் கருத்தரங்குகளிலும் கலந்துகொண்டு, அதன் தலைவர்களின் பேச்சுகளால் கவரப்பட்டார்.
அதே ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் திகதி தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாள் நிகழ்வின்போது ஏற்பட்ட பொலிஸ் வன்முறையில் அவரும் அகப்பட்டுக்கொண்டார்.
அந்த அனுபவமும், பின்னர் பொன். சிவகுமாரனின் மரணமும் அவரது அரசியல் பயணத்தில் தாக்கத்தை ஏற்படுத்தின.
கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் கல்வி பயின்றுகொண்டிருந்த உரும்பிராய் குலசிங்கத்துடன் தேவனுக்குத் தொடர்பு ஏற்பட்டது. நாட்டு விடுதலையில் தீவிரப் பற்றும் துணிச்சலும் கொண்டிருந்த குலசிங்கத்தின் அறிவுரைகளால் தேவன் கவரப்பட்டார். ஆனால், அவர்களுக்கிடையில் தொடர்பு ஏற்பட்டு சில நாட்களுக்குள்ளேயே குலசிங்கம் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டார்.
அப்போது பதினாறு வயதுடையவராக இருந்த தேவன், இளைஞர் பேரவையைச் சேர்ந்தவர்களுடன் தொடர்புகொள்ள முயன்றபோதெல்லாம், சிறுவனாகக் கருதப்பட்டார். சிலர் பொலிஸாரால் கைது செய்யப்படக்கூடும் என எச்சரித்தனர். என்றாலும், தமிழர் கூட்டணி நடத்திய மாநாடுகள், சட்டமறுப்புப் போராட்டங்கள், ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் ஆகியவற்றில் தொடர்ந்து கலந்துகொண்டார்.
1976ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில், சிறையிலிருந்த இளைஞர்கள் தங்களை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் அல்லது விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக வெளியே நடத்தப்பட்ட உண்ணாவிரதப் போராட்டங்களில், கொக்குவில் மஞ்சவனப்பதியிலும் நல்லூர் வீரமாகாளி அம்மன் ஆலயத்திலும் தேவன் கலந்துகொண்டார். இந்தப் போராட்டங்களின் ஊடாக இளைஞர் பேரவைத் தலைவர்களில் ஒருவராக இருந்த பரந்தன் ராஜனுடன் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது.
இவ்வாறான காலப்பகுதியில், நல்லூர் வீரமாகாளி அம்மன் ஆலயத்தில் தேவன் உண்ணாவிரதத்தில் இருந்தபோது, சிறையிலிருந்து விடுதலையான குலசிங்கத்துடன், அவரோடு விடுதலையான சிறிசபாரத்தினமும் வேறு சிலரும் அங்கு வந்தனர். அப்போது குலசிங்கம் அவர்களைத் தேவனுக்கு அறிமுகப்படுத்தினார்.

இதன் காரணமாகத் தேவனுக்குச் சிறிசபாரத்தினத்துடன் தொடர்பு ஏற்பட்டது என்றாலும், ஒபரோய் தேவன் பரந்தன் ராஜனுடன் இணைந்து, அவர் நடத்திவந்த பண்ணையில் மற்ற இளைஞர்களுடன் தங்கி, விவசாய நூல்களைப் படிப்பதிலும் கலந்துரையாடல்களிலும் பங்குகொண்டார்.
இந்தக் காலப்பகுதியில், பரந்தன் ராஜன் சக உறுப்பினர்களுடன் பழகும்போது, தன்னை மற்றவர்களைவிட வல்லவராகவும் உயர்ந்தவராகவும் காட்டிக்கொள்ளும் போக்கைக் குறைபாடாகக் கண்டதால், ஒபரோய் தேவன் ராஜனிடமிருந்து விலகினார்.
பின்னர் சிறிசபாரத்தினத்தின் தொடர்பினைப் பயன்படுத்தி, தங்கத்துரையும் குட்டிமணியும் தனிக் குழுவாக இயங்கிய அந்தக் காலத்தில், KT Group என அழைக்கப்பட்ட அந்தக் குழுவில் ஒபரோய் தேவனும் இணைந்து செயற்பட்டார்.

