கட்டுரைகள் · ஈழ வரலாறு
முள்ளிவாய்க்கால் திறந்த ஜெனிவாவின் கதவு! புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் ஒற்றுமையின்மையால் மூடப்படுகின்றது!

சுவாமி சங்கரானந்தா
பிரதம ஆசிரியர் – ஈழ மண்ணின் சுவடுகள்
2009ஆம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தபோது, ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளையும் பேரழிவுகளையும் சந்தித்த எங்கள் ஈழத் தமிழினத்திற்கு, அந்த இறுதிப்போருக்குப் பின்னர் ஜெனிவாவில் சர்வதேச நீதியைக் கோருவதற்கான புதிய வாய்ப்பு உருவானது.
அந்த வாய்ப்பைப் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் ஒன்றிணைந்து சரியாகப் பயன்படுத்தியிருந்தால், இன்று ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்தியிருக்க முடியும் என்றாலும், அந்தப் புலம்பெயர் அமைப்புகளுக்கிடையிலான ஒற்றுமையின்மையால் அந்த வரலாற்று வாய்ப்பு தொடர்ந்து பலவீனப்படுத்தப்பட்டு வருகின்றது என்பது மிகவும் வருத்தமானது.
30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களின் உயிரிழப்புகளும், பல லட்சம் அப்பாவித் தமிழ் மக்களின் பேரழிவுகளும், சில ஆயிரம் காணாமலாக்கப்பட்டவர்களின் துயரங்களும் ஒன்றாகச் சேர்ந்து உலக நாடுகளின் முன்னால் நீதிகேட்கும் நிலையை ஈழத் தமிழர்களுக்கு உருவாக்கின.
இந்த வரலாற்று வாய்ப்பைப் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் ஒன்றிணைந்து சரியாகப் பயன்படுத்தியிருந்தால், தமிழர்களின் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச ஆதரவை மேலும் வலுப்படுத்தி, தமிழீழத்திற்கான கதவையும் திறப்பதற்குரிய அரசியல் சூழலை உருவாக்கியிருக்க முடியும்.
ஆனால், பதினேழு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் தலைமைத்துவப் போட்டிகளும், கொள்கை முரண்பாடுகளும், தனித்தனியான அரசியல் நடவடிக்கைகளும் எமது இனத்திற்குக் கிடைத்த வரலாற்று வாய்ப்பைப் பலவீனப்படுத்தியுள்ளன என்பது ஒரு தமிழ்த் தேசியவாதியான எனது ஆணித்தரமான கருத்தாகும்.
உறவுகளே!
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றைப் பற்றிப் பேசும்போது, அந்தப் போராட்டம் விடுதலைப் புலிகளால் ஆரம்பிக்கப்பட்டதல்ல என்ற வரலாற்று உண்மையை முதலில் நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்.
1948ஆம் ஆண்டு இலங்கை பிரித்தானிய சாம்ராஜ்யத்திடமிருந்து சுதந்திரமடைந்ததைத் தொடர்ந்து, சிலோன் என்ற நாட்டில் தலைதூக்கிய பௌத்தப் பேரினவாதத்தால் முதலில் மலையகத் தமிழர்களின் குடியுரிமையையும் வாக்குரிமையையும் பாதிக்கும் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன.
1956ஆம் ஆண்டு எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கம் சிங்கள மொழியை மட்டும் அரசகரும மொழியாக்கும் சட்டத்தை நிறைவேற்றியது.
இதற்கு எதிராகத் தந்தை செல்வநாயகம் தலைமையிலான தமிழரசுக் கட்சியினர் அகிம்சை வழியில் போராட்டங்களை முன்னெடுக்க, கொழும்பில் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள் பௌத்தப் பேரினவாதிகளால் தாக்கப்பட்டார்கள். அதனைத் தொடர்ந்து கல்லோயா உட்பட பல பகுதிகளில் தமிழர்களுக்கு எதிரான இனவன்முறைகளும் இனப்படுகொலைகளும் பரந்த அளவில் இடம்பெற்றன.
1958ஆம் ஆண்டு மீண்டும் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். வீடுகளும் சொத்துகளும் அழிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான மக்கள் தமது வாழ்விடங்களை விட்டு வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.
இத்தனை கொடுமைகளுக்குப் பின்னரும் தமிழ் அரசியல் தலைமைகள் அறவழியிலேயே தீர்வைப் பெற முயன்றன.
1957ஆம் ஆண்டு பண்டாரநாயக்க–செல்வநாயகம் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது என்றாலும், சிங்கள பௌத்தப் பேரினவாதிகளின் எதிர்ப்பால் அந்த ஒப்பந்தம் கைவிடப்பட்டது.
1961ஆம் ஆண்டு வடக்கு, கிழக்கில் தமிழரசுக் கட்சி முன்னெடுத்த சத்தியாக்கிரகப் போராட்டத்தையும் இலங்கை அரசாங்கம் மீண்டும் இராணுவத்தின் உதவியுடன் அடக்கியது.
1965ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட டட்லி சேனநாயக்க–செல்வநாயகம் ஒப்பந்தத்தின் முக்கிய வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை.
1972ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் திகதி சிலோன் என்ற பெயரை ஸ்ரீலங்காவாக ஆக்கிக் கொண்டுவரப்பட்ட புதிய அரசியலமைப்பு பௌத்த மதத்திற்கும் சிங்கள மொழிக்கும் முதன்மை இடத்தை வழங்கி தமிழர்களின் அரசியல் கோரிக்கைகளுக்குத் தீர்வைக் கொடுக்கத் தவறியது.
இவ்வாறான நிலையில், 1976ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் திகதி தந்தை செல்வநாயகம் தலைமையில் நடைபெற்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் மாநாட்டில் வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சுதந்திரத் தமிழீழத்தை அமைப்பதற்கான அரசியல் கோரிக்கை அங்கு முன்வைக்கப்பட்டது.
அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியவர்கள் விடுதலைப் புலிகள் அல்ல. தமிழர்களின் நாடாளுமன்ற அரசியல் தலைமைகளே தமிழீழத் தனியரசுக்கான கோரிக்கையை முன்னெடுத்திருந்தார்கள்.
இலங்கை அரசுகளின் தொடர்ச்சியான இன ஒடுக்குமுறைகளும், தமிழர்களின் அறவழிப் போராட்டங்கள் புறக்கணிக்கப்பட்டமையும், அரசியல் ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்படாதமையும் தமிழ் இளைஞர்களை ஆயுதப் போராட்டத்தை நோக்கித் தள்ளிய முக்கியக் காரணங்களாக அமைந்தன.
1970களில் ஆங்காங்கே தமிழ் இளைஞர்களால் சில ஆயுதக் குழுக்கள் உருவாகத் தொடங்கின என்றாலும் வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையில் உருவான தமிழ்ப் புதிய புலிகள் இயக்கம் 1976ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமாகப் பெயர் மாற்றம் பெற்றது.
1977ஆம் ஆண்டு இடம்பெற்ற தமிழினத்திற்கு எதிரான வன்முறைகள், 1981ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பொது நூலகம் எரிக்கப்பட்ட சம்பவம், 1983ஆம் ஆண்டு கறுப்பு யூலை இனப்படுகொலை என்று தமிழர்கள் தொடர்ச்சியான தாக்குதல்களைச் சந்தித்தார்கள்.
இவ்வாறு சிங்கள பௌத்தப் பேரினவாத அரசால் தமிழர்கள் மீது திணிக்கப்பட்ட அடக்குமுறைகள் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் பெருமளவில் விரிவடைவதற்குக் காரணமாக அமைந்தது.
விடுதலைப் புலிகள் இயக்கம் உருவாவதற்குக் காரணமாக இருந்த சிங்களப் பௌத்தப் பேரினவாத அரசையும் அந்தக் கொடூர அரசியலையும் பேசாமல், அந்த வரலாற்றை மறைத்துவிட்டு, விடுதலைப் புலிகள்தான் இலங்கையின் இனப்பிரச்சினையை உருவாக்கினார்கள் என்ற மாயையை ஒட்டுக்குழுக்களும் தமிழ்த் தேசியத்திற்கு ஒவ்வாத நபர்களும் ஏற்படுத்தி, இக்கால ஈழத் தமிழ் சமூகத்திற்குத் தவறான வரலாற்றை விதைத்து வருகின்றார்கள்.
இவ்வாறு, தமிழர்களின் உரிமைப் போராட்டம் உருவான அடிப்படைக் காரணங்களை மறைப்பதற்கு எதிராக ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டிய புலம்பெயர்ந்த தேசங்களில் இருக்கும் தமிழ்த் தேசிய அமைப்புக்கள் தங்களுக்குள் போட்டி, பொறாமைகளை உருவாக்கி எதிரும் புதிருமாகச் செயல்பட்டு ஈழப் போராட்டத்திற்காக மரணித்த மாவீரர்களுக்கும் ஈழத் தமிழ் மக்களுக்கும் தங்களை அறியாது பாரிய துரோகத்தைச் செய்து வருகின்றார்கள்.
