தமிழ் இணையச் சஞ்சிகைவரலாறு · அரசியல் · உலகப் பார்வை

ஈழ மண்ணின் சுவடுகள்

வரலாற்றைப் பதிவு செய்வோம் · ஆதாரங்களைப் பாதுகாப்போம்

விளம்பரம்

கட்டுரைகள் · ஈழ வரலாறு

ஈழப்போர் வரலாற்றில் இலங்கை இராணுவம் நடத்திய முதல் தரையிறக்கத் தாக்குதல்!

ஈழப்போர் வரலாற்றில் இலங்கை இராணுவம் நடத்திய முதல் தரையிறக்கத் தாக்குதல்!

சுவாமி சங்கரானந்தா
பிரதம ஆசிரியர் – ஈழ மண்ணின் சுவடுகள்

1980களின் ஆரம்பத்தில் தமிழீழ விடுதலைப் போராளிகளையும் தமிழ் மக்களையும் தேடி வேட்டையாடிய ஸ்ரீலங்காவின் முப்படைகளும் காவல்துறையும், தமிழீழ விடுதலைப் போராளிகளின் எதிர்த்தாக்குதல்களைச் சமாளிக்க முடியாத நிலையில், போராளிகளைத் தேடித் தாக்குவதற்குத் தரைவழித் தாக்குதல்களைத் தவிர்த்து வான்வழித் தாக்குதல்களை மேற்கொள்ள ஆரம்பித்தன.

இவ்வகையான வான்வழித் தாக்குதல்கள் 1985ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் யாழ்ப்பாண மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் தீவிரமடைந்தன. இலங்கை விமானப்படையின் உலங்குவானூர்திகளிலிருந்து கலீபர் ரகத் துப்பாக்கிகள் மூலம் போராளிகள் மீதும் பொதுமக்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

குறிப்பாக, போராளிகள் பயணிப்பதாக ஊகிக்கப்பட்ட வாகனங்கள் மட்டுமன்றி, பொதுமக்கள் பயணித்த தட்டி வான்கள், மினிபஸ்கள் போன்ற வாகனங்கள் மீதும் உலங்குவானூர்திகளிலிருந்து துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இவ்வாறு வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டுவந்த இலங்கை இராணுவம், 1985ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ஆம் திகதி, யாழ்ப்பாணம் அரியாலையில் அமைந்திருந்த ‘நடாவீடு’ என்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் முகாமைக் குறிவைத்து, உலங்குவானூர்திகள் மூலம் இராணுவத்தினரைத் தரையிறக்கிச் சுற்றிவளைத்துத் தாக்கும் புதிய நடவடிக்கையை முதன்முதலாக மேற்கொண்டது.

நடாவீடு முகாமில் தங்கியிருந்த விடுதலைப் புலிகளைச் சுற்றிவளைத்து அழிக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலில், இலங்கை இராணுவத்தினருக்குக் கிடைத்த தகவல்கள் துல்லியமாக இல்லாததால், நடாவீடு அமைந்திருந்த பிரதேசத்திலிருந்து சற்றுத் தொலைவில் இராணுவத்தினர் தரையிறங்கினர்.

இதனால் திட்டமிட்டபடி முகாமைச் சுற்றிவளைத்துத் தாக்க முடியாமல் போனதுடன், நடாவீட்டில் இருந்த விடுதலைப் புலிகளின் தாக்குதல் படையணியினர் மேற்கொண்ட எதிர்த்தாக்குதலையும் இலங்கை இராணுவத்தினர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

விடுதலைப் புலிகளின் எதிர்த்தாக்குதலைச் சமாளிக்க முடியாத இலங்கை இராணுவத்தினர், தமது இலக்கை அடைய முடியாமல் பின்வாங்கத் தொடங்கினர்.

என்றாலும், இந்தத் தாக்குதலின்போது கார்த்திக் என்ற இயக்கப் பெயரைக் கொண்ட இராசப்பு உதயகுமார் என்ற விடுதலைப் புலிப் போராளியை இலங்கை இராணுவத்தினர் கொன்றதுடன், அவரது ஆயுதத்தையும் எடுத்துக்கொண்டு புகையிரதப் பாதை வழியாகக் கால்நடையாகப் பின்வாங்கி நாவற்குழி இராணுவ முகாமைச் சென்றடைந்தனர்.

இந்த இலங்கை இராணுவத்தின் தாக்குதல் சம்பவத்தில் அரியாலையில் பேக்கரி ஒன்றில் பணியாற்றிய 18 வயது இளைஞரான சுபாஸ்கரன் ராஜேந்திரன் உயிரிழந்தார்.

மேலும், சுப்பிரமணியம் ரஞ்சிதமலர் மற்றும் அரியாலை கொட்டுக்கிணற்றுப் பிள்ளையார் கோவில் ஐயரான சுப்பிரமணிய ஐயரின் மனைவி ஜீவா அம்மா ஆகியோரும் காயமடைந்தனர்.

இவ்வாறு அரியாலையில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது தரையிறக்கத் தாக்குதலில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறமுடியாத இலங்கை இராணுவம், அந்தத் தோல்வியைச் சரிசெய்யும் நோக்கத்துடன் அடுத்த நாளான 1985ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் திகதி அதிகாலை வேளையில் யாழ்ப்பாணம் சுதுமலையில் மற்றுமொரு தரையிறக்கத் தாக்குதலை மேற்கொண்டது.

அன்றைய காலப்பகுதியில் சுதுமலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் யாழ்ப்பாண மாவட்டத் தளபதி கிட்டுவின் தலைமை முகாமும், அதற்கு அருகிலேயே ‘நம்பர் 3’ என்று அழைக்கப்பட்ட நாகேஸ் அம்மானின் துணை முகாமும் அமைந்திருந்தன.

இந்த முகாம்களில் ஜொனி, பப்பா, ரஹீம், ஊத்தை ரவி, சண்முகம், திலீபன், ஐடியா வாசு, குட்டிஸ்ரீ, நிக்சன், அருணன், கிருபா, சத்தியா, சந்திரன் உள்ளிட்ட பல போராளிகள் தங்கியிருந்தனர். கிட்டுவால் வளர்க்கப்பட்ட புலிக்குட்டியும் அந்த முகாமிலேயே இருந்தது.

1985ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் திகதி அதிகாலை வேளையில் மூன்று உலங்குவானூர்திகளின் துணையுடன் சுதுமலைப் பகுதிக்கு வந்த இலங்கை இராணுவம், கிட்டுவின் தலைமையில் இயங்கிய விடுதலைப் புலிகளின் முகாம்களைச் சுற்றிவளைத்துத் தாக்கும் நடவடிக்கையை ஆரம்பித்தது.

சுதுமலை முகாமிலிருந்து சிறிது தூரத்தில் இரண்டு உலங்குவானூர்திகள் திடீரெனத் தரையிறங்கி, அவற்றில் வந்திருந்த இராணுவத்தினரை இறக்கிவிட்டு மீண்டும் மேலெழுந்தன.

தரையிறங்கிய இராணுவத்தினரிடம் ஏ.கே. ரகத் துப்பாக்கிகள், எல்.எம்.ஜி. எனப்படும் இலகு இயந்திரத் துப்பாக்கிகள், ஆர்.பி.ஜி. மற்றும் மோட்டார் போன்ற நவீன ஆயுதங்கள் இருந்தன.

ஆனால், அங்கிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளிடம் எஸ்.எம்.ஜி., றிப்பீற்றர், .303 போன்ற சாதாரண துப்பாக்கிகளும் கைக்குண்டுகளும் மட்டுமே இருந்தன.

இவ்வாறு நவீன ஆயுதங்களுடன் தரையிறங்கிய இராணுவத்தினர் முகாம்களை நோக்கி முன்னேறத் தொடங்கிய வேளையில், அவர்களை எதிர்கொண்டு பப்பாவின் கையிலிருந்த துப்பாக்கி முழங்கியதும் சுதுமலைச் சமர் ஆரம்பமானது.

இராணுவத்தினர் தரையிறங்கிய ஓரிரு நிமிடங்களிலேயே முகாமுக்கு மிக அருகில் துப்பாக்கிச் சண்டை ஆரம்பமாகி, இருதரப்பினருக்கும் இடையில் கடுமையான மோதல் நடைபெற்றது.

எதிர்பாராத விதமாக ஆரம்பமான இந்தத் தாக்குதலை எதிர்கொண்ட தளபதி கிட்டு, தனது போராளிகளுக்கு நம்பிக்கையூட்டும் வகையிலும் தெளிவாகவும் உறுதியாகவும் கட்டளைகளை வழங்கி எதிர்த்தாக்குதலை வழிநடத்தினார்.

அதேவேளையில், கையடக்க வானொலித் தொடர்புச் சாதனமான ‘வோக்கி ரோக்கி’ மூலம் அருகிலிருந்த விடுதலைப் புலிகளின் முகாம்களைத் தொடர்புகொண்டு, அங்கிருந்த போராளிகளைச் சுதுமலைக்கு வரவழைத்தார்.

அவ்வாறு வந்த போராளிகளைக் கொண்டு வெவ்வேறு திசைகளிலிருந்தும் இராணுவத்தினர் மீது தாக்குதல்களை மேற்கொள்ளச் செய்ததுடன், தன்னிடமிருந்த குறைந்த ஆயுதபலத்தையும் சரியான முறையில் பயன்படுத்தி இராணுவத்தினரின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தினார்.

சுதுமலையில் தரையிறங்கிய இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் மேற்கொண்ட இந்தக் கடுமையான எதிர்த்தாக்குதல் மூன்று முதல் நான்கு மணிநேரம் வரை நீடித்தது.

கிட்டுவின் தலைமையில் போராளிகள் மேற்கொண்ட எதிர்த்தாக்குதலைச் சமாளிக்க முடியாத இலங்கை இராணுவத்தினர், பலத்த இழப்புகளுடன் மீண்டும் உலங்குவானூர்திகளில் ஏறிப் பின்வாங்கத் தொடங்கினர்.

இந்தச் சமர் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில், சுதுமலையில் விடுதலைப் புலிகளின் முகாம் சுற்றிவளைக்கப்பட்ட செய்தி, வேறொரு முகாமிலிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரான அல்பேர்ட் என்ற கந்தையா ரூபதநிதிக்குக் கிடைத்ததைத் தொடர்ந்து, அல்பேர்ட், தனது அணியினருடன் புலிகளின் சுதுமலை முகாமுக்கு உதவுவதற்காக விரைந்தார்.

அச்சுவேலியிலிருந்து அவரும் அவரது குழுவினரும் சுதுமலை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது உலங்குவானூர்திகளிலிருந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களிலிருந்து தப்பிச் சுதுமலையைச் சென்றடைந்து இராணுவத்தினருக்கு எதிரான சமரில் இணைந்துகொண்டனர்.

அந்த வேளையில் விடுதலைப் புலிகளின் எதிர்த்தாக்குதலைச் சமாளிக்க முடியாத இலங்கை இராணுவத்தினர், மீண்டும் உலங்குவானூர்திகளில் ஏறிப் பின்வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

தளபதி கிட்டுவின் உத்தரவின்படி இராணுவத்தினர் பின்வாங்கிச் செல்வதைத் தடுக்கும் நோக்கத்துடன், அல்பேர்ட் தனது அணியினருடன் இராணுவத்தினரின் பின்புறத்திலிருந்து தாக்குதலை மேற்கொண்டார்.

அப்போது பின்வாங்கிக்கொண்டிருந்த இராணுவத்தினரால் அல்பேர்ட்டின் அணியினர் மீது கடுமையான துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இந்தத் தாக்குதலின்போது அல்பேர்ட்டின் இடது கண்ணுக்குக் கீழே பலத்த காயம் ஏற்பட்டு, அந்தக் காயத்தினால் அல்பேர்ட் என்ற கந்தையா ரூபதநிதி சுதுமலைச் சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

சுதுமலையில் நடைபெற்ற இந்தச் சமரில் தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டுமன்றி, தமிழீழ விடுதலை இயக்கம் என்ற ரெலோ (TELO) அமைப்பைச் சேர்ந்த சில போராளிகளும் அலெக்ஸ் தலைமையில் சண்டை முடிவடைவதற்கு முன்னதாக அங்கு வந்து விடுதலைப் புலிகளுக்கு உறுதுணையாக நின்றனர்.

அத்தோடு, யாழ்ப்பாணம், மானிப்பாய், கொக்குவில், தாவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த தமிழீழ விடுதலைப் போராளிகளும் தமது தகைமைக்கும் திறமைக்கும் ஏற்றவாறு களப்பணிகளில் ஈடுபட்டனர்.

இலங்கை இராணுவம் மேற்கொண்ட இந்தத் தரையிறக்கத் தாக்குதல் சுதுமலையில் இருந்த விடுதலைப் புலிகளின் முகாம்களைக் குறிவைத்து நடத்தப்பட்டாலும், அன்றைய தினம் இலங்கை விமானப்படையின் உலங்குவானூர்தித் தாக்குதல்கள் சுதுமலையுடன் மட்டும் நின்றுவிடவில்லை.

உடுவில், சங்குவேலி, மானிப்பாய், தாவடி, கொக்குவில் உள்ளிட்ட யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் உலங்குவானூர்திகளிலிருந்து பரவலாகத் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இலங்கை விமானப்படையின் தாக்குதல்களின் காரணமாக, ஒன்பது வயதுச் சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்தனர்.

மேலும், மானிப்பாயைச் சேர்ந்த நவரெத்தினராஜா தங்கராணி, கொக்குவில் மேற்கைச் சேர்ந்த சின்னராசா சர்வேஸ்வரி, செல்லதுரை சிவபாக்கியம் ஆகியோருடன், சங்குவேலியைச் சேர்ந்த மேலும் மூவரும் காயமடைந்தனர்.

1985ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ஆம் திகதி அரியாலையில் உலங்குவானூர்திகள் மூலம் தரையிறங்கிய இலங்கை இராணுவத்தினர், விடுதலைப் புலிகளின் எதிர்த்தாக்குதலைத் தொடர்ந்து கால்நடையாகப் பின்வாங்கி நாவற்குழி முகாமைச் சென்றடைந்தனர் என்பதும்,

அதற்கு அடுத்த நாளான டிசம்பர் மாதம் 21ஆம் திகதி சுதுமலையில் தரையிறங்கிய இலங்கை இராணுவத்தினர், கிட்டுவின் தலைமையில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட கடுமையான எதிர்த்தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் மீண்டும் உலங்குவானூர்திகளில் ஏறிப் பின்வாங்கினர் என்பதும்,

இரண்டு நாட்களில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு தரையிறக்கத் தாக்குதல்களிலும் இலங்கை இராணுவத்தினரால் தமது பிரதான இலக்குகளை அடைய முடியவில்லை என்பதை வரலாறு எடுத்துக் காட்டுகின்றது என்பதோடு, சுதுமலைச் சமரில், நவீன ஆயுதங்களுடன் உலங்குவானூர்திகள் மூலம் தரையிறங்கிய இலங்கை இராணுவத்தினருக்கு எதிராகக் குறைந்த ஆயுதங்களுடன் இருந்த விடுதலைப் புலிகள் மேற்கொண்ட எதிர்த்தாக்குதலும், அந்தத் தாக்குதலைத் தளபதி கிட்டு வழிநடத்திய விதமும் முக்கியத்துவம் பெறுகின்றது.

ஒருவேளை அன்றைய கொமாண்டோத் தாக்குதல் வெற்றிபெற்றிருந்தால், அந்த வெற்றியின் உற்சாகத்தில் இலங்கை இராணுவம் மீண்டும் மீண்டும் பல இடங்களில் விடுதலைப் புலிகளின் முகாம்களை இலக்குவைத்து இதேபோன்ற தாக்குதல்களை மேற்கொண்டிருக்கக்கூடும்.

ஆனால் சுதுமலையில் மேற்கொள்ளப்பட்ட கொமாண்டோத் தாக்குதல் முறியடிக்கப்பட்டதால், அதே பாணியிலான அதிரடி நடவடிக்கைகளைத் தொடர்வதில் இலங்கை இராணுவம் அக்கறை காட்டவில்லை.

இதற்குப் பிரதான காரணமாக, அன்றைய சுதுமலைச் சமரில் தளபதி கிட்டு வெளிப்படுத்திய வீரம், விவேகம் மற்றும் தலைமைத்துவமே அமைந்தது.

அரியாலையில் நடைபெற்ற முதலாவது தாக்குதலின்போது கார்த்திக் என்ற இராசப்பு உதயகுமாரும், சுதுமலையில் நடைபெற்ற இரண்டாவது தாக்குதலின்போது அல்பேர்ட் என்ற கந்தையா ரூபதநிதியும் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர் என்றாலும்,

அரியாலையில் தரையிறங்கிய இராணுவத்தினர் கால்நடையாகப் பின்வாங்கியதும், சுதுமலையில் தரையிறங்கிய இராணுவத்தினர் மீண்டும் உலங்குவானூர்திகளில் ஏறிப் பின்வாங்கியதும், அன்றைய புலிகளின் இராணுவ நடவடிக்கைகளின் பலத்தை எடுத்துக்காட்டுகின்றன.

இலங்கை இராணுவம் தனது நவீன ஆயுதபலத்தையும் வான்வழிப் படைத்தரையிறக்க முறையையும் பயன்படுத்தி மேற்கொண்ட இந்த இரண்டு தாக்குதல்களையும் தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்தமை, ஈழப்போரின் ஆரம்பகால வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்வுகளாகும்.

← பிரிவுக்குத் திரும்ப