கட்டுரைகள் · பொது
மதத்தைவிட மனிதநேயம் உயர்ந்தது! குழந்தைகளின் உரிமைகளும் மரண தண்டனையும் குறித்து இஸ்லாமிய உறவுகளிடம் சில கேள்விகள்!

சுவாமி சங்கரானந்தா
அன்பிற்குரிய தமிழ் பேசும் இஸ்லாமிய உறவுகளே!
கடந்த எனது “சவூதி அரேபியாவில் ‘தஅஸீர்’ அடிப்படையில் பங்களாதேஷ் பிரஜைகள் இருவருக்கு மரண தண்டனை” சம்பந்தமான பதிவுக்கு, Mazin Need என்ற உங்களைப் போன்ற இஸ்லாமியர் ஒருவர்,
தனிநபர்களின் குற்றங்களுக்கு இஸ்லாமிய மார்க்கத்தைப் பொறுப்பாக்க முடியாது என்றும், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கியதன் மூலம் இஸ்லாமியச் சட்டம் நீதியை நிலைநாட்டியுள்ளதாகவும் வாதிட்டிருந்தார்.
மேலும், இஸ்லாம் பெண்களின் விருப்பத்திற்கு முதலிடம் வழங்குவதாகக் கூறிய அவர், ஆயிஷாவின் கற்பொழுக்கத்தையும் கல்வியறிவையும் சுட்டிக்காட்டியதுடன், நான் மறுமையில் இறைவனின் கடுமையான விசாரணையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் என்னை எச்சரித்து, தனது கருத்தை எனக்குத் தெரிவித்திருந்தார்.
அவரைப் போன்று மேலும் பல இஸ்லாமியர்களும் அந்த மரண தண்டனையை ஆதரித்துச் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்த பல கருத்துகளையும் என்னால் பார்க்க, கூடியதாக இருந்ததால்,
அவருக்கு நான் கூறிய பதிலை, அவரைப் போன்று சிந்திக்கும் இஸ்லாமிய உறவுகளாகிய உங்களுக்கு எனது கருத்தாக முன்வைத்து, உங்களின் கருத்தையும் எதிர்பார்க்கின்றேன்.
உறவுகளே!
ஆயிஷாவின் கற்பொழுக்கத்தையும் கல்வியறிவையும் பற்றி எனது கடந்த பதிவில் நான் கேள்விக்குட்படுத்தவில்லை. எனது கருத்து, சுன்னி இஸ்லாமிய மரபில் முக்கியமான ஹதீஸ் நூலாகக் கருதப்படும் சஹீஹ் அல்-புகாரியின் 5133 மற்றும் 5134 ஆகிய பதிவுகளில், ஆயிஷாவுக்கு ஆறு வயதாக இருந்தபோது முகமது நபியுடன் திருமணம் நடைபெற்றதாகவும், ஒன்பது வயதில் திருமண உறவு நிறைவேற்றப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டுவதாகும்.
இஸ்லாமிய மார்க்கத்தின் வழிகாட்டியாகவும், முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டிய முன்மாதிரியாகவும் கருதப்படும் முகமது நபியின் வாழ்க்கை தொடர்பாக, உங்கள் மதநூலிலேயே இவ்வாறான ஒரு பதிவு இருக்கும்போது, அதனை இன்றைய குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் மனிதநேயத்தின் அடிப்படையில் கேள்விக்குட்படுத்துவது எவ்வாறு தவறாகும்?
இஸ்லாம் பெண்களின் விருப்பத்திற்கே முதலிடம் வழங்குகின்றது என்று Mazin Need அவர்களைப் போன்று நீங்களும் கூறினால், ஆறு வயதுக் குழந்தையான ஆயிஷா, 50 வயதைக் கடந்த முகமது நபியை மணக்க முழுமையான, சுதந்திரமான, அறிவுபூர்வமான சம்மதத்தை வழங்கியிருக்க முடியும் என்று கூறுகின்றீர்களா?
ஆறு வயதுக் குழந்தைக்குத் திருமணம் என்றால் என்ன, அதன் பொறுப்புகள் என்ன, அதன் உடல் மற்றும் உளவியல் விளைவுகள் என்ன என்பவற்றைப் புரிந்துகொள்ளும் பக்குவம் இருந்திருக்குமா?