2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்படும் வரை, விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரனின் சுட்டு விரல் அசைவில் ஒன்றுபட்டு இயங்கிய அமைப்புக்கள், இப்போது ஒன்றுக்கொன்று நான் பெரிது, நீ பெரிதென்று மோதி தமிழர்களை தமிழீழத் தளத்திலும் புலத்திலும் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி,
தமிழ் இனத்தின் துரோகிகளும் எதிரிகளும் ஏத்திப் பிழைக்கும் எச்சைகளும் வளரக் காரணமாகி இருக்கின்றார்கள்.
உறவுகளே இப்போதும் நேரம் போகவில்லை
போரின் இறுதிக்கட்டத்தில் பொதுமக்கள் கொல்லப்பட்டமை, மருத்துவமனைகள் தாக்கப்பட்டமை, சரணடைந்தவர்களின் நிலை, காணாமலாக்கப்பட்டவர்கள், போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் ஆகியவற்றைச் சர்வதேச விசாரணைகளுக்கு எடுத்துச் செல்லும் முக்கிய கடமை புலம்பெயர்ந்த தேசத்தில் இருக்கும் தமிழ்த் தேசிய அமைப்புக்களுக்கு மட்டும் அல்ல, அந்த மண்ணையும் மக்களையும் மாவீரர்களையும் நேசிக்கும் அனைவருக்கும் இருக்கின்றது என்ற ரீதியில் அனைவரும் ஒன்றுபடுவோம் என இந்த மாவீரர் மாதத்தில் உறுதிப் பிரமாணம் எடுத்துக்கொள்வோம்.
உறவுகளே!
2009ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் இலங்கை அரசாங்கத்திற்குச் சாதகமான தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தாலும், அதன் பின்னர் சர்வதேச அரங்கில் ஏற்பட்ட மாற்றங்கள் முக்கியமானவை.
2011ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கை வெளியானது.
2012ஆம் ஆண்டு இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2014ஆம் ஆண்டு சர்வதேச விசாரணைக்கு வழிவகுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் விரிவான விசாரணை அறிக்கை வெளியானது.
2021ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் இலங்கையில் இடம்பெற்ற பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைச் சேகரித்துப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட்டன.
2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 6ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் அந்தப் பணிகள் மேலும் நீடிக்கப்பட்டன.
2026ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8ஆம் திகதி நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது கூட்டத்தொடரிலும் இலங்கை விவகாரம் எடுத்துக்கொள்ளப்பட்டது.
எனவே, இனிமேலும் காலம் தாழ்த்தாமல் எமது ஒற்றுமையைக் கையில் எடுத்து இலங்கையின் இனப்பிரச்சினையும் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும் சர்வதேச அரங்கில் விவாதிக்கப்படுவதற்கு ஏதுவாகப் புலம்பெயர் தமிழர்கள் நாம் ஒன்றுதிரண்டு பெளத்த சிங்களப் பேரினவாத அடக்குமுறையை பேசுபொருளாக்குவோம்.
கனடா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, சுவிட்சர்லாந்து, நோர்வே, அவுஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் வாழும் எமது பலத்தை அந்தந்த நாடுகளின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு அதனைப் பிரகடனம் செய்வோம்.
புலம்பெயர் தமிழர்களாகிய நாம் வாழும் நாடுகளில் அரசியல் கட்சிகளுடனும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் மனித உரிமை அமைப்புகளுடனும் தொடர்புகளைப் பேணுவதனால் அந்த வாய்ப்புகளையும் இதற்குப் பயன்படுத்துவோம்.
மாவீரர் நிகழ்வுகளையும் நினைவேந்தல்களையும் விளம்பர நிகழ்வாகவும் வியாபார நிகழ்வாகவும் பயன்படுத்தாமல், எமது இனத்தின் விடிவிற்காக மாண்டவர்களை நினைவில் ஏந்தி களத்திலும் புலத்திலும் அரசியல் செய்ய ஏதுவாக விடுதலைப் புலிகளின் தடையை நீக்கக் கோரி கையெழுத்து வேட்டையை ஆரம்பிப்போம்.
புலம்பெயர் தமிழ் அமைப்புகள் அனைத்தும் பொதுவான அரசியல் வேலைத்திட்டத்தின் கீழ் ஒன்றிணைந்து செயற்பட்டால் இது நிச்சயம் சாத்தியமாகும் என்ற உண்மையை உணர்ந்துகொள்வோம்.