டெலோ–புலிகள் புரிந்துணர்வும் கூட்டு நடவடிக்கையும்
அந்தக் காலகட்டத்தில் இயக்கங்கள் இன்றைய அரசியல் கட்சிகளைப் போன்ற தெளிவான கட்டமைப்புகளுடன் இயங்கவில்லை என்பதோடு, தலைமறைவுச் செயற்பாடுகள், தனிப்பட்ட நட்புகள், ஒருவருக்கொருவர் செய்த உதவிகள், ஆயுதங்களையும் மறைவிடங்களையும் பகிர்ந்துகொண்டமை ஆகியவற்றின் ஊடாகப் புரிந்துணர்வுடன் செயற்பட்டன. அந்த வகையில், பின்னர் தனித்தனி இயக்கங்களின் தலைவர்களாக மாறிய பலரும் ஆரம்பத்தில் ஒருவருடன் ஒருவர் இணைந்து செயற்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், தங்கத்துரை தலைமையில் இயங்கிய KT Group அணியினர், தம்பிதுரை முத்துக்குமாரசாமியால் உருவாக்கப்பட்டு, அப்போது செயலற்ற நிலையில் இருந்த தமிழீழ விடுதலை இயக்கத்தின் பெயரை, அவரது அனுமதியுடன் பயன்படுத்தத் தொடங்கினர்.
அவ்வாறு அந்த அணி தமிழீழ விடுதலை இயக்கம் என்ற பெயரில் இயங்கியபோதும், தேவன் அதன் உறுப்பினராகவே தொடர்ந்தார்.
இந்த நிலையில், வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையில் இருந்த விடுதலைப் புலிகள் அமைப்பில் 1980களின் ஆரம்பத்தில் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து, அதிலிருந்து வெளியேறிய சிலர் வேறு புதியவர்களுடன் இணைந்து, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் என்ற PLOTE அமைப்பை உருவாக்கினார்கள்.
இக்காலப்பகுதியில், வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையில் தொடர்ந்து நீடித்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு, தமிழீழ விடுதலை இயக்கத்துடன் புரிந்துணர்வின் அடிப்படையில் இணைந்து செயற்பட்டது.
இவ்வாறான காலப்பகுதியில், ஒபரோய் தேவனுக்குப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் நெருங்கிப் பழகும் அறிமுகம் கிடைத்திருந்தது.

அவ்வாறு இணைந்து செயற்பட்ட டெலோ மற்றும் புலிகள் இயக்கங்களின் ஒத்துழைப்பின் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாக, 1981ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25ஆம் திகதி நடைபெற்ற நீர்வேலி வங்கிக் கொள்ளை அமைந்தது. அதில் தங்கத்துரை–குட்டிமணி தலைமையிலான டெலோ அணியினரும் பிரபாகரன் தலைமையிலான புலிகளும் இணைந்து செயற்பட்டனர்.
இவ்வாறு அந்தக் கொள்ளை, இணைந்து செயற்பட்ட இரு இயக்கத்தினராலும் வெற்றிகரமாக நடத்தப்பட்டாலும், எவரும் எதிர்பார்க்காத வகையில், இந்தக் கொள்ளையில் ஈடுபட்ட தங்கத்துரையும் குட்டிமணியும் 1981ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி இரவு கைது செய்யப்பட்டனர். தமிழ்நாட்டுக்குச் செல்வதற்காகப் படகை எதிர்பார்த்து மணற்காடு கடற்கரையில் காத்திருந்த வேளையில், இலங்கை அரசுப் படைகளால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
தங்கத்துரையும் குட்டிமணியும் கைது செய்யப்பட்ட பின்னரும், விடுதலைப் புலிகளும் தமிழீழ விடுதலை இயக்கமும் புரிந்துணர்வின் அடிப்படையில் தொடர்ந்து செயற்பட்டன.
