தமிழ் இணையச் சஞ்சிகைவரலாறு · அரசியல் · உலகப் பார்வை

ஈழ மண்ணின் சுவடுகள்

வரலாற்றைப் பதிவு செய்வோம் · ஆதாரங்களைப் பாதுகாப்போம்

விளம்பரம்

கட்டுரைகள் · ஈழ வரலாறு

இந்திய–இலங்கை ஒப்பந்தத்தின் பொதுமன்னிப்பும் பலாலியில் உயிர்நீத்த பன்னிரு போராளிகளும்

பலாலியில் உயிர்நீத்த பன்னிருவரின் நினைவுப் படத்தொகுப்பு

1987ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் திகதி இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனவுக்கும் இடையில் இந்திய–இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தானது.

அந்த ஒப்பந்தத்தின் 2.11ஆம் பிரிவின்படி, பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டங்களின் கீழ் தடுத்து வைக்கப்பட்டவர்கள், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், தண்டிக்கப்பட்டவர்கள் மட்டுமல்லாமல், போராளிகளுக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்று இலங்கை அரசு எழுத்துமூலமாக ஏற்றுக்கொண்டது.

பலாலி ஆயுத ஒப்படைப்பு நிகழ்வில் யோகரத்தினம் யோகியும் சேபால அட்டிகல்லவும்

அதன்பின்னர், 1987ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி பலாலியில் நடைபெற்ற ஆயுத ஒப்படைப்பு நிகழ்வில், விடுதலைப் புலிகளின் சார்பில் யோகரத்தினம் யோகி தனது கைத்துப்பாக்கியை ஒப்படைத்தார். இலங்கை அரசின் சார்பில் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் சேபால அட்டிகல்ல அதனைப் பெற்றுக்கொண்டு, இலங்கை அரசால் வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ பொதுமன்னிப்பு ஆவணத்தை யோகியிடம் கையளித்தார்.

இவ்வாறு இந்திய–இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் ஆயுத ஒப்படைப்பும் பொதுமன்னிப்பும் நடைமுறைக்கு வந்திருந்த நிலையில்தான், இரண்டு மாதங்களின் பின்னர் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்திய பலாலி சம்பவம் நடைபெற்றது.

பருத்தித்துறை கடலில் வழிமறிக்கப்பட்ட புலேந்தி அம்மான், குமரப்பா

அந்தப் பொதுமன்னிப்பு நடைமுறையில் இருந்த காலமான 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி அதிகாலை இரண்டு மணியளவில், பருத்தித்துறை கடற்பரப்பில் “கடல்புறா” படகில் புலிகளின் அன்றைய திருகோணமலை மாவட்டத் தளபதியான புலேந்தி அம்மான் என்ற குணநாயகம் தருமராசா, யாழ்ப்பாண மாவட்டத் தளபதியான குமரப்பா என்ற பாலசுந்தரம் இரத்தினபாலன் ஆகியோர், அவர்களது மெய்ப்பாதுகாவலர்கள் உட்பட மொத்தம் பதினேழு போராளிகளுடன் பயணித்துக் கொண்டிருந்தனர்.

டிராவிஸ் சின்னையா

அவ்வேளை, 1962ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26ஆம் திகதி கண்டியில் பிறந்து, 1982ஆம் ஆண்டு இலங்கை கடற்படையில் இணைந்து பணியாற்றிய தமிழ் அதிகாரியான டிராவிஸ் சின்னையா தலைமையில் டோரா படகில் வந்த கடற்படையினர், “கடல்புறா” படகை வழிமறித்து அதில் பயணித்தவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டனர்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் கடுமையான இயக்கக் கட்டுப்பாடு நிலவியது. எதிரியின் கைகளில் உயிருடன் அகப்படக்கூடாது என்ற நிலைப்பாடும் உறுப்பினர்களிடையே வலியுறுத்தப்பட்டிருந்தது.

அந்த இயக்கத்தின் முக்கிய தளபதிகளான புலேந்தி அம்மானும் குமரப்பாவும், அவர்களுடன் சென்ற போராளிகளும் இலங்கை கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டபோது எதிர்த்துப் போராடவோ, தப்பிச் செல்ல முயற்சிக்கவோ இல்லை.

காரணம் என்னவெனில், அப்போது போர் நிறுத்தப்பட்டு இந்திய–இலங்கை ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தது. ஆயுத ஒப்படைப்பு இடம்பெற்றிருந்ததுடன் போராளிகளுக்குப் பொதுமன்னிப்பும் வழங்கப்பட்டிருந்தது.

எனவே தங்களை எதிரிகளிடம் சிக்கிய போர்க்கைதிகளாக அவர்கள் அப்போது கருதவில்லை. ஒப்பந்த காலத்தில் இடம்பெறும் வழக்கமான விசாரணைக்காகவே கடற்படையினர் தங்களை காங்கேசன்துறை முகாமுக்குக் கொண்டு செல்கின்றார்கள் என்ற நம்பிக்கையிலும், கடற்படை அதிகாரி டிராவிஸ் சின்னையா தமிழராக இருந்ததாலும் கடற்படையினரின் விசாரணைகளுக்கு ஒத்துழைத்து அவர்களுடன் சென்றனர்.

பின்னாளில் இந்த டிராவிஸ் ஜெரமி லியந்துரு சின்னையா என்ற இலங்கை கடற்படையின் தமிழ் அதிகாரி, இலங்கை கடற்படையின் தளபதியாக உயர்ந்தவராவார் என்பது ஒருபக்கம் இருக்க, அன்றைய தினம் அவரது தலைமையிலான கடற்படையினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் பதினேழு பேரும் முதலில் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கும், பின்னர் பலாலி முகாமுக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.

அதன் பின்னரே நிலைமை முற்றாக மாறத் தொடங்கியது.

அவர்கள் தடுத்து வைக்கப்பட்ட காலம் ஒரு சாதாரண போர்க்காலம் அல்ல.

இந்திய–இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்தது.

ஆயுத ஒப்படைப்பு ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

போராளிகளுக்குப் பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்று இலங்கை அரசு ஏற்றுக்கொண்டிருந்தது.

இந்திய அமைதிப்படையும் வடக்கு–கிழக்கில் நிலைகொண்டிருந்தது.

இவ்வாறான நிலையில் புலேந்தி அம்மான், குமரப்பா உள்ளிட்ட பதினேழு பேரையும் மேலதிக விசாரணைக்காக கொழும்பிற்கு கொண்டு செல்ல இலங்கை அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

இந்த விடயம் அன்றைய இலங்கை ஜனாதிபதி ஜூனியஸ் ரிச்சர்ட் ஜெயவர்த்தனாவுக்கும், பாதுகாப்பு அமைச்சராக இருந்த லலித் வில்லியம் சமரசேகர அத்துலத்முதலிக்கும் அறிவிக்கப்பட்டது.

அதன் பின்னர், பலாலியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் பதினேழு பேரையும் கொழும்பிற்கு கொண்டு செல்லும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

அதுவரை ஒப்பந்த காலத்தின் கீழ் இடம்பெறும் ஒரு விசாரணை என்ற நம்பிக்கையுடன் கடற்படையினருக்கு ஒத்துழைத்திருந்த புலேந்தி அம்மான், குமரப்பா உள்ளிட்டோருக்கு, தங்களை கொழும்பிற்கு கொண்டு செல்ல முயற்சி மேற்கொள்ளப்படுவதாகத் தெரியவந்தபோதுதான் நிலைமையின் தீவிரம் முழுமையாகப் புரியத் தொடங்கியது.

தடுக்க முயன்ற இந்தியத் தரப்பு

இங்கு இலங்கை இராணுவத் தரப்பு இந்திய–இலங்கை ஒப்பந்தத்தின் 2.9ஆம் பிரிவை குறிப்பிட்டு இன்னொரு வாதத்தை முன்வைத்தது. அந்தப் பிரிவின்படி ஆயுதக் குழுக்கள் தங்களிடமிருந்த ஆயுதங்களையும் வெடிபொருட்களையும் ஒப்படைக்க வேண்டும் என்றும், கடலில் வழிமறிக்கப்பட்டவர்கள் ஆயுதங்களுடன் பயணித்ததால் அந்தப் பிரிவை மீறியுள்ளதாகவும் இலங்கைத் தரப்பு வாதிட்டது.

மறுபுறம், ஒப்பந்தத்தின் 2.11ஆம் பிரிவின்கீழ் போராளிகளுக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டிருந்ததுடன், தமது சுயபாதுகாப்பிற்காக சிறியரக ஆயுதங்களை வைத்திருக்கவும் அனுமதி இருந்ததால், தமது உறுப்பினர்களைக் கைது செய்து கொழும்பிற்கு கொண்டு செல்ல முடியாது என்பதே விடுதலைப் புலிகளின் நிலைப்பாடாக இருந்தது.

அதாவது, ஒரே இந்திய–இலங்கை ஒப்பந்தத்தின் 2.9ஆம் பிரிவை இலங்கைத் தரப்பு முன்வைத்த நிலையில், 2.11ஆம் பிரிவை விடுதலைப் புலிகள் முன்வைத்தனர்.

ஹர்கிரத் சிங்

இந்த நடவடிக்கையைத் தடுக்க விடுதலைப் புலிகள் இந்தியப் படையின் தொடர்பாளரான பிரிகேடியர் பெர்னாண்டசுடனும், இந்திய அமைதிப்படையின் 54ஆவது காலாட்படைப் பிரிவுக்கு கட்டளைத் தளபதியாக இருந்த ஹர்கிரத் சிங்குடனும் தொடர்பு கொண்டனர்.

இந்த விவகாரம் 54ஆவது காலாட்படைப் பிரிவினால் இந்திய இராணுவத்தின் அன்றைய பிரதான தளபதி திபீந்தர் சிங்கும், இந்தியாவின் இலங்கைக்கான தூதுவராக இருந்த ஜே. என். டிக்‌ஷித் போன்ற இந்தியாவின் உயர்மட்ட அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டதைத் தொடர்ந்து, இறுதி முடிவு எடுக்கப்படும் வரை பதினேழு பேரையும் கொழும்பிற்கு மாற்றுவதைத் தடுக்குமாறு இந்திய ராணுவத் தரப்புக்கு உத்தரவிடப்பட்டது.

இதன் காரணமாக பலாலியில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களின் உடல்நிலையை இந்திய இராணுவ மருத்துவர்கள் தொடர்ந்து பார்வையிடுவதற்கும், மாத்தையா தலைமையிலான விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் அவர்களைச் சந்திப்பதற்கும் இந்திய இராணுவத் தரப்பு ஏற்பாடு செய்தது என்றாலும், அவர்களது முயற்சிகளாலும் இலங்கை அரசின் முடிவை மாற்ற முடியவில்லை.

இங்கே ஒரு முக்கியமான முரண்பாடு எழுந்தது.

இலங்கை அரசு ஒரு பக்கம் போராளிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதாக இந்திய–இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் ஏற்றுக்கொண்டு, ஆயுத ஒப்படைப்பு நிகழ்விலும் அதனை நடைமுறைப்படுத்தியிருந்தது.

மறுபக்கம், அதே பொதுமன்னிப்பு காலத்தில் கைது செய்யப்பட்ட புலேந்தி அம்மான், குமரப்பா உள்ளிட்டவர்களை கொழும்பிற்கு கொண்டு சென்று விசாரணைக்கு உட்படுத்த முயன்றது.

இதனால்தான் புலேந்தி அம்மான்,

“சிறிலங்கா இராணுவத்தினர் யுத்தகாலத்தில் கைது செய்யப்பட்டவர்கள். நாம் சமாதான காலத்தில் கைது செய்யப்பட்டவர்கள்”

என்று கூறினார்.

அந்த ஒரு வாக்கியத்திற்குள் அன்றைய முழு முரண்பாடும் அடங்கியிருந்தது.

இந்தியப் பாதுகாப்பு ஏன் விலகியது?

பலாலியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த புலேந்தி அம்மான், குமரப்பா உள்ளிட்ட பதினேழு பேரையும் கொழும்பிற்கு கொண்டு செல்லும் முயற்சியைத் தடுக்க இந்தியப் படைத்தரப்பிலும் இந்தியத் தூதரக மட்டத்திலும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

இந்த நிலையில், அதுவரை அந்தப் பதினேழு பேருக்கும் வழங்கப்பட்டிருந்த இந்தியப் படையின் பாதுகாப்பை விலக்கிக்கொள்ள புதுடில்லியிலிருந்து உத்தரவு வந்ததைத் தொடர்ந்து, அவர்களைச் சுற்றி பாதுகாப்பில் இருந்த இந்தியப் படையினர் அங்கிருந்து விலகினர்.

அதன் பின்னர் அவர்களின் பாதுகாப்பு முழுமையாக இலங்கைப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் சென்றதுடன், அவர்களை கொழும்பிற்கு கொண்டு செல்லும் நடவடிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டது.

இங்கேதான் இந்தியாவின் பங்கு தொடர்பான மிக முக்கியமான கேள்வி எழுகிறது.

இந்திய–இலங்கை ஒப்பந்தத்திற்கு இந்தியா உத்தரவாதமாக இருந்தது.

இந்திய அமைதிப்படை வடக்கு–கிழக்கில் நிலைகொண்டிருந்தது.

போராளிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்ற ஏற்பாடும் அதே ஒப்பந்தத்தில் இடம்பெற்றிருந்தது.

இவ்வாறான நிலையில், பொதுமன்னிப்பு நடைமுறையில் இருந்த காலத்தில் கைது செய்யப்பட்ட பதினேழு பேரையும் கொழும்பிற்கு கொண்டு செல்லும் நடவடிக்கையை இந்தியாவால் தடுக்க முடியாமல் போனது மட்டுமல்லாமல், இறுதியில் அவர்களுக்கான இந்தியப் பாதுகாப்பும் விலக்கப்பட்டது.

அந்த முடிவு எவ்வாறு எடுக்கப்பட்டது?

புதுடில்லியிலிருந்து அந்த உத்தரவு ஏன் வழங்கப்பட்டது?

ஒப்பந்தத்தின் கீழ் ஏற்பட்டிருந்த பாதுகாப்பு நம்பிக்கையிலிருந்து இந்தியா ஏன் விலகியது?

பலாலியில் பின்னர் நிகழ்ந்த துயரத்தின் பின்னணியைப் புரிந்துகொள்ள இந்தக் கேள்விகளையும் தவிர்க்க முடியாது.

சயனைட் குப்பிகள் எவ்வாறு சென்றன?

மாத்தையா மற்றும் அன்ரன் பாலசிங்கம்

இதற்கிடையில் 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி பிற்பகலில், பதினேழு பேரையும் மறுநாள் கொழும்பிற்கு கொண்டு செல்வதற்காக இலங்கை விமானப்படையின் விமானம் ஒன்று பலாலி விமான நிலையத்தில் தரையிறங்கியது.

இதன் பின்னரே தங்களை கொழும்பிற்கு கொண்டு செல்லும் நடவடிக்கை தவிர்க்க முடியாத நிலையை எட்டிவிட்டதாக புலேந்தி அம்மான், குமரப்பா உள்ளிட்டோர் உணரத் தொடங்கினர்.

தங்களை கொழும்பிற்கு கொண்டு செல்லும் முயற்சி நடைபெறுவதை அறிந்ததும் புலேந்தி அம்மானும் குமரப்பாவும் அதன் தீவிரத்தை முழுமையாக உணர்ந்திருந்தனர்.

தம்மையும் தம்முடன் தடுத்து வைக்கப்பட்டிருந்த போராளிகளையும் கொழும்பிற்கு கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டால், சயனைட் குப்பிகளை அனுப்பிவைக்குமாறு புலேந்தி அம்மான் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு செய்தி அனுப்பினார்.

குமரப்பாவும் தனது கடிதத்தில், தன்னை கொழும்பிற்கு கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டால் தன்னை முழுமையாக அழித்துக்கொள்ளத் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

புலேந்தி அம்மானின் கோரிக்கையும் குமரப்பாவின் வேண்டுகோளும் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, அத்தருணத்தில் அவருக்கு அருகில் இருந்த போராளிகளிடமிருந்து சயனைட் குப்பிகள் சேகரிக்கப்பட்டன.

அஜித், கடாபி, தேவன், தியாகு உள்ளிட்ட அவரது மெய்ப்பாதுகாவலர்களிடமிருந்தும் மேலும் சில போராளிகளிடமிருந்தும் சயனைட் குப்பிகள் பெறப்பட்டன.

அவ்வாறு சேகரிக்கப்பட்ட சயனைட் குப்பிகள், மாத்தையா என்ற கோபாலசாமி மகேந்திரராஜா மற்றும் அன்ரன் பாலசிங்கம் மூலம் பலாலியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பதினேழு போராளிகளிடமும் இரகசியமாக சேர்ப்பிக்கப்பட்டன.

அவர்கள் கைது செய்யப்பட்டபோது எதிர்த்துப் போராடாமல், ஒப்பந்தத்தின் மீது நம்பிக்கை வைத்து விசாரணைக்கு ஒத்துழைத்துச் சென்றவர்கள்.

ஆனால் அதே போராளிகள், தங்களை கொழும்பிற்கு கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டபோது அந்த நம்பிக்கை முறிந்துவிட்டதாக உணர்ந்தனர்.

குமரப்பா தனது மனைவிக்குச் சொல்ல வேண்டிய செய்திகளை தெரிவித்தார்.

புலேந்தி அம்மானும் தனது குடும்பத்திற்கான செய்திகளை தெரிவித்தார்.

கரன் தனது மனைவியையும் தனது இரண்டு குழந்தைகளின் எதிர்காலத்தையும் நினைத்தார்.

அந்தச் சந்திப்பு ஒரு சாதாரண சந்திப்பாக இருக்கவில்லை.

அவர்கள் எடுக்கப்போகும் முடிவின் பாரத்தையும், மீண்டும் ஒருவரையொருவர் காண முடியாமல் போகக்கூடிய நிலைமையையும் உணர்ந்திருந்த சந்திப்பாக அது அமைந்தது.

1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி

1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி கைது செய்யப்பட்ட பதினேழு பேரையும் பலவந்தமாக கொழும்பிற்கு கொண்டு செல்லும் முயற்சி மேற்கொள்ளப்பட்டபோது, அவர்கள் தங்களிடம் இருந்த சயனைட் குப்பிகளை கடித்தனர்.

அவர்களில் பதினொருவர் அன்றைய தினமே உயிரிழந்தனர்.

சயனைட் உட்கொண்ட நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கப்டன் ரகுவப்பா என்ற இராஜமாணிக்கம் ரகுமான், 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி உயிரிழந்தார்.

இதன்மூலம் மொத்தம் பன்னிரண்டு போராளிகள் உயிரிழந்தனர்.

அவர்கள்,

யாழ்ப்பாண மாவட்டத் தளபதி லெப்டினன்ட் கேணல் குமரப்பா — பாலசுந்தரம் இரத்தினபாலன், வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.

திருகோணமலை மாவட்டத் தளபதி லெப்டினன்ட் கேணல் புலேந்தி அம்மான் — குணநாயகம் தருமராசா, பாலையூற்று, திருகோணமலை.

மேஜர் அப்துல்லா — கணபதிப்பிள்ளை நகுலகுமார், சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.

கப்டன் பழனி — பாலசுப்பிரமணியம் யோகேந்திரராசா, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.

கப்டன் கரன் — வைத்திலிங்கம் மனோகரன், சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்.

கப்டன் மிரேஸ் — தவராஜா மோகனராஜா, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.

கப்டன் நளன் — கணபதிப்பிள்ளை குணேந்திரராஜா, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.

லெப்டினன்ட் அன்பழகன் — தேசோமயானந்தம் உத்தமசிகாமணி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.

லெப்டினன்ட் தவக்குமார் — சோமசுந்தரம் பாக்கியராஜா, முள்ளியான், யாழ்ப்பாணம்.

இரண்டாம் லெப்டினன்ட் ரெஜினோல்ட் — கபிரியேல் பேனாட் மரியநாயகம், முள்ளியான், யாழ்ப்பாணம்.

இரண்டாம் லெப்டினன்ட் ஆனந்தகுமார் — ஞானபிரகாசம் பிரான்சிஸ் அலோசியஸ், மணற்காடு, யாழ்ப்பாணம்.

இவர்களுடன் சயனைட் உட்கொண்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கப்டன் ரகுவப்பா என்ற இராஜமாணிக்கம் ரகுமான், வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம் — 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி உயிரிழந்தார்.

இவர்களே பலாலியில் உயிர்நீத்த பன்னிரு போராளிகள் என நினைவுகூரப்படுகின்றனர்.

இவ்வாறு பன்னிருவர் உயிரிழந்த நிலையில், தாமீம், கருணாநிதி, தாஸ், செல்வா, சிவகுமார் ஆகிய ஐவர் சயனைட் உட்கொண்ட பின்னரும் உயிர் காப்பாற்றப்பட்டனர்.

வல்வெட்டித்துறையை மூழ்கடித்த துயரம்

1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி பலாலியில் நடந்த சம்பவத்தின் செய்தி வல்வெட்டித்துறையை வந்தடைந்தபோது, அந்தப் பகுதி முழுவதும் துயரத்தில் மூழ்கியது.

உயிரிழந்தவர்களின் பெயர்கள் ஒன்றன்பின் ஒன்றாக அறிவிக்கப்பட்டன.

குமரப்பா உயிரிழந்த செய்தி அவரது குடும்பத்தை சென்றடைந்தது.

புலேந்தி அம்மான் உயிரிழந்த செய்தி அவரது குடும்பத்தை சென்றடைந்தது.

அதன்பின்னர் மற்ற போராளிகளின் மரணச் செய்திகளும் அவர்களது குடும்பங்களை சென்றடைந்தன.

ஒவ்வொரு வீட்டிலிருந்தும் எழுந்த அழுகையும் ஒப்பாரியும் ஒன்றோடொன்று கலந்து, வல்வெட்டித்துறை முழுவதும் ஒரு பெரிய துயர வீடாக மாறியதுபோன்ற சூழ்நிலை உருவானது.

கணவனை இழந்த மனைவிகள்.

மகனை இழந்த பெற்றோர்கள்.

சகோதரனை இழந்த குடும்பங்கள்.

தந்தையை இழந்த குழந்தைகள்.

ஒரே சம்பவம் பல குடும்பங்களின் வாழ்க்கையை ஒரே நேரத்தில் மாற்றியிருந்தது.

மறுநாள் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு மக்கள் தொடர்ந்து சென்று குடும்பங்களுடன் துயரைப் பகிர்ந்தனர்.

உயிரிழந்த பன்னிருவருக்கும் பொதுவான இறுதி அஞ்சலி செலுத்த வல்வெட்டித்துறை விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

மைதானம் மக்கள் கூட்டத்தால் நிரம்பியது.

உடல் பேழைகளைக் கடந்து மக்கள் வரிசையாகச் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.

குமரப்பாவின் மனைவி ரஜனி, புலேந்தி அம்மானின் மனைவி சுபா, கரனின் மனைவி குகா மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தினர் அந்தத் துயரத்தின் நடுவில் நின்றனர்.

ஒப்பாரி, இரங்கல் பாடல்கள், கவிதைகள், நினைவுரைகள் என்று அந்த மைதானமே ஒரு பெரும் துயர நிகழ்வாக மாறியது.

வேலுப்பிள்ளை பிரபாகரனும் இயக்கத்தின் தலைமை உறுப்பினர்களும் உயிரிழந்த தமது நீண்டகால சகாக்களுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

பல ஆண்டுகளாகத் தம்முடன் செயற்பட்ட மூத்த இயக்க உறுப்பினர்களின் உடல்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வேண்டிய தருணமாக அது அமைந்தது.

இறுதியில் உடல் பேழைகள் சிதைகளில் வைக்கப்பட்டு தீ மூட்டப்பட்டன.

அந்தத் தீயுடன் பன்னிரண்டு உயிர்கள் மட்டுமல்ல, இந்திய–இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட அமைதியின் மீதான தமிழ் மக்களின் நம்பிக்கையும் எரிந்து கொண்டிருந்தது.

திலீபனின் மரணத்தின் அதிர்ச்சி தமிழ் மக்களின் மனங்களில் இருந்து அடங்காத நிலையில் நிகழ்ந்த இந்தப் பலாலி மரணங்கள், தமிழ் மக்களின் அரசியல் மனநிலையையே மேலும் கடுமையாக மாற்றின.

பலாலியில் உயிரிழந்த பன்னிருவரின் மரணம் பன்னிரண்டு குடும்பங்களின் தனிப்பட்ட துயரம் மட்டும் அல்ல.

அது ஒரு சமூகத்தின் மனநிலையையும், இந்தியா மீதான அதன் நம்பிக்கையையும், இந்திய–இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் உருவாகியிருந்த அரசியல் எதிர்பார்ப்புகளையும் மாற்றிய ஒரு வரலாற்றுச் சம்பவமாக அமைந்தது.

யார் இந்த குமரப்பா?

குமரப்பா

பாலசுந்தரம் இரத்தினபாலன் என்ற இயற்பெயரைக் கொண்ட குமரப்பா 1957ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் திகதி யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் பிறந்தவர்.

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் சிறுவயதில் வாழ்ந்து வளர்ந்த வல்வெட்டித்துறைப் பகுதியிலேயே கிட்டு, மாத்தையா, குண்டப்பா போன்றோருடன் குமரப்பாவும் வாழ்ந்ததால், வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் நெருக்கமான அறிமுகம் அவருக்கு சிறுபிராயத்தில் இருந்தே இருந்தது என்பதோடு, 1972ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் திகதி இலங்கை குடியரசு நாடாகியதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் வேலுப்பிள்ளை பிரபாகரன் நிகழ்த்திய பஸ் எரிப்புச் சம்பவத்தின் போது தலைவருடன் கூடச் சென்றவர்களில் சிவபாலி என்ற இவரது மூத்த தமையனாரும் ஒருவர் ஆவார்.

அத்தோடு, பாலன் என்ற இவரது அடுத்த தமையனாரும் ஆரம்பகாலங்களில் விடுதலைப் புலிகளின் சரக்குக் கப்பல்களில் பணியாற்றினார். குமரப்பாவின் தம்பியாரும் அவ்வாறே பணியாற்றினார். இவ்வாறு அவரது குடும்ப உறுப்பினர்கள் பலரும் இயக்கத்தின் நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டிருந்தனர்.

குமரப்பா 1978ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தன்னை இணைத்துக் கொண்டாலும், 1980ஆம் ஆண்டு இயக்க உடைவின்போது வெளியேறி அயர்லாந்து சென்று, 1983ஆம் ஆண்டு மீண்டும் தன்னை முழுமையாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைத்துக் கொண்டார்.

இந்தியப் பாதுகாப்புப் படையினரால் ஹிமாசலப் பிரதேசத்தில் வைத்து வழங்கப்பட்ட விடுதலைப் புலிகளின் இரண்டாம் பயிற்சிப் பாசறையில் பயிற்சியை முடித்துக் கொண்டு தளம் திரும்பிய அவர், தமிழர் தாயகப் பகுதிகளில் நிலைகொண்டிருந்த இலங்கை இராணுவத்தினருக்கும் காவல்துறையினருக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஆயுத நடவடிக்கைகளில் பங்கேற்றார்.

தமிழீழத்தின் பல மாவட்டங்களில் நடைபெற்ற இராணுவ நடவடிக்கைகளில் பங்கேற்ற குமரப்பாவின் திறமையை அறிந்த விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், அவரை மட்டக்களப்பு மாவட்டத் தளபதியாகவும் பின்னர் யாழ்ப்பாண மாவட்டத் தளபதியாகவும் நியமித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலும் யாழ்ப்பாண மாவட்டத்திலும் தளபதியாக இருந்த காலத்தில் இலங்கை இராணுவத்தினருக்கும் காவல்துறையினருக்கும் எதிரான பல தாக்குதல்களில் குமரப்பா நேரடியாக ஈடுபட்டதோடு, அந்தந்த மாவட்டங்களில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கட்டமைப்பை வலுப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகித்தார்.

இந்திய–இலங்கை ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த பின்னர், திருகோணமலை மாவட்டத் தளபதி புலேந்தி அம்மான் உள்ளிட்ட போராளிகளுடன் கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்தபோதே குமரப்பா குழுவினர் இலங்கை கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டனர்.

முதலில் காங்கேசன்துறை முகாமிற்கும் பின்னர் பலாலி முகாமிற்கும் கொண்டு செல்லப்பட்ட குமரப்பா, தன்னை கொழும்பிற்கு கொண்டு செல்லும் முயற்சி இடம்பெறுவதை அறிந்ததும் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.

அந்தக் கடிதத்தில்,

“கனம் தலைவர் அவர்களுக்கு, குமரப்பா ஆகிய நான் 3.10.87 அன்று அதிகாலை 4.30 மணியளவில் சிறிலங்கா கடற்படையால் பருத்தித்துறை கடலுக்கு மேலாக வைத்துக் கைது செய்யப்பட்டேன். பின்பு காங்கேசன்துறை முகாமிற்கு கொண்டு வந்து, அங்கிருந்து பலாலி இராணுவ முகாமுக்கு இந்திய அமைதிப்படையினரின் கண்காணிப்பிலும், இலங்கை இராணுவத்தின் பாதுகாப்பிலும் இருக்கிறேன். மேலும் என்னை கொழும்பிற்குக் கொண்டு செல்ல நேரிடலாம். நான் இலங்கை அரசாங்கத்தின் சட்டங்களை அங்கீகரிக்கவில்லை. என்னைக் கொழும்பு கொண்டு செல்ல நேரும் பட்சத்தில் என்னை முழுமையாக அழித்துக் கொள்ள சித்தமாயுள்ளேன். புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம். இங்ஙனம், குமரப்பா.”

என்று எழுதியிருந்தார்.

அவர் எழுதிய அந்தக் கடிதம் வெறும் சில வரிகளைக் கொண்டதாக இருந்தாலும், அன்றைய சூழ்நிலையையும் தனது முடிவையும் குமரப்பா எவ்வளவு தெளிவாகப் புரிந்திருந்தார் என்பதை வெளிப்படுத்துகிறது.

யார் இந்த புலேந்தி அம்மான்?

புலேந்தி அம்மான்

குணநாயகம் தருமராசா என்ற இயற்பெயரைக் கொண்டு 1961ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7ஆம் திகதி பிறந்த புலேந்தி அம்மான், 1979ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தோடு தன்னை இணைத்துக் கொண்டு, 1980ஆம் ஆண்டு நடைபெற்ற இயக்க உடைவின்போதும் வெளியேறாமல் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வழிநடத்தலிலேயே பயணித்து, தமிழீழ விடுதலைப் புலிகளின் மத்தியக் குழு உறுப்பினராகவும் திருகோணமலை மாவட்டத் தளபதியாகவும் இருந்தவர்.

விடுதலைப் புலிகளின் ஆரம்பகால ஆயுதப் போராட்ட நடவடிக்கைகளில் புலேந்தி அம்மானின் பெயர் முக்கியமானதாக இருந்தது.

1981ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி காங்கேசன்துறை வீதியில் இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகாலத் தாக்குதலில் புலேந்தி அம்மான் பங்கேற்றார்.

அதன்பின்னர், 1983ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி பருத்தித்துறையில் பொலிஸ் ஜீப் மீது நடத்தப்பட்ட தாக்குதல், 1983ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி சாவகச்சேரியில் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் முத்தையா மீதான தாக்குதல், 1983ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி கந்தர்மடம் தேர்தல் சாவடியில் இராணுவத்தினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல், 1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் திகதி நடைபெற்ற திருநெல்வேலித் தாக்குதல் உட்பட பல நடவடிக்கைகளில் அவர் பங்கேற்றார்.

திருநெல்வேலித் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் இந்தியப் பாதுகாப்புப் படையினரால் விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட்ட விடுதலைப் புலிகளின் முதலாம் பாசறையில் பயிற்சியை முடித்துக் கொண்டு தமிழ்நாடு திரும்பிய புலேந்தி அம்மான், தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள சிறுமலைக் காட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நாலாம் பாசறையை நடத்தினார்.

அதன் பிறகு தளம் திரும்பிய அவர், 1984ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆம் திகதி பதவியா–புல்மோட்டை வீதியில் உள்ள சிரீபுரச் சந்தியில் இலங்கை இராணுவத்தினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல், 1985ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் திகதி அச்சுவேலி பகுதியில் ஏற்பட்ட இராணுவ முற்றுகைக்கு எதிரான தாக்குதல், 1985ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி கொக்கிளாய் பகுதியில் இடம்பெற்ற இராணுவ மோதல், திருகோணமலை–கிண்ணியா வீதியில் இராணுவக் கவச வாகனத்தின் மீதும் விமானப்படையினரின் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள், முள்ளிப்பொத்தானை மற்றும் பன்மதவாச்சி பகுதிகளில் இடம்பெற்ற ஆயுத நடவடிக்கைகள் என அவரது போராட்ட வாழ்க்கை நீண்டது.

திருகோணமலை மாவட்டத்தில் தமிழர் பாரம்பரிய நிலப்பரப்புகளில் முன்னெடுக்கப்பட்ட குடியேற்ற நடவடிக்கைகளுக்கு எதிரான ஆயுத எதிர்ப்பிலும் புலேந்தி அம்மான் முக்கியமான தளபதியாக விளங்கினார்.

ஆனால் புலேந்தி அம்மானின் வாழ்க்கை போர்க்களத்திற்குள் மட்டும் அடங்கியிருக்கவில்லை.

அரியாலை கிராமத்தில் புலேந்தி அம்மான் தங்கியிருந்த காலத்தில், அங்கு யாராவது உயிரிழந்தால் இறுதி ஊர்வலத்தில் பிரேதத்தைத் தோளில் சுமந்தவர்களில் ஒருவராக புலேந்தி அம்மான் இருப்பார்.

மங்கள நிகழ்வுகள் நடைபெறும் வீடுகளில் அலங்கார வேலைகளிலும் உதவுவார்.

குடும்பத்தில் முரண்டு பிடிக்கும் இளைஞர்களுக்கு அறிவுரை கூறுவார்.

மாலை நேரங்களில் இளைஞர்களுக்கு உதைபந்தாட்டப் பயிற்சி கொடுப்பார்.

அயலில் உள்ள மாணவர்களுக்கு இலவசமாகப் பாடம் சொல்லிக் கொடுப்பார்.

அதனால் பல குடும்பங்கள் அவரை ஒரு போராளியாக மட்டுமல்ல, தங்களது குடும்பத்தில் ஒருவராகவே பார்த்தன.

அவரது வேகமான இயல்பினால் நண்பர்கள் அவருக்கு “சுப்பர்சொனிக்” என்ற பட்டப்பெயரையும் வைத்திருந்தனர்.

மிதிவண்டியிலிருந்து எந்த வாகனத்தை ஓட்டினாலும் வேகம்.

பயிற்சியிலும் வேகம்.

மற்றவர்கள் கடுமையான பயிற்சியின் பின்னர் களைத்துக் கிடக்கும் நேரத்திலும் புலேந்தி அம்மான் சிரித்தபடி துள்ளித்திரிவார்.

அந்த இளைஞனே பின்னர் திருகோணமலை மாவட்டத்தின் முக்கிய தளபதியாக உயர்ந்தார்.

பிறக்கப்போகும் தனது மகனைக் காணாமலே சென்ற புலேந்தி அம்மான்

புலேந்தி அம்மான் உயிரிழந்தபோது திருமணமாகி சில மாதங்களே கடந்திருந்ததுடன், அவரது மனைவி ஆறு மாதக் கர்ப்பிணியாகவும் இருந்தார். தனது மகன் பிறப்பதற்கு முன்பே அவர் உயிரிழந்ததால், தந்தையும் மகனும் ஒருவரையொருவர் காணும் வாய்ப்பே இல்லாமல் போனது.

தந்தையை ஒருபோதும் காணாத மகனாக அவர் வளர வேண்டியிருந்தது.

ஒரு விடுதலைப் போராட்டத்தின் வரலாறு வெறும் தாக்குதல்கள், அரசியல் ஒப்பந்தங்கள், இராணுவ நடவடிக்கைகள் என்பவற்றால் மட்டும் எழுதப்படுவதில்லை.

அதற்குப் பின்னால் கணவனை இழந்த மனைவிகளும், தந்தையைப் பார்க்காமலேயே பிறந்த குழந்தைகளும், மகனை இழந்த பெற்றோர்களும், சகோதரனை இழந்த குடும்பங்களும் இருந்தார்கள்.

அந்த வகையில் புலேந்தி அம்மானின் வாழ்க்கையும் மரணமும் அந்தப் போராட்டம் கொடுத்த விலையின் ஒரு பகுதியாகவே அமைந்தது.

தன்னை கொழும்பிற்கு கொண்டு செல்லும் முயற்சி இடம்பெறுவதை அறிந்த புலேந்தி அம்மான், சயனைட் குப்பிகளை அனுப்பிவைக்குமாறு கோரியிருந்தார்.

அவரது உயிரிழப்பு, மனைவிக்கும் பிறக்கவிருந்த குழந்தைக்கும் நிரந்தரமான குடும்ப இழப்பை ஏற்படுத்தியது. அவரை நினைவுகூரும் வரலாற்றில் அவரது இயக்க வாழ்க்கையுடன் இந்தக் குடும்பத் துயரமும் இடம்பெற வேண்டும்.

யார் இந்த கரன்?

கரன்

1953ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் திகதி, வல்வெட்டித்துறை மற்றும் வல்வெட்டியைப் பூர்வீகமாகக் கொண்ட பெற்றோருக்கு மகனாகப் பிறந்த வைத்தியலிங்கம் மனோகரனே, பின்னாளில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் கரன் என்று அறியப்பட்டவர்.

வைத்தியலிங்கம் குடும்பம் நீண்டகாலமாக வவுனியாவில் வாழ்ந்து வந்தது.

1972ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் திகதி இடம்பெற்ற பேருந்து எரிப்புச் சம்பவத்தின் பின்னர், தனது 17ஆவது வயதில் இருந்த வேலுப்பிள்ளை பிரபாகரனை அவரது தந்தையார் வவுனியாவிற்கு அழைத்துச் சென்று தங்க வைத்திருந்த காலத்திலேயே உறவினர்களான வைத்தியலிங்கம் குடும்பத்திற்கும் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் இடையிலான நெருக்கமான பழக்கம் ஏற்பட்டது.

அந்தக் குடும்பத்தின் இரண்டாவது மகனான வைத்தியலிங்கம் சொர்ணலிங்கமே பின்னாளில் கேணல் சங்கர் என்ற பெயரில் அறியப்பட்டார்.

மற்றொரு சகோதரரான சித்தார்த்தன் என்ற வைத்தியலிங்கம் வசீகரன், 1987ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி தாக்குதல் ஒன்றிற்கான தயாரிப்பின்போது ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தார்.

இன்னொரு சகோதரரான சுதன் என்ற வைத்தியலிங்கம் உதயகுமார், இயக்கத்திலிருந்து விலகியிருந்த காலத்தில் அரச படையினரால் கைது செய்யப்பட்ட பின்னர் அவரது நிலை தெரியாமல் போனது.

இவ்வாறு வைத்தியலிங்கம் குடும்பத்தின் வாழ்க்கை தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு காலகட்டங்களோடு பின்னிப்பிணைந்திருந்தது.

கரன் என்ற வைத்தியலிங்கம் மனோகரன், தனது மச்சாள் முறையிலான “குகா” என அழைக்கப்பட்ட குகேணேஸ்வரி அவர்களை மணந்து இரண்டு பிள்ளைகளுக்குத் தந்தையாகி குடும்ப வாழ்க்கையுடன் இருந்தபோதிலும், தமிழீழ விடுதலைப் புலிகளின் கடல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு “கடற்புறா” படகின் பொறுப்பாளராகச் செயற்பட்டு வந்தார்.

இந்நிலையில் இலங்கை கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டு, முதலில் காங்கேசன்துறை முகாமுக்கும் பின்னர் பலாலிப் படைமுகாமிற்கும் கொண்டு செல்லப்பட்ட அவர், மேலதிக விசாரணைக்காக கொழும்பிற்கு அழைத்துச் செல்ல இலங்கை அரசுப் படைகள் முயன்றபோது சயனைட் குப்பியை கடித்து, 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி பலாலியில் புலேந்தி அம்மான், குமரப்பா உள்ளிட்ட சகாக்களுடன் உயிர்நீத்தார்.

தனது மனைவியையும் இரண்டு சிறு பிள்ளைகளையும் பின்னால் விட்டுச் சென்ற அவரது மறைவின் பின்னர், அவரது மனைவியான குகேணேஸ்வரி அவர்களை அவரது சகோதரரான கேணல் சங்கர் என்ற வைத்தியலிங்கம் சொர்ணலிங்கம் திருமணம் செய்துகொண்டார்.

அதனால் கரன் என்ற வைத்தியலிங்கம் மனோகரனின் வரலாறு, பலாலியில் உயிர்நீத்த பன்னிரு போராளிகளின் வரலாற்றின் ஒரு பகுதியாக மட்டுமல்லாமல், தமிழீழ விடுதலைப் போராட்டத்தோடு தனது பல பிள்ளைகளின் வாழ்க்கையும் பின்னிப்பிணைந்த ஒரு குடும்பத்தின் வரலாறாகவும் நிற்கிறது.

திலீபனின் மரணத்திலிருந்து பலாலி வரை

1987ஆம் ஆண்டு இந்திய–இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தானபோது தமிழ் மக்களிடையே ஒரு புதிய அரசியல் சூழல் உருவாகும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் அது நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.

1987ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி, இந்திய–இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் முன்வைக்கப்பட்ட ஐந்து கோரிக்கைகளை இந்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி திலீபன் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார். பன்னிரண்டு நாட்கள் நீர்கூட அருந்தாமல் உண்ணாவிரதமிருந்த அவர், 1987ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26ஆம் திகதி உயிரிழந்தார்.

அவரது மரணத்திலிருந்து ஏழு நாட்களுக்குப் பின்னர், 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி புலேந்தி அம்மான், குமரப்பா உள்ளிட்ட பதினேழு பேர் கைது செய்யப்பட்டனர்.

அதிலிருந்து இரண்டு நாட்களுக்குப் பின்னர், 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி பலாலியில் சயனைட் அருந்தியதில் பதினொருவர் உயிரிழந்தனர்.

மறுநாள் கப்டன் ரகுவப்பாவும் உயிரிழந்தார்.

இவ்வாறு பன்னிருவர் உயிரிழந்த நிலையில், தாமீம், கருணாநிதி, தாஸ், செல்வா, சிவகுமார் ஆகிய ஐவர் சயனைட் உட்கொண்ட பின்னரும் உயிர் காப்பாற்றப்பட்டனர்.

அதற்குப் பின்னர் சில நாட்களுக்குள் இந்திய அமைதிப்படைக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நேரடி ஆயுத மோதல் ஆரம்பமானது.

ஆகவே திலீபனின் மரணம், புலேந்தி அம்மான்–குமரப்பா உள்ளிட்ட பன்னிருவரின் மரணம், அதன் பின்னர் இந்திய அமைதிப்படையுடன் ஆரம்பித்த போர் என்பவற்றை தனித்தனி நிகழ்வுகளாக மட்டும் பார்க்க முடியாது.

அவை ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய ஒரு வரலாற்றுத் தொடராக அமைந்தன.

பொதுமன்னிப்பின் நிலை என்ன ஆனது?

இங்கே வரலாற்றில் பதில் தேவைப்படும் ஒரு முக்கியமான கேள்வி உள்ளது.

1987ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் திகதி கையெழுத்தான இந்திய–இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் போராளிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்று இலங்கை அரசு எழுத்துமூலமாக ஏற்றுக்கொண்டது.

1987ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி ஆயுத ஒப்படைப்பு நிகழ்வில் இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலாளர் சேபால அட்டிகல்ல பொதுமன்னிப்பு ஆவணத்தை யோகரத்தினம் யோகியிடம் கையளித்தார்.

அப்படியானால் அந்தப் பொதுமன்னிப்பு நடைமுறையில் இருந்த 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி கைது செய்யப்பட்ட புலேந்தி அம்மான், குமரப்பா உள்ளிட்ட பதினேழு பேரின் சட்டநிலை என்ன?

அவர்களை எந்த அடிப்படையில் கொழும்பிற்கு கொண்டு சென்று விசாரணைக்கு உட்படுத்த முயன்றார்கள்?

இந்தியாவின் உத்தரவாதத்தை நம்பி ஆயுதங்களை ஒப்படைத்த இயக்கத்தின் தளபதிகளை இலங்கை அரசு கைது செய்தபோது, அவர்களைப் பாதுகாக்க இந்தியாவால் ஏன் முடியவில்லை?

இந்திய இராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகளும் இந்தியத் தூதுவரும் முயன்றபோதும் இலங்கை அரசின் முடிவை மாற்ற முடியாமல் போனது ஏன்?

அதுவரை இந்தியப் படையின் பாதுகாப்பில் இருந்த பதினேழு பேரிடமிருந்து அந்தப் பாதுகாப்பு இறுதியில் ஏன் விலக்கப்பட்டது?

இந்தக் கேள்விகளைத் தவிர்த்துவிட்டு பலாலியில் உயிரிழந்த பன்னிருவரின் வரலாற்றை முழுமையாக எழுத முடியாது.

நம்பிக்கை முறிந்த இடம் பலாலி

1987ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் திகதி கையெழுத்தான இந்திய–இலங்கை ஒப்பந்தம் ஒரு புதிய தொடக்கமாகக் காட்டப்பட்டது.

ஆகஸ்ட் மாதம் ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்டன.

செப்டம்பர் மாதம் திலீபன் உயிரிழந்தார்.

ஒக்டோபர் மாதம் புலேந்தி அம்மான், குமரப்பா உள்ளிட்ட பதினேழு பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் பன்னிருவர் உயிரிழந்தனர்.

அதன்பின்னர் இந்திய அமைதிப்படைக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் போர் ஆரம்பமானது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு அமைதிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர்கள், சில வாரங்களின் பின்னர் போரின் எதிரெதிர் பக்கங்களில் நின்றார்கள்.

அந்த மாற்றத்தின் நடுவில் திலீபனின் உயிரும் போனது.

குமரப்பா, புலேந்தி அம்மான் உள்ளிட்ட பன்னிருவரின் உயிர்களும் போனது.

அதனால் 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி பலாலியில் நடந்த சம்பவம் பன்னிரண்டு போராளிகளின் மரணம் மட்டும் அல்ல.

இந்திய–இலங்கை ஒப்பந்தத்தின் மீது தமிழர் தரப்பில் இருந்த நம்பிக்கை முறிந்து விழுந்த முக்கியமான தருணங்களில் ஒன்றாகவும் அது அமைந்தது.

குமரப்பாவையும் புலேந்தி அம்மானையும் நினைவுகூரும்போது அவர்கள் இறந்த நாளை மட்டும் நினைவுகூருவது போதாது.

அவர்கள் எப்போது கைது செய்யப்பட்டார்கள்?

எந்த அரசியல் சூழ்நிலையில் கைது செய்யப்பட்டார்கள்?

அப்போது பொதுமன்னிப்பு நடைமுறையில் இருந்ததா?

அவர்களை ஏன் கொழும்பிற்கு கொண்டு செல்ல முயன்றார்கள்?

அதனை இந்தியாவால் ஏன் தடுக்க முடியவில்லை?

இந்தியப் பாதுகாப்பு ஏன் விலக்கப்பட்டது?

அதன் பின்னர் ஏன் இந்திய அமைதிப்படைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் போர் வெடித்தது?

இந்தக் கேள்விகளுடன்தான் அந்த வரலாற்றை நாம் வாசிக்க வேண்டும்.

அப்போதுதான் பலாலியில் உயிர்நீத்த பன்னிருவரின் வரலாறும், 1987ஆம் ஆண்டு இந்திய–இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் ஏற்பட்ட அரசியல் முறிவும் முழுமையாகப் புரியும்.

சுவாமி சங்கரானந்தா🙏

← ஈழ வரலாறு