2021ஆம் ஆண்டு அவுஸ்திரேலியத் தமிழர் பேரவை, பிரித்தானியத் தமிழர் பேரவை, அமெரிக்கத் தமிழ் செயற்பாட்டுக் குழு உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்தை வலுப்படுத்துமாறு கோரிக்கை விடுத்ததைப்போல்,
2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலும் வட அமெரிக்காவைச் சேர்ந்த பல தமிழ் அமைப்புகள் இணைந்து தமிழர்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் சர்வதேசப் பொறுப்புக்கூறல் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்குக் கடிதம் அனுப்பியதைப்போல்,
புலம்பெயர்ந்த தேசத்தில் உள்ள அத்தனை அமைப்புக்களும் ஒன்றிணைந்து மக்களைத் திரட்டி விடுதலைப் புலிகளின் தடையை நீக்கும் கோரிக்கையை இந்த மாவீரர் நாளிலாவது முன்னெடுப்போம்.
அந்த மாவீரர்களின் புனித மாதத்தில் இவ்வாறான ஒருங்கிணைந்த முயற்சிகள் அனைத்து புலம்பெயர் தமிழ் அமைப்புகளையும் இணைக்கும் நிரந்தரமான பொதுவான அரசியல் கட்டமைப்பாக மாற ஒன்றாக உழைப்போம்.
ஒவ்வொரு அமைப்பும் தனக்கென ஒரு பாதையைத் தேர்ந்தெடுப்பதில் அரசியல் உரிமை இருக்கின்றது என்றாலும், ஈழத் தமிழர்களின் பொதுவான தேசிய உரிமைகள் தொடர்பாக ஒருங்கிணைந்த நிலைப்பாட்டை நாம் உருவாக்கத் தவறும்போது, சர்வதேச நாடுகளுடனான அரசியல் பேச்சுவார்த்தைகளில் ஈழத் தமிழர்களாகிய எமது பலம் குறைகின்றது என்ற யதார்த்தத்தை உணர்ந்து,
தமிழர்களின் இனப்பிரச்சினைக்குக் காரணமாக அமைந்த வரலாற்று அநீதிகள், சுயநிர்ணய உரிமை, முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த பேரழிவுகளுக்கான நீதி, காணாமலாக்கப்பட்டவர்கள், வடக்கு, கிழக்குத் தமிழர்களின் நில உரிமைகள் ஆகியவற்றில் பொதுவான கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து சர்வதேச நாடுகளுடன் அரசியல் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்போம்.
கனடாவில் ஒரு நிலைப்பாடு, பிரித்தானியாவில் இன்னொரு அணுகுமுறை, ஐரோப்பாவில் வேறொரு செயற்பாடு என்ற நிலையை மாற்றி, குறைந்தபட்சம் தமிழர்களின் அடிப்படை அரசியல் உரிமைகள் மற்றும் சர்வதேச நீதிக்கான கோரிக்கைகளிலாவது பொதுவான நிலைப்பாட்டை உருவாக்கிக்கொண்டால் இந்த நிலைமை தாயகத் தமிழ் அரசியலிலும் தாக்கங்களை ஏற்படுத்த எம்மால் முடியும்.
வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் பல்வேறு அணிகளாகப் பிரிந்து நிற்கின்றன. 2024ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி மற்றும் சுயேச்சைக் குழுக்கள் தனித்தனியாகப் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.
பாரம்பரிய அரசியல் தலைமைகள் மீதான மக்களின் அதிருப்தியும் புதிய அரசியல் முகங்களின் தோற்றமும் அந்தத் தேர்தலில் வெளிப்பட்டன.
இந்த வேற்றுமையை மாற்றப் புலம்பெயர் அமைப்புகளால் முடியும்!
புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களாகிய எம்மாலும் முடியும்!
தாயகத் தமிழர்களின் அரசியல் உரிமைகளை மையமாகக் கொண்ட பொதுவான வேலைத்திட்டத்தை உருவாக்கி,
தமிழர்களின் அரசியல் உரிமைகளைப் பெறுவதற்காக முன்னெடுக்கப்படும் சர்வதேச நடவடிக்கைகளில் தாயகத்தில் வாழும் மக்களினதும், போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களினதும் கருத்துகளுக்கு முன்னுரிமை வழங்கி, அந்த மக்களின் துயரங்களுக்குப் புலம்பெயர் தமிழர்களாகிய நாம் முற்றுப்புள்ளி வைத்து, முள்ளிவாய்க்கால் திறந்த ஜெனிவாவின் கதவை ஈழத் தமிழினத்தின் இலட்சியப் பயணத்திற்கான வழியாகப் பயன்படுத்திக்கொள்வோம்

வாசகர் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…