அந்தக் காலத்தில்தான், புலிகளின் பெயரைப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், சுந்தரம் என்ற சதாசிவம் சிவசண்முகமூர்த்திக்கு 1982ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி புலிகளால் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அந்த நடவடிக்கைக்கு உரிமைகோரி, அதற்கான காரணத்தை விளக்கிப் புலிகள் வெளியிட்ட “துரோகத்திற்கான பரிசு” என்ற துண்டுப் பிரசுரத்தைச் சிறிசபாரத்தினமே இந்தியாவிலிருந்து கொண்டுவந்தார்.
டெலோவிலிருந்து வெளியேறிய ஒப்ரோய் தேவன்

இவ்வாறு புலிகளுடன் இணைந்து செயற்பட்ட காலத்தில், புலிகளின் வெற்றிகரமான தொடர் தாக்குதல்களால் அந்த இயக்கம் அபரிமிதமான வளர்ச்சி அடைவதைக் கண்ட டெலோ தலைமை, புலிகள் மீது பொறாமைகொண்டு, புலிகள் மீதான தனது வெறுப்பைத் தமது உறுப்பினர்களிடையே விதைத்துக்கொண்டே வந்தது.
இவ்வாறு விதைக்கப்பட்ட புலிகள் மீதான வெறுப்பு, டெலோ இயக்க உறுப்பினராக இருந்த ஒபரோய் தேவனிடமும் இருந்ததனால், சிறிசபாரத்தினத்தின் தலைமை நடத்தையில் அதிருப்தி ஏற்பட்டு, அதனால் உருவான உள்முரண்பாடுகளுக்கு மத்தியில் டெலோ அமைப்பிலிருந்து வெளியேறியபோது, தமிழீழ விடுதலை இராணுவம் என்ற டெலா இயக்கத்தை வழிநடத்தினாரே அன்றி, ஏற்கெனவே தனக்கு அறிமுகமான புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் இணைந்து செயற்பட முன்வரவில்லை.
தமிழீழ விடுதலையையே இலக்காகக் கொண்டிருந்த ஒபரோய் தேவன், தனது சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக டெலோ அமைப்பிலிருந்து வெளியேறி, இரட்டை எண்ணிக்கையிலான உறுப்பினர்களைக் கொண்டு 1983ஆம் ஆண்டு தனியான இயக்கத்தை உருவாக்குவதற்குப் பதிலாக, தமிழீழ மக்களின் நலன் கருதி ஏற்கெனவே செயற்பட்ட இயக்கங்களுடன் இணைந்து பணியாற்றியிருக்க வேண்டும். தலைமைக்கு ஆசைகொண்டு 36 இயக்கங்களின் தலைவர்களில் ஒருவராக இருப்பதைவிட, தமிழீழ விடுதலைக்காகச் செயற்பட்ட சக்திகளை ஒன்றிணைப்பதற்கே முன்னுரிமை கொடுத்திருக்க வேண்டும்.
தமிழீழ விடுதலை இராணுவத்தை உருவாக்கிய ஒபரோய் தேவன், அவர் இருந்த காலத்தில் குறிப்பிட்டுக் கூறும்படியான எந்தவிதமான இராணுவ நடவடிக்கையையும் இலங்கை அரசுப் படைகளுக்கு எதிராக மேற்கொள்ளவில்லை.
புலிகளின் பெயரில் கப்பம் பெற்ற குற்றச்சாட்டும் இறுதி நடவடிக்கையும்
மாறாக, மக்களுக்கு அறிமுகமில்லாத தனது டெலா இயக்கத்தின் பெயரைப் பயன்படுத்தி, யாழ்ப்பாண நகர வர்த்தகர்களிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கப்பம் கேட்காமல், புலிகளின் பெயரைப் பயன்படுத்திக் கப்பம் பெற ஆரம்பித்தார்.
அந்தச் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற நிலையில், புலிகளின் பெயரில் ஒருவர் வர்த்தகர்களிடம் பணம் பெற்று வருவதாகத் தகவல் கிடைத்ததும், அவரை அந்த அமைப்பினர் தேடத் தொடங்கினர்.
