தமிழ் இணையச் சஞ்சிகைவரலாறு · அரசியல் · உலகப் பார்வை

ஈழ மண்ணின் சுவடுகள்

வரலாற்றைப் பதிவு செய்வோம் · ஆதாரங்களைப் பாதுகாப்போம்

விளம்பரம்

கட்டுரைகள்

திலீபன் எவ்வாறு பயங்கரவாதி ஆவார்?

நல்லூரில் திலீபனின் வெண்கலச் சிலையை காவல்துறையினர் அகற்றும் காட்சி; வழங்கப்பட்ட படம்

அன்பு உறவுகளே!

யாழ்ப்பாணம் நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவாக அண்மையில் நிறுவப்பட்ட வெண்கல உருவச்சிலை, இன்று (2026 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் திகதி) இலங்கை காவல்துறையினரால் அகற்றப்பட்டுள்ளது.

“பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ஒருவரை நினைவுகூரும் வகையில் இந்தச் சிலை அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, இலங்கை காவல்துறை அதனை அகற்றியுள்ளது.

இந்தச் சம்பவம் ஒரு முக்கியமான வரலாற்று மற்றும் சட்டக் கேள்வியை எழுப்புகின்றது.

விளம்பரம்

1987 ஆம் ஆண்டு இந்திய–இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டிருந்த காலப்பகுதியில் வாழ்ந்து, தனது இறுதிப் போராட்டமாக ஆயுதத்தை அல்லாது உண்ணாவிரதத்தைத் தேர்ந்தெடுத்த திலீபனை, இன்று எந்தச் சட்ட அடிப்படையில் பயங்கரவாதி என்று வகைப்படுத்துகின்றார்கள்?

திலீபனின் உருவப்படம்; வழங்கப்பட்ட படம்

1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் திகதி இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இலங்கை ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனவுக்கும் இடையில் இந்திய–இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

அந்த ஒப்பந்தத்தின் 2.11 ஆம் பிரிவில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டங்களின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகள் உள்ளிட்டவர்களுக்கும், போராளிகளுக்கும், அச்சட்டங்களின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட அல்லது தண்டிக்கப்பட்டவர்களுக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டது.

அதே ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் போர்நிறுத்தமும் ஆயுத ஒப்படைப்பும் முன்னெடுக்கப்பட்டன.

1987 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி பலாலியில் நடைபெற்ற ஆயுத ஒப்படைப்பு நிகழ்வின்போது, அன்றைய இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் செபால அட்டிகல்லே, பொதுமன்னிப்பை உறுதிப்படுத்தும் ஆவணத்தை விடுதலைப் புலிகளின் பிரதிநிதியிடம் வழங்கினார்.

எனவே, போராளிகளுக்கான பொதுமன்னிப்பு என்பது பின்னாளில் உருவாக்கப்பட்ட அரசியல் விளக்கம் அல்ல.

அது இந்திய–இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் எழுத்து மூலமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு ஏற்பாடாகும்.

அந்த அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து, பல்வேறு தமிழ் ஆயுத இயக்கங்களில் செயற்பட்டிருந்த பலர் பின்னாளில் இலங்கையின் நாடாளுமன்ற அரசியலில் நேரடியாகப் பங்கேற்றனர்.

செல்வம் அடைக்கலநாதன் நாடாளுமன்ற உறுப்பினராகச் செயற்பட்டு வருகின்றார்.

தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், கோவிந்தன் கருணாகரம் போன்றவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகப் பணியாற்றியுள்ளனர்.

டக்ளஸ் தேவானந்தாவும் நீண்டகாலம் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இலங்கை அரசின் அமைச்சராகவும் செயற்பட்டுள்ளார்.

இவ்வாறான வரலாற்றுப் பின்னணியில், அன்றைய பொதுமன்னிப்பு அரசியல் சூழலுக்குள் இருந்த திலீபனின் நிலையை மட்டும் எவ்வாறு முற்றிலும் வேறுபட்டதாகக் கருத முடியும்?

இந்திய–இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்ட பின்னர், திலீபன் தனது கோரிக்கைகளை ஆயுத நடவடிக்கையின் மூலம் முன்வைக்கவில்லை.

அவர் மேற்கொண்ட இறுதிப் போராட்டம் துப்பாக்கியோ, குண்டோ, ஆயுதத் தாக்குதலோ அல்ல.

1987 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி நல்லூரில் உணவும் நீரும் உட்கொள்ளாத உண்ணாவிரதப் போராட்டத்தை அவர் ஆரம்பித்தார்.

தனது ஐந்து கோரிக்கைகளையும் இந்திய அரசாங்கத்தின் முன் வைத்து, தனது உடலையே தனது போராட்டத்தின் கருவியாக மாற்றினார்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் திலீபன்; வழங்கப்பட்ட வரலாற்றுப் படம்

தொடர்ச்சியாக உண்ணாவிரதத்தில் இருந்த திலீபன், 12 ஆம் நாளான 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி உயிரிழந்தார்.

திலீபன் ஆயுத மோதலில் உயிரிழக்கவில்லை.

ஆயுதத் தாக்குதல் ஒன்றை நடத்திக்கொண்டிருந்தபோது உயிரிழக்கவில்லை.

உணவும் நீரும் தவிர்த்த உண்ணாவிரதப் போராட்டத்தின் முடிவிலேயே அவர் உயிரிழந்தார்.

இங்கு வரலாற்றுக் காலவரிசையும் மிகவும் முக்கியமானது.

திலீபன் உயிரிழந்தது 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி.

அதன் பின்னரே ஒக்டோபர் மாதத்தின் ஆரம்பத்தில் நிலைமை தீவிரமாக மாறியது.

புலேந்திரன், குமரப்பா உள்ளிட்ட 17 விடுதலைப் புலிகள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு பலாலிக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

அவர்களைக் கொழும்புக்குக் கொண்டு செல்ல மேற்கொள்ளப்பட்ட முயற்சி, இந்திய–இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்பட்டிருந்த பொதுமன்னிப்பின் நடைமுறை தொடர்பாக மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கியது.

1987 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி அவர்கள் சயனைட் உட்கொண்டனர்.

அவர்களில் புலேந்திரன், குமரப்பா உள்ளிட்ட 12 பேர் உயிரிழந்தனர்.

அதன் பின்னர் நிலைமை மிக வேகமாக மோசமடைந்து, இந்திய அமைதிகாக்கும் படைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான உறவு முறிந்து வெளிப்படையான ஆயுத மோதலாக மாறியது.

ஆனால் இவை அனைத்திற்கும் முன்னரே திலீபன் உயிரிழந்துவிட்டார்.

அவர் உயிரிழந்தது செப்டம்பர் 26 ஆம் திகதி.

இந்தியப் படைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான பெரும் ஆயுத மோதல் உருவானது அதன் பின்னர்தான்.

எனவே பின்னர் ஏற்பட்ட அரசியல் மற்றும் இராணுவ நிகழ்வுகளை எடுத்துக்கொண்டு, அதற்கு முன்னர் நிலவிய 1987 ஆம் ஆண்டின் சட்ட மற்றும் அரசியல் சூழலை மறுபரிசீலனை செய்வது வரலாற்றை நேர்மையாக அணுகும் முறையாக இருக்க முடியாது.

இன்று ஒரு அமைப்பு சட்டரீதியாகத் தடை செய்யப்பட்டிருக்கிறது என்பதையும், 1987 ஆம் ஆண்டு இந்திய–இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் ஏற்பட்டிருந்த போர்நிறுத்தம், ஆயுத ஒப்படைப்பு மற்றும் பொதுமன்னிப்பு சார்ந்த அரசியல் சூழலையும் ஒன்றாகக் கலந்து மதிப்பிட முடியாது.

திலீபனின் அரசியல் அமைப்புச் சார்பு குறித்து வெவ்வேறு நிலைப்பாடுகள் இருக்கலாம்.

அவரது அரசியல் இலக்குகளை ஒருவர் ஏற்கலாம்.

மற்றொருவர் மறுக்கலாம்.

ஆனால் 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அவர் மேற்கொண்ட இறுதிப் போராட்டம் ஆயுதப் போராட்டம் அல்ல என்பது மறுக்க முடியாத வரலாற்று உண்மை.

அது உணவும் நீரும் தவிர்த்த உண்ணாவிரதப் போராட்டம்.

அந்த உண்ணாவிரதத்தின் மூலமாகவே அவர் தனது ஐந்து கோரிக்கைகளையும் இந்திய அரசாங்கத்தின் முன் வைத்தார்.

அந்த உண்ணாவிரதத்திலேயே அவர் தனது உயிரையும் இழந்தார்.

இந்த வரலாற்றுப் பின்னணியில்தான் நான் இலங்கையின் சட்டமா அதிபரிடமும், இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடமும், இலங்கை அரசாங்கத்திடமும் ஒரு நேரடியான கேள்வியை முன்வைக்கின்றேன்.

1987 ஆம் ஆண்டு இந்திய–இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் போராளிகளுக்குப் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டிருந்த ஒரு காலப்பகுதியில்,

ஆயுத நடவடிக்கைக்குப் பதிலாக உண்ணாவிரதம் என்ற அகிம்சைப் போராட்ட முறையைத் தேர்ந்தெடுத்து,

தனது கோரிக்கைகளை இந்திய அரசாங்கத்தின் முன் வைத்து,

அந்த உண்ணாவிரதத்திலேயே உயிரிழந்த இராசையா பார்த்திபன் என்ற திலீபனை,

இன்று எந்தச் சட்ட அடிப்படையில் “பயங்கரவாதி” என்று வகைப்படுத்துகின்றீர்கள்?

தமிழர்களின் நினைவுரிமை தொடர்பில் நான் நீண்டகாலமாக விமர்சித்து வரும் இலங்கை பெளத்த பேரினவாத அரசியல் அணுகுமுறையின் பின்னணியிலும் இந்தக் கேள்வியை முன்வைக்கின்றேன்.

பொதுநிகழ்வில் பேசும் திலீபன்; வழங்கப்பட்ட வரலாற்றுப் படம்

1987 ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட இந்திய–இலங்கை ஒப்பந்தத்தை எடுத்துப் பாருங்கள்.

அதன் 2.11 ஆம் பிரிவைப் பாருங்கள்.

அதன் கீழ் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பைப் பாருங்கள்.

திலீபனின் உண்ணாவிரதம் ஆரம்பமான செப்டம்பர் 15 ஆம் திகதியையும், அவர் உயிரிழந்த செப்டம்பர் 26 ஆம் திகதியையும் பாருங்கள்.

அதன் பின்னர் ஒக்டோபரில் ஏற்பட்ட நிகழ்வுகளின் காலவரிசையையும் பாருங்கள்.

அவற்றின் அடிப்படையில் இராசையா பார்த்திபன் என்ற திலீபனை எந்தச் சட்ட அடிப்படையில் இன்று “பயங்கரவாதி” என்று கூறுகின்றீர்கள் என்பதை சட்டரீதியாகவும் வரலாற்று ரீதியாகவும் விளக்குங்கள்.

அந்த வரலாற்றுப் பின்னணியின் அடிப்படையில்,

“திலீபன் ஒரு பயங்கரவாதி அல்ல” என்பதே எனது நிலைப்பாடு.

அந்த நிலைப்பாட்டை மறுப்பவர்கள் உணர்ச்சியின் அடிப்படையில் அல்லாமல்,

1987 ஆம் ஆண்டு இந்திய–இலங்கை ஒப்பந்தத்தையும்,

அன்றைய பொதுமன்னிப்பு ஏற்பாடுகளையும்,

திலீபனின் இறுதி உண்ணாவிரதப் போராட்டத்தின் காலவரிசையையும் அடிப்படையாகக் கொண்டு,

அதற்கான சட்ட மற்றும் வரலாற்று விளக்கத்தை முன்வைக்க வேண்டும்.

சுவாமி சங்கரானந்தா🙏

விளம்பரம்
← கட்டுரைகள்