கட்டுரைகள் · ஈழ வரலாறு · ஆய்வுக் கட்டுரை
1987 ஒக்டோபர் 11–12: இந்திய அமைதிப்படையின் இராணுவத் தோல்வியும் பொதுமக்கள் படுகொலையும்
1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி இரவு தொடங்கி 12ஆம் திகதி வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்திலும் அதனைச் சூழவுள்ள கொக்குவில் பிரதேசத்திலும் நடைபெற்ற சம்பவங்கள், ஈழப்போர் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு கொடூரமான அத்தியாயமாகப் பதிவாகியுள்ளன.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையைக் கைது செய்யும் நோக்கத்துடன் உலங்குவானூர்திகள் மூலம் தரையிறக்கப்பட்ட இந்திய இராணுவத்தின் 13ஆவது சீக்கிய இலகு காலாட்படைப் பிரிவைச் சேர்ந்த 30 வீரர்களில் 29 பேர் விடுதலைப் புலிகளுடனான மோதலில் கொல்லப்பட்டனர்.
உயிருடன் எஞ்சிய ஒரே வீரரான கோரா சிங் விடுதலைப் புலிகளால் சிறைப்பிடிக்கப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்டார்.
ஆனால், இந்திய இராணுவ வரலாற்றில் பெரும் இழப்பாகப் பதிவுசெய்யப்பட்ட இந்த மோதலுடன் தொடர்புடைய மற்றொரு கொடூரமான வரலாறும் உள்ளது.
அதுதான் கொக்குவில்–பிரம்படி மற்றும் பொற்பதி வீதிப் பகுதிகளில் இந்திய அமைதிப்படையினரால் அப்பாவித் தமிழ் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்.
விடுதலைப் புலிகளுடனான மோதலில் ஏற்பட்ட பெரும் இராணுவ இழப்புகளால் ஆத்திரமும் விரக்தியும் அடைந்த இந்தியப் படையினர், அதற்குப் பழிவாங்கும் வகையில் அப்பாவித் தமிழ் மக்கள் மீது மிலேச்சத்தனமான தாக்குதல்களை நடத்திக் கொடூரமாகப் படுகொலை செய்தார்கள்.
வீடுகளுக்குள் இருந்த பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மக்களை வீதியில் படுக்கவைத்து, அவர்களின் உடல்கள் மீது கனரக இராணுவ வாகனங்களை ஏற்றி நடத்தப்பட்ட இந்தக் கொடுமைகள் தொடர்பில் பல்வேறு மனித உரிமை ஆவணங்களில் தெளிவாகப் பதிவாகியுள்ளன.
இந்த இரு சம்பவங்களும் எவ்வாறு நடைபெற்றன என்பதை அறிய, 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தின் ஆரம்பகால நிகழ்வுகளைப் பார்க்க வேண்டும்.
இந்திய–இலங்கை ஒப்பந்தமும் பவன் இராணுவ நடவடிக்கையும்

1987ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் திகதி இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனவுக்கும் இடையில் இந்திய–இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இந்திய அமைதிப்படை இலங்கைக்கு அனுப்பப்பட்டது.
ஆரம்பத்தில் அமைதி ஏற்படுத்தும் நோக்கத்துடன் வந்த இந்தியப் படை, தமிழ் ஆயுத இயக்கங்களிடமிருந்து ஆயுதங்களைக் கையளிக்கச் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது.
ஆனால், இந்திய–இலங்கை ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களை இலங்கை அரசு நடைமுறைப்படுத்தாமல் தட்டிக்கழித்தபோதும், அந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பை ஏற்றிருந்த இந்திய அரசு, இலங்கை அரசைத் தட்டிக்கேட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறியமையே விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அரசுக்கும் இடையிலான முரண்பாடுகள் தீவிரமடைவதற்கான முக்கிய காரணமாக அமைந்தது.
குறிப்பாக, இந்திய–இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட திலீபன், 1987ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26ஆம் திகதி உயிரிழந்ததும், அதனைத் தொடர்ந்து இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட குமரப்பா, புலேந்திரன் உட்பட 12 விடுதலைப் புலிகள், இந்திய அமைதிப்படையின் கட்டுப்பாட்டிலிருந்த பலாலி இராணுவ முகாமில் 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி நஞ்சருந்தி உயிரிழந்ததும், இந்திய அரசின் மீதான விடுதலைப் புலிகளின் நம்பிக்கையை முற்றாகச் சிதைத்தன.
