கட்டுரைகள் · அரசியல் · கருத்துக் கட்டுரை
இல்லாத விடுதலைப் புலிகள் மீது பாய்பவர்கள், இருக்கும் அரசிடம் கேள்வி கேட்காதது ஏன்?
அன்பு உறவுகளே!
இந்தச் சிவனடியான் ஈழப் போராட்டத்தின் உண்மை வரலாற்றை ஆவணப்படுத்தும் நோக்கில், ‘ஈழ மண்ணின் சுவடுகள்’ இணையத்தில் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கின்றேன். அந்தப் பதிவுகளுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்படும் சில கருத்துகளைப் பார்க்கும்போது, வரலாற்றை ஆதாரங்களுடன் விவாதிப்பதைவிட, ஈழ விடுதலை என்ற உணர்வையே தமிழ் மக்களின் மனங்களிலிருந்து அகற்றுவதில் சிலர் அக்கறை காட்டுகின்றார்களோ என்று எண்ணத் தோன்றுகின்றது.
விமர்சனம் என்பது ஜனநாயக உரிமை. விடுதலைப் புலிகளை எவரும் விமர்சிக்கக்கூடாது என்பது எனது நிலைப்பாடு அல்ல. எந்த இயக்கத்தின் செயற்பாடுகளையும் ஆதாரங்களுடன் விமர்சிக்கலாம். அதேபோன்று, தமிழீழ விடுதலைப் புலிகள் மீதும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மீதும் ஆதாரமின்றி முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை மறுப்பதும் எனது உரிமை. அவற்றுக்கு ஆவணங்களுடன் பதிலளிப்பதைத் தமிழ்த் தேசியவாதியாக எனது கடமையாகவும் கருதுகின்றேன்.
உறவுகளே!
தமிழ் மக்கள் எதற்காகப் போராடினார்கள் என்பதைப் பற்றி இவர்கள் ஏன் பேசுவதில்லை? அமைதிவழிப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக மாறியதற்கான காரணங்களை ஏன் எடுத்துச் சொல்வதில்லை? அந்த நிலையை உருவாக்கிய சிங்களப் பௌத்த பேரினவாத அரசுகளின் பொறுப்பைப் பற்றி ஏன் கேள்வி எழுப்புவதில்லை?
இந்தப் பின்னணியை ஒதுக்கிவிட்டு, புலிகள்தான் அனைத்திற்கும் காரணம் என்று எழுதுவது எப்படி நேர்மையான வரலாறாகும்?
1956ஆம் ஆண்டிலிருந்து தமிழ் மக்கள் எதிர்கொண்ட மொழியுரிமை மறுப்பு, வன்முறைகள், இடப்பெயர்வுகள் குறித்தும் பேச வேண்டும். அவற்றில் அரசினதும் அரச படைகளினதும் பொறுப்பைச் சுட்டிக்காட்டி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும். சிங்களப் பௌத்த பேரினவாதத்தை முன்னிறுத்தும் அரசியல்வாதிகள், அமைப்புகள், சில பௌத்த துறவிகளின் செயற்பாடுகளையும் விமர்சிக்க வேண்டும்.
இவற்றையெல்லாம் விட்டுவிட்டு, 2009ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த பின்னரும், விடுதலைப் புலிகள் மீதும் இன்று களத்தில் இல்லாத அதன் தலைமை மீதும் மட்டும் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதால் தமிழ் மக்களுக்கு என்ன கிடைக்கப்போகின்றது?
உறவுகளே!
இப்போதுள்ள அனுரா அரசு முன்னைய அரசுகளைப்போல் வெளிப்படையாக இனவாதம் பேசாமல் இருக்கின்றது என்று நீங்கள் ஒருவேளை எண்ணலாம். அதற்காக அந்த அரசின் அணுகுமுறையில் பேரினவாதத்தின் தொடர்ச்சி இல்லை என்று ஏற்றுக்கொள்ள முடியுமா?
தமிழ் மக்களின் உரிமைகள் நடைமுறையில் உறுதிப்படுத்தப்படுகின்றனவா என்பதைத்தான் நாம் பார்க்க வேண்டும். அவர்களுடைய நிலம், வாழ்வாதாரம், அரசியல் அதிகாரம் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்காமல், சமத்துவம் என்று பேசுவதால் மட்டும் என்ன பயன்?
மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் நிலப் பிரச்சினையை எடுத்துக்கொள்ளுங்கள். அந்த நிலங்களை மேய்ச்சல் நிலங்களாக வர்த்தமானியில் அறிவிக்க நடவடிக்கை எடுப்பதாக அரசு கூறியிருக்கின்றது. அந்த அறிவிப்பு நடைமுறைத் தீர்வாக மாறி, கால்நடை வளர்ப்போரின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும். அறிவிப்பை மட்டும் தீர்வாக ஏற்றுக்கொள்ள முடியாது. தங்கள் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற மக்கள் எத்தனை காலம்தான் போராட வேண்டும்?
வடக்கு–கிழக்கில் இராணுவப் பிரசன்னம் பற்றியும் பேச வேண்டும். படையினரின் நிலைநிறுத்தலை நியாயமான பாதுகாப்புத் தேவைகளின் அடிப்படையில் மீளாய்வு செய்ய வேண்டும். தமிழ் மக்கள் வாழும் பகுதிகளைத் தொடர்ந்தும் சந்தேகத்துடன் அணுகும் போக்கிற்கு முடிவுகட்ட வேண்டும்.
இராணுவ வசமுள்ள பொதுமக்களின் நிலங்களை விடுவிக்க வேண்டும். மக்கள் தங்கள் நிலங்களில் வாழவும் உழைக்கவும் வழிவிட வேண்டும். சிவில் நிர்வாகத்தைச் சிவில் அதிகாரிகளே சுதந்திரமாக நடத்த வேண்டும். தமிழ் மக்கள் தங்களுடைய சொந்த மண்ணில் இயல்பாக வாழ்வதற்கு இன்னும் எத்தனை காலம் காத்திருக்க வேண்டும்?
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று அரசியலமைப்பு சொல்கின்றது. அதே அரசியலமைப்பு பௌத்தத்திற்கு முன்னுரிமையும் கொடுக்கின்றது. எல்லா மக்களும் சமமானவர்கள் என்று பேசுகின்ற அரசு, அந்தச் சமத்துவத்தை முழுமையாக்கத் தேவையான அரசியலமைப்பு மற்றும் சட்ட மாற்றங்களைச் செய்யத் துணிய வேண்டும். ஏற்கெனவே இருக்கும் உரிமைப் பாதுகாப்புகளையாவது உறுதியாக நடைமுறைப்படுத்த வேண்டும். மேடையில் பேசும் சமத்துவம் மக்களின் வாழ்க்கையிலும் இருக்க வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை இன்று அதிகாரத்தில் இருக்கும் அரசிடம் முன்வைக்காமல், இல்லாத புலிகளிடம் மட்டும் கணக்குக் கேட்பது ஏன்? தமிழ் மக்களின் இன்றைய உரிமைகளுக்காகக் குரல் கொடுக்காமல், அவர்களுடைய போராட்ட வரலாற்றை இழிவுபடுத்துவதிலேயே அக்கறை காட்டுவது யாருக்குப் பயன்படுகின்றது?
இத்தகைய அணுகுமுறை சிங்களப் பேரினவாத அரசியலுக்கே துணைபோகின்றது என்பதே எனது விமர்சனம்.
‘ஈழ மண்ணின் சுவடுகள்’ இணையத்தில் வரலாற்றைப் பதிவு செய்வது எவரையும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக நிறுத்துவதற்காக அல்ல. எமது மக்கள் சந்தித்த அநீதிகளையும், அவர்கள் போராடிய காரணங்களையும், செய்த தியாகங்களையும் அடுத்த தலைமுறை அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே.
ஆதாரங்களுடன் வரும் விமர்சனங்களை விவாதிக்கலாம். ஆனால், புனைவுகளால் எமது வரலாற்றை மாற்றுவதற்கு இடமளிக்க முடியாது. அதனால்தான் ஈழப் போராட்டத்தின் உண்மை வரலாற்றைத் தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்கின்றேன்.
சுவாமி சங்கரானந்தா🙏


வாசகர் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…