தமிழ் இணையச் சஞ்சிகைவரலாறு · அரசியல் · உலகப் பார்வை

ஈழ மண்ணின் சுவடுகள்

வரலாற்றைப் பதிவு செய்வோம் · ஆதாரங்களைப் பாதுகாப்போம்

விளம்பரம்

நையாண்டி / கருத்து

சிங்கங்களின் ஆதரவில் ராஜாவாக நினைத்தவர்கள்!

சிங்கங்களின் ஆதரவில் ராஜாவாக நினைத்தவர்கள்!

2009க்குப் பின்னரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் மறுபக்கம்!

சுவாமி சங்கரானந்தா

கருத்து

2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தபோது, ஈழத் தமிழினம் வரலாறு காணாத பேரழிவைச் சந்தித்திருந்தது. பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பறிகொடுத்து, உறவுகளைத் தொலைத்து, சொந்த மண்ணிலேயே அகதிகளாகிய மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கும் பெரும் பொறுப்பு அன்றைய ஈழத் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இருந்த சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இருந்தது.

அந்தப் பொறுப்பை உதாசீனம் செய்து, 2010ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நியமன வழங்கலில் கஜேந்திரகுமாரின் கட்சிக்கு கஜேந்திரகுமார் கேட்ட நியமனங்கள் வழங்கப்படாததால் கஜேந்திரகுமார், கஜேந்திரன் ஆகியோர் கூட்டமைப்பை உடைத்துக்கொண்டு வெளியேறினார்கள் என்றாலும்,

அந்தப் பொறுப்பைத் தொடர்ந்து நிறைவேற்றும் கடமை சம்பந்தனுக்கு இருந்த நிலையில், அவர் கஜேந்திரகுமாரின் இடத்தை நிரப்ப சுமந்திரனை உள்வாங்கி, அவருக்குத் தேசியப் பட்டியலில் இடமளித்தார்.

தொடர்ந்து பொறுப்பை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதிலும் விட்டுக்கொடுப்பு அரசியல் செய்வதிலுமே அவர்கள் நம்பிக்கை வைத்தார்கள்.

2011ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் 18 சுற்றுகள் நடைபெற்றும் எந்த அரசியல் தீர்வையும் பெற்றுத்தரவில்லை. கூட்டமைப்பின் முன்மொழிவுகளுக்கு அரசாங்கம் உரிய பதிலளிக்காத நிலையில் பேச்சுவார்த்தைகள் முடங்கின என்பதோடு, என்னைப் பொறுத்தவரை, அது ஒரு கண்துடைப்பு அரசியல் நாடகமாகவே முடிந்தது.

பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த பின்னராவது சம்பந்தனும் சுமந்திரனும் தமிழ் மக்களை ஒன்றுதிரட்டி, அகிம்சை வழியில் தொடர்ச்சியான மக்கள் போராட்டத்தை முன்னெடுத்திருக்க வேண்டும். ஆனால், அதற்குப் பதிலாகக் கொழும்பை மையப்படுத்திய அரசியலுக்கே அவர்களால் முக்கியத்துவம் வழங்கப்பட்டது.

இங்கே ஒரு நையாண்டிக் கதை நினைவுக்கு வருகின்றது.

ஒரு காட்டில் சிங்கங்கள் தங்களிடம் அகப்பட்ட கழுதை ஒன்றைக் கொல்லாமல், அதனை மீண்டும் அதன் கூட்டத்திற்கு அனுப்பிவைத்தன.

சிங்கங்களின் ஆதரவுடன் திரும்பிய அந்தக் கழுதை, தன்னை மற்றக் கழுதைகளின் ராஜாவாகக் காட்டிக்கொண்டது. ஆனால், சிங்கங்களுக்குப் பசி எடுக்கும்போதெல்லாம் தனது கூட்டத்திலிருந்த கழுதைகளையே அவற்றிடம் அழைத்துச் சென்றது.

தன்னுடைய கூட்டத்திற்குள் ராஜாவாக இருந்த அந்தக் கழுதை, சிங்கங்களின் முன்னால் ஒருபோதும் சிங்கமாக இருக்கவில்லை. இறுதியில் சிங்கங்களுக்குத் தேவையற்றதாக மாறியபோது அதுவும் அவற்றின் இரையாகியது.

இந்தக் கதையிலுள்ள கழுதைக் கூட்டத்துடன் தமிழ் மக்களை நான் ஒப்பிடவில்லை. சிங்கங்களின் ஆதரவை நம்பி ராஜாவாக நினைத்துக்கொண்ட கழுதையின் அரசியல் பாத்திரத்துடன்தான் சம்பந்தன், சுமந்திரன், கஜேந்திரகுமார், கஜேந்திரன் ஆகியோரின் அரசியல் அணுகுமுறையை ஒப்பிடுகின்றேன்.

தமிழ் மக்களின் வாக்குகளால் கிடைத்த அரசியல் அதிகாரத்தை, அந்த மக்களின் உரிமைகளுக்கான வலுவான போராட்டமாக மாற்றாமல், சிங்கள ஆட்சியாளர்களுடன் நல்லிணக்க அரசியல் செய்த தமிழரசுக் கட்சியின் நாடகத்தையும்,

விடாப்பிடிவாதமாக நின்று தமிழ் மக்களின் ஒற்றுமையைக் குலைத்து தமிழ்த் தேசியத்தைச் சிதைத்த தமிழ்க் காங்கிரஸின் வேடத்தையும் நான் விமர்சிக்கின்றேன்.

தமிழ் மக்களின் நம்பிக்கையில் தலைவராக இருப்பதற்கும் ஆட்சியாளர்களின் நலன்களைப் பேணத் தலைவராக இருப்பதற்கும் பெரிய வேறுபாடு உண்டு.

காலம் அவர்களின் இரட்டை வேடத்தைத் தமிழ் மக்களுக்குக் காட்டிக்கொடுத்தது என்றாலும்,

சுமந்திரன் கையில் கூட்டமைப்பின் முதுகெலும்பான தமிழரசுக் கட்சி அகப்பட்டுக்கொள்ள,

விட்டுக்கொடுப்பே இல்லாமல் குடும்பக் கட்சியை வைத்து அரசியல் செய்ய,

மாவீரர்களின் உயிர்த்தியாகங்களினாலும், தமிழ் மக்களின் துயர மரணங்களினாலும் கட்டியெழுப்பப்பட்ட தமிழ்த் தேசியம் காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றது என்ற வேதனையை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.

← பிரிவுக்குத் திரும்ப