இலங்கை அரசின் ஒப்பந்த மீறல்களைத் தடுத்து, தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றச் செய்ய வேண்டிய இந்திய அரசு, இந்த இரு சம்பவங்களிலும் உரிய தீர்வைப் பெற்றுக்கொடுக்கத் தவறியதன் விளைவாக புலிகளுக்கும் இந்திய அரசுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடுகள் தீவிரமடைந்தன.

இதன் காரணமாக இந்திய இராணுவம் ‘பவன் நடவடிக்கை’ என்ற பெயரில் பாரிய இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்ததை அடுத்து, 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தின் ஆரம்பத்தில் இந்திய அமைதிப்படைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நேரடி ஆயுத மோதல்கள் ஆரம்பித்தன.
பவன் நடவடிக்கையின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக, விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைக் கைது செய்வதன் மூலம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் இராணுவ நடவடிக்கையை விரைவாக முடிவுக்குக் கொண்டுவரலாம் என இந்தியத் தளபதிகள் திட்டமிட்டனர்.
அந்த வகையில், 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி அதிகாலை கொக்குவில் பிரதேசத்தில் பிரம்படி வீதியில் அமைந்திருந்த தலைவரது இருப்பிடத்தின் மீது திடீர் முற்றுகை ஒன்றை மேற்கொண்டு அவரைக் கைது செய்யும் நோக்கத்துடன் இந்திய இராணுவத்தின் 10ஆவது பரா கமாண்டோ பிரிவைச் சேர்ந்த 120 வீரர்களும், 13ஆவது சீக்கிய இலகு காலாட்படைப் பிரிவைச் சேர்ந்த சுமார் 360 வீரர்களும் களமிறக்கப்பட்டனர்.
இந்தத் திட்டத்தின் முதல் கட்டமாக இந்திய விமானப்படையின் நான்கு எம்.ஐ.-8 உலங்குவானூர்திகளைப் பயன்படுத்தி, அதன் மூலம் இந்தியப் படையினரைப் பல கட்டங்களாகத் தரையிறக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.
அந்தத் திட்டத்தின் தொடர்ச்சியாக, முதலில் தரையிறங்கும் பரா கமாண்டோக்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்றும், அதன் பின்னர் தரையிறங்கும் சீக்கியப் படையினர் அந்தப் பகுதியைப் பாதுகாத்து ஏனைய படையினரின் வருகைக்கு வழிவகுக்க வேண்டும் என்பதும் திட்டத்தின் முக்கிய குறிக்கோள்களாக இருந்தன.
என்றாலும், இந்திய இராணுவம் எதிர்பார்த்தபடி அங்கிருந்த களநிலைமை அமையவில்லை.
இந்தியப் படையினரின் வானொலித் தொடர்புகளை விடுதலைப் புலிகள் இடைமறித்துக் கேட்டதன் மூலம் தரையிறக்க நடவடிக்கை பற்றிய தகவல்களை முன்கூட்டியே அறிந்திருந்த விடுதலைப் புலிகள், தாக்குதலை வெற்றிகரமாக எதிர்கொள்ளத் தங்களைத் தயார்படுத்தியிருந்தனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இந்தியப் படையினர் சந்தித்த பெரும் இழப்புகள்

1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி அதிகாலை இந்திய உலங்குவானூர்திகள் பல்கலைக்கழக வளாகத்தை அணுகியபோது, அப்பகுதியில் ஆயுதங்களுடன் நிலைகொண்டிருந்த விடுதலைப் புலிகள் முதற்கட்டமாகத் தரையிறங்கிய பரா கமாண்டோக்கள் மீது கடுமையான துப்பாக்கிச் சூட்டை நடத்தி, உலங்குவானூர்திகளுக்கும் சேதத்தை ஏற்படுத்தினார்கள்.
இதனால் இந்திய இராணுவத் தலைமை திட்டமிட்டபடி அனைத்து வீரர்களையும் கொண்டுவர முடியாத நிலை ஏற்பட்டது. என்றாலும், மொத்தமாக 120 பரா கமாண்டோக்களும், 13ஆவது சீக்கிய இலகு காலாட்படைப் பிரிவின் 30 வீரர்களும் தரையிறக்கப்பட்டனர்.
அந்த 30 சீக்கியப் படைவீரர்களுக்கு மேஜர் பிரேந்திர சிங் தலைமை தாங்கியதுடன், அவருடன் பிளாட்டூன் கமாண்டராக (Platoon Commander) சுபேதார் சம்பூரண் சிங்கும் வழிநடத்த அனுப்பப்பட்டார்.
தரையிறங்கிய சிறிது நேரத்திலேயே சீக்கியப் படைப்பிரிவின் வானொலித் தொடர்பாளர் விடுதலைப் புலிகளின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதன் காரணமாக, அந்தப் படைப்பிரிவுக்குத் தனது தலைமையகத்துடன் நேரடியாகத் தொடர்புகொள்வதில் பாரிய சிக்கல் ஏற்பட்டது.
இந்த நிலையில், மேலதிக படையினரைக் கொண்டுவருவதற்கான உலங்குவானூர்திப் பயணங்களும் நிறுத்தப்பட்டன.
இதனால் மேஜர் பிரேந்திர சிங் தலைமையிலான 30 சீக்கியப் படைவீரர்களும் எதிர்பார்த்த மேலதிக உதவியின்றி விடுதலைப் புலிகளின் தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.
12ஆம் திகதி காலை மேஜர் பிரேந்திர சிங், சுபேதார் சம்பூரண் சிங் உட்பட 29 வீரர்களும் கொல்லப்பட்டு, கோரா சிங் என்பவர் விடுதலைப் புலிகளால் உயிருடன் சிறைப்பிடிக்கப்பட்டார்.
அதேவேளையில், களமுனையின் மற்றொரு பகுதியில் தரையிறங்கிய பரா கமாண்டோப் பிரிவைச் சேர்ந்த மேலும் சில வீரர்களும் கொல்லப்பட்டனர்.
இதன் காரணமாக, விடுதலைப் புலிகளின் தலைமையைக் கைது செய்வதற்காக இந்திய இராணுவத் தலைமையால் ஆரம்பிக்கப்பட்ட இந்த நடவடிக்கை, இந்தியப் படையினருக்குப் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியதுடன், அதன் பிரதான நோக்கத்தையும் அடையாமல் தேக்கமடைந்தது.
தொடருந்துத் தண்டவாளம் வழியாக முன்னேறிய இந்தியக் கவசப் படை!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் தரையிறங்கிய 13ஆவது சீக்கிய இலகு காலாட்படைப் பிரிவு பேரிழப்பைச் சந்தித்த நிலையில், விடுதலைப் புலிகளின் தாக்குதல்களுக்குள் சிக்கியிருந்த இந்தியப் பரா கமாண்டோக்களை மீட்பதற்காக இந்திய இராணுவம் தரைவழி மீட்பு நடவடிக்கையை ஆரம்பித்தது.
இந்திய இராணுவத்தின் 10ஆவது பரா கமாண்டோப் படைப்பிரிவின் தளபதியான லெப்டினன்ட் கேணல் தல்வீர் சிங் தலைமையில் மீட்புப் படையினர் பலாலியிலிருந்து அனுப்பப்பட்டனர்.
அவர்களுடன் இந்திய இராணுவத்தின் 65ஆவது கவசப் படைப்பிரிவைச் சேர்ந்த மூன்று டி-72 ரக டாங்கிகளும் இணைக்கப்பட்டன. இந்தக் கவச வாகனங்களுக்குப் பொறுப்பாக மேஜர் அனில் கவுல் இருந்தார்.
ஆனால், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை நோக்கிச் செல்லும் வீதிகளில் விடுதலைப் புலிகள் நிலக்கண்ணிவெடிகளையும் வெடிபொருட்களையும் பொருத்தியிருந்ததால், இந்தியக் கவசப் படையினரால் திட்டமிட்ட வழிகளில் முன்னேற முடியவில்லை.
இதனையடுத்து பலாலியிலிருந்து யாழ்ப்பாணத்தை நோக்கிச் செல்லும் தொடருந்துத் தண்டவாளத்தைப் பயன்படுத்தி டாங்கிகளை நகர்த்தும் மாற்றுத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பின்புறமாகச் சென்ற தொடருந்துத் தண்டவாளத்தின் வழியாக மூன்று டாங்கிகளும் முன்னேறின.
இவ்வாறு இந்திய இராணுவத்தின் கவச வாகனங்கள் தொடருந்துத் தண்டவாளத்தின் வழியாகப் பல்கலைக்கழகத்தை அணுக முயற்சித்த வேளையில், விடுதலைப் புலிகளின் பாரிய தாக்குதல்களை எதிர்கொண்டன.
அப்போது விடுதலைப் புலிகள் ஏவிய ரொக்கெட் குண்டொன்று மேஜர் அனில் கவுல் பயணித்த டாங்கியின் மேற்பகுதியைத் தாக்கியது.
இந்தத் தாக்குதலில் மேஜர் அனில் கவுலின் ஒரு விரல் துண்டிக்கப்பட்டதுடன், கண் மற்றும் கைகளிலும் காயங்கள் ஏற்பட்டன.
என்றாலும், இந்தியக் கவசப் படையினரின் முன்னேற்றம் தொடர்ந்தது. இந்திய இராணுவத்தின் 5ஆவது கூர்க்கா ரைபிள்ஸ் படைப்பிரிவின் 4ஆவது படையணியும், 13ஆவது சீக்கிய இலகு காலாட்படைப் பிரிவின் ஏனைய வீரர்களும் இந்த மீட்பு நடவடிக்கையில் அவர்களுடன் இணைந்தனர்.
இதன் மூலம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பகுதியில் சிக்கியிருந்த பரா கமாண்டோக்களை இந்திய இராணுவம் மீட்டுக்கொண்டது.
என்றாலும், விடுதலைப் புலிகள் மீது தாம் வலிந்து திணித்த அந்த மோதலில் ஏற்பட்ட பெரும் உயிரிழப்புகளாலும் இராணுவப் பின்னடைவாலும் ஆத்திரமடைந்த இந்தியப் படையினர், தமது கோபத்தை ஆயுதம் ஏந்தாத அப்பாவித் தமிழ் மக்கள் மீது திருப்பினார்கள்.
கொக்குவில்–பிரம்படி மற்றும் பொற்பதி வீதிகளில் பொதுமக்கள் படுகொலை!
பலாலி இராணுவ முகாமிலிருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி முன்னேறிய இந்தியப் படையினர், கவச வாகனங்களுடன் பிரம்படி வீதிப் பகுதியைச் சுற்றிவளைத்து, வீடுகளுக்குள் இருந்த பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள்.
இதன் காரணமாகப் பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் உள்ளிட்ட 40 பொதுமக்கள் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
அதேவேளையில், தரைவழியாக வந்த 13ஆவது சீக்கிய இலகு காலாட்படைப் பிரிவின் ஒரு பகுதியினர் பொற்பதி வீதிப் பகுதியைச் சுற்றிவளைத்தனர்.
அந்தப் பகுதியில் வசித்த பொதுமக்களைப் பிடித்து, கொக்குவில் பிள்ளையார் கோவிலுக்கு வடக்கே அமைந்திருந்த சமூகக் கட்டிடத்திற்கு அருகில் அழைத்து வந்தனர்.
அந்தப் பொதுமக்களை வீதியில் படுக்கும்படி கட்டளையிட்டு, அவர்கள் மீது கனரக இராணுவ வாகனங்களை ஏற்றி 64 தமிழ் மக்களைப் படுகொலை செய்தனர்.
அதாவது, பிரம்படி மற்றும் பொற்பதி வீதிப் பகுதிகளில் இந்திய இராணுவத்தால் ஈவிரக்கமின்றி நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல்களின் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள்.
இந்தச் சம்பவங்கள் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ள நேரடிச் சாட்சியங்கள் மேலும் அதிர்ச்சியளிப்பவையாக இருக்கின்றன.
படுகொலைகள் தொடர்பான நேரடிச் சாட்சியங்கள்
பொற்பதி வீதியைச் சேர்ந்த தட்சணாமூர்த்தி சிவராஜலிங்கம் என்பவர் மனித உரிமை அமைப்பிடம் வழங்கிய சத்தியக்கடதாசியில், தனது சகோதரரின் குடும்பத்திற்கு நேர்ந்த கொடுமைகளைப் பதிவு செய்துள்ளார்.
கொக்குவில் பிரம்படி வீதியில் வசித்த அவரது சகோதரர் தவராஜலிங்கம், அவரது மனைவி கனகமலர் மற்றும் 18 மாதங்களேயான பெண் குழந்தை தர்மிகா ஆகியோர் கொல்லப்பட்ட நிலையில் காணப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த நாள் காலை அந்த வீட்டிற்குச் சென்றபோது குடும்பத்தினரின் உடலங்களைத் தான் கண்டதாகவும், வீட்டிற்குள் மறைந்திருந்த சிறுவர்களில் சிலர் காயமடைந்த நிலையில் உயிருடன் காணப்பட்டதாகவும் சாட்சியத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று நாகலிங்கம் நாகேஸ்வரி என்பவர் வழங்கிய சாட்சியத்தில், இந்தியப் படையினர் அதிகாலை தமது வீட்டு வளவிற்குள் நுழைந்தபோது ஏற்பட்ட சம்பவத்தை விவரித்துள்ளார்.
அங்கு துப்பாக்கிச் சூடு நடைபெற்றபோது தனது சகோதரரும் அவரது ஆறு வயது மகன் மனோகரனும் கொல்லப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
அவரது குடும்பத்தைச் சேர்ந்த மேலும் சிலர் காயமடைந்ததாகவும் அந்தச் சாட்சியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரு குடும்பத்தின் தந்தையும் ஆறு வயதுச் சிறுவனும் கொல்லப்பட்ட சம்பவம், அன்றைய தாக்குதல்களில் பொதுமக்கள் எதிர்கொண்ட துன்பங்களின் ஓர் எடுத்துக்காட்டாகும்.
இந்தியாவை வரவேற்ற தமிழ் மக்களுக்கு நேர்ந்த கொடுமைகள்
விடுதலைப் புலிகளுடன் தாம் வலிந்து ஏற்படுத்திய மோதலில் தமக்கு ஏற்பட்ட பெரும் இராணுவ இழப்புகளுக்காக, இந்தியாவை நேசித்து இந்திய இராணுவத்தை மாலைபோட்டு வரவேற்ற அப்பாவித் தமிழ் மக்கள் மீது இந்தியப் படையினர் நடத்திய தாக்குதல்கள், தமிழ் மக்களின் வரலாற்றில் நீங்க முடியாத வடுக்களாகவே இருக்கும்.
இதனை இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் புரிந்துகொண்டு, அதற்குப் பிராயச்சித்தமாக ஈழத் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பெற்றுத்தரும் இராஜதந்திரக் காய்நகர்த்தல்களை இலங்கை அரசின் மீது மேற்கொள்ள வேண்டும்.
அவ்வாறு செய்வது பாரத தேசத்தின் தென்முனையில் உள்ள தமிழர்களின் மனங்களை மட்டுமல்லாது, உலகத் தமிழர்களின் மனங்களையும் வெல்வதற்கான உந்துசக்தியாக அமையும்.
அமைதியை ஏற்படுத்துவதற்காக வந்ததாகக் கூறிய இந்திய அமைதிப்படையின் நடவடிக்கைகளிலேயே தமிழ் பெண்களும், தமிழ் குழந்தைகளும், தமிழ் முதியவர்களும் கொல்லப்பட்டமை பாரத தேசத்தின் களங்கம் என்பதை மனிதாபிமானமிக்க இந்தியர்கள் சிந்திக்க வேண்டும்.
39 ஆண்டுகளுக்குப் பின்னரும் வரலாறு எழுப்பும் கேள்விகள்!
1987ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மோதல், ஏறத்தாழ நான்கு தசாப்தங்களுக்குப் பின்னரும் இந்திய இராணுவ வரலாற்றில் தொடர்ந்து நினைவுகூரப்பட்டு வருகிறது.
ஆனால், அதே மோதலுடன் தொடர்புடைய காலப்பகுதியில் கொக்குவில்–பிரம்படி மற்றும் பொற்பதி வீதிகளில் கொல்லப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களின் வரலாறு, இந்தியாவின் பொதுவான இராணுவ நினைவுகூரல்களில் எவ்வளவு இடத்தைப் பெற்றுள்ளது?
இந்தக் கேள்வியைப் பாவம், புண்ணியம், தர்மம், அதர்மம் என்று இன்றுவரை வேதாந்தம் பேசும் பாரத தேசத்தின் மக்களாகிய உங்கள் முன் வைக்கின்றேன்.
கொக்குவில் பிரம்படியில் இந்திய இராணுவத்தால் ஆரம்பிக்கப்பட்ட அந்த ஆரம்பப் புள்ளியிலிருந்து முள்ளிவாய்க்காலின் இறுதி முடிவுவரை, பல இலட்சம் அப்பாவித் தமிழர்களின் கொலைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் நீதி வழங்கப்படாத நிலை தொடர்ந்து நீடிக்கின்றது.
1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் இந்திய அமைதிப்படை மேற்கொண்ட யாழ்ப்பாண இராணுவ நடவடிக்கைகளின்போது பொதுமக்கள் கொல்லப்பட்டமை, மக்கள் இடம்பெயர்ந்தமை, குடியிருப்புப் பகுதிகள் பாதிக்கப்பட்டமை போன்ற நிகழ்வுகளும் ஈழப்போர் வரலாற்றின் முக்கியமான பகுதிகளாவும் வரலாற்றில் இருக்கின்றது.
குறிப்பாக, அதே மாதம் 21ஆம் மற்றும் 22ஆம் திகதிகளில் யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலையில் நடைபெற்ற பொதுமக்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் படுகொலைகளும் தனித்த வரலாற்று ஆவணங்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அந்த வரிசையில் கொக்குவில்–பிரம்படி பொதுமக்கள் படுகொலைக்கும் முக்கியமான இடம் உள்ளது.
1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11–12ஆம் திகதிகளில் நடைபெற்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மோதலை இந்திய இராணுவத்தின் தோல்வியாகவும், விடுதலைப் புலிகளின் இராணுவ நடவடிக்கை வெற்றியாகவும் மட்டும் பதிவு செய்துவிட்டு நகர்ந்துவிட முடியாது.
ஏனெனில், அந்த மோதலின் பின்னணியில் ஆயுதமற்ற தமிழ் மக்கள் சந்தித்த கொடுமைகளும் உள்ளன.
இந்திய இராணுவத்தின் 30 சீக்கியப் படைவீரர்களில் 29 பேர் கொல்லப்பட்டதும், ஒருவர் மட்டும் உயிருடன் சிறைப்பிடிக்கப்பட்டதும் அந்த மோதலின் ஒரு பக்கம்.
அந்த இராணுவ இழப்புகளும் யாழ்ப்பாணத்தில் இந்தியப் படையினர் எதிர்கொண்ட எதிர்ப்பும் உருவாக்கிய பதற்றத்தின் மத்தியில், கொக்குவில் பிரதேசத்தில் அப்பாவித் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டது அதன் மறுபக்கம்.
இராணுவ வெற்றி தோல்விகளுக்கு அப்பால் பேசப்பட வேண்டிய மனிதத் துயரங்கள்!
வரலாற்றைப் பதிவு செய்வது என்பது ஒரு தரப்பின் இராணுவ வெற்றியையோ மற்றொரு தரப்பின் தோல்வியையோ மட்டும் எடுத்துக்கூறுவதல்ல.
அந்தச் சம்பவம் ஏன் நடைபெற்றது, எவ்வாறு நடைபெற்றது, அதில் பங்கேற்றவர்கள் யார், உயிரிழந்தவர்கள் யார், அதன் பின்னணியில் மறைந்திருக்கும் மனிதத் துயரங்கள் என்ன என்பதையும் ஆதாரங்களுடன் பதிவு செய்வதாகும்.
இந்தியாவில் இந்திய இராணுவத்தின் உயிரிழந்த வீரர்களுக்கு வழங்கப்பட்ட இராணுவ மரியாதைகளும் நினைவுகூரல்களும் வரலாற்றில் இடம்பெறுகின்றன.

அதேபோன்று, கொக்குவில்–பிரம்படியில் கொல்லப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களின் பெயர்களும் அவர்களது குடும்பங்களின் சாட்சியங்களும் வரலாற்றில் பாதுகாக்கப்பட வேண்டும்.
39 ஆண்டுகளுக்குப் பின்னரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மோதலும் கொக்குவில்–பிரம்படி பொதுமக்கள் படுகொலையும் ஈழ வரலாற்றில் ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய முக்கியமான நிகழ்வுகளாகத் திகழ்கின்றன.
அன்று ஆயுதங்களுடன் மோதிய இரண்டு படைகளின் வரலாற்றுக்கு அப்பால், எந்த ஆயுதமும் ஏந்தாமல் தமது வீடுகளில் வாழ்ந்த காரணத்திற்காகவே உயிரிழக்க நேர்ந்த அப்பாவித் தமிழ் மக்களின் வரலாறும் பேசப்பட வேண்டும்.
அவர்களின் உயிரிழப்புகளுக்கும் சாட்சியங்களுக்கும் உரிய இடத்தை வழங்குவதும், அந்தச் சம்பவங்கள் குறித்த முழுமையான உண்மையை வெளிக்கொண்டுவருவதும் வரலாற்று ஆவணப்படுத்தலின் முக்கியமான கடமையாகும் என்பதால்.
ஈழ மண்ணின் சுவடுகள் என்ற எனது இணையப் பக்கத்தில் மறக்கப்பட்ட வரலாறுகளை எதிர்காலச் சந்ததியினருக்காக ஆவணப்படுத்தும் எனது முயற்சியை தொடருவேன்.
சுவாமி சங்கரானந்தா🙏


வாசகர் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…