அப்போது அண்ணா கோப்பி விற்பனை நிலையத்தின் உரிமையாளரிடமும் புலிகளின் பெயரைப் பயன்படுத்திப் பணம் கேட்கப்பட்ட விடயம், அங்கு முன்னர் வாகனச் சாரதியாகப் பணியாற்றிய செல்லக்கிளி அம்மானுக்குத் தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து அங்கு சென்ற புலிகள், பணம் கேட்டவரை டெலா இயக்கத்தின் தலைவர் ஒபரோய் தேவனாக அடையாளம் கண்டனர்.
தங்களது அமைப்பின் பெயரைப் பயன்படுத்திப் பணம் பெறக்கூடாது எனப் புலிகளால் அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால், அந்த எச்சரிக்கைக்குப் பின்னரும் புலிகளின் பெயரைப் பயன்படுத்திப் பணம் பெறுவது தொடர்ந்தபோது, 1983ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி, புலிகளின் பெயரைப் பயன்படுத்திக் கப்பம் பெற்ற குற்றச்சாட்டுக்காக ஒபரோய் தேவனுக்குப் புலிகளால் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இறுக்கமான கட்டுப்பாடுகளைக் கொண்டு வேகமாக வளர்ந்துவந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரால், சுந்தரம் என்ற சதாசிவம் சிவசண்முகமூர்த்திக்குத் தங்களது இயக்கப் பெயரைப் பயன்படுத்தியதற்காக வழங்கப்பட்ட மரண தண்டனையை ஒபரோய் தேவன் அறிந்திருந்தும், புலிகளின் எச்சரிக்கையை மீறிச் செயற்பட்டுத் தன் மரணத்திற்குத் தானே காரணமானார்.
தேவனின் மரணத்திற்குப் பின்னரும் டெலா முற்றாக மறைந்துவிடவில்லை. அதன் பெயரில் செயற்பாடுகள் தொடர்ந்தாலும், தலைவரை இழந்தமை அந்த அமைப்பின் தொடர்ச்சியைப் பாதித்தது.
பின்னர் டெலா இரண்டாகப் பிரிவுற்று, TELA–PLOTE கூட்டாகவும் TELA–NLFT கூட்டாகவும் இயங்கினாலும், தமிழீழ விடுதலைக்காக எதையும் செய்யாமல், தமிழீழ விடுதலை என்ற பெயரில் தமிழீழ மக்களுக்குச் சுமைதந்த பல அமைப்புகளில் ஒன்றாகவே செயற்பட்டது.
நாட்டு விடுதலையில் ஏற்பட்ட பற்றின் காரணமாக அரசியல் போராட்டங்களில் இணைந்து, பின்னர் ஆயுத இயக்கத்தில் செயற்பட்ட தேவனின் பயணம், இறுதியில் சக இயக்கத்துடனான முரண்பாட்டில் முடிந்துபோனது. அவரது வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்போது, விடுதலை என்ற பொதுவான இலக்கைவிடத் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கும் தலைமைப் போட்டிகளுக்கும் முன்னுரிமை கொடுத்ததன் விளைவுகளையும் சேர்த்தே பார்க்க வேண்டியுள்ளது.
தமிழீழ விடுதலை என்பது இயக்கங்களின் எண்ணிக்கையைப் பெருக்குவதாலோ, ஒவ்வொருவரும் தனித்தனித் தலைவர்களாக மாறுவதாலோ அடையக்கூடிய ஒன்றல்ல. மக்களின் நலனை முன்னிறுத்தி, பொதுவான இலக்கிற்காக ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய இடத்தில் ஏற்பட்ட பிளவுகளும் பகைமைகளும், அந்த மக்களின் விடுதலைப் பயணத்திற்கே சுமையாக மாறின. ஒபரோய் தேவனின் வரலாற்றைப் பதிவு செய்யும்போது, இந்தப் படிப்பினையையும் மறந்துவிட முடியாது.
சுவாமி சங்கரானந்தா🙏


வாசகர் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…