இன்றைய குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் திருமணத்திற்கான சம்மதம் தொடர்பான அடிப்படை அறநெறிகளை நீங்கள் ஏற்றுக்கொள்கின்றீர்களா?
அல்லது குழந்தைத் திருமணத்தை அனுமதித்த பழங்கால மதமரபுகளை இன்றும் பின்பற்ற வேண்டும் என்று கருதுகின்றீர்களா?
“நான் இறைத்தூதர் முகமது நபியின் போதனைகளையும் வழிகாட்டுதல்களையும் பின்பற்றும் மார்க்கத்தில் பயணிக்கும் இஸ்லாமியன்” என்று நீங்களும் கூறினால், உங்கள் நபியின் வாழ்க்கை தொடர்பாக ஹதீஸில் கூறப்பட்டுள்ள முன்னுதாரணத்தைப் பின்பற்றி, உங்களது ஆறு வயதுப் பெண் குழந்தைக்கு, 50 வயதைக் கடந்த ஒருவரைத் திருமணம் செய்து வைப்பீர்களா?
இந்தக் கேள்விக்குச் சரியா, பிழையா என்று நேரடியாகப் பதிலளியுங்கள்.
உங்கள் சொந்தக் குழந்தையின் வாழ்க்கையில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு செயலை, மதத்தின் வழிகாட்டியாகக் கருதப்படும் ஒருவரின் வாழ்க்கையுடன் தொடர்புபடுத்தும்போது மட்டும் எவ்வாறு நியாயப்படுத்த முடியும்?
ஒரு செயல் 1400 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்றதாகக் கூறப்படுகின்றது என்பதற்காகவோ, மதநூலில் இடம்பெற்றுள்ளது என்பதற்காகவோ, அது எல்லாக் காலத்திற்கும் பொருத்தமான அறநெறியாகிவிடுமா?
இன்றைய குழந்தைகள் பாதுகாப்பு நெறிகளின்படி, ஆறு வயதுக் குழந்தையால் திருமணத்திற்கு அறிவுபூர்வமான சம்மதத்தை வழங்க முடியாது. ஒன்பது வயதுக் குழந்தையுடன் வயது வந்த ஒருவர் பாலுறவு கொள்வதையும் குழந்தையின் சம்மதத்தின் பெயரால் நியாயப்படுத்த முடியாது.
இது இஸ்லாமியக் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, இந்து, கிறிஸ்தவ, பௌத்த மற்றும் எந்த மதத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கும் பொருந்தக்கூடிய அடிப்படை அறநெறியாகும்.
உறவுகளே!
இதே சஹீஹ் அல்-புகாரியின் 86 ஆவது நூலில், 6848 ஆவது ஹதீஸ் ‘தஅஸீர் மற்றும் ஒழுக்கத் தண்டனை’ தொடர்பான பகுதியில் இடம்பெற்றுள்ளது.
அதில், அல்லாஹ்வால் நிர்ணயிக்கப்பட்ட தண்டனைக்குரிய குற்றங்களைத் தவிர, மற்ற குற்றங்களுக்குப் பத்துக் கசையடிகளுக்கு மேல் வழங்கக்கூடாது என்று முகமது நபி கூறியதாகப் பதிவாகியுள்ளது.
ஆகவே, ஆறு வயதுக் குழந்தையைத் திருமணம் செய்ததாக உங்கள் ஹதீஸ் நூலில் கூறப்படும் அதே முகமது நபியின் கூற்றுதான் ஒழுக்கத் தண்டனை தொடர்பாகவும் பதிவாகியுள்ளது.
தஅஸீர் என்பது இஸ்லாமியச் சட்டத்தில் குறிப்பிட்ட தண்டனை நிர்ணயிக்கப்படாத குற்றங்களுக்கு நீதிபதி அல்லது ஆட்சியாளரின் விருப்புரிமையின் அடிப்படையில் தண்டனை வழங்கும் முறையாகும்.
இந்தத் தண்டனை முறையின் வரம்புகள் குறித்து இஸ்லாமியச் சட்ட அறிஞர்களிடையே மாறுபட்ட கருத்துகள் இருக்கின்றன. சிலர் குறிப்பிட்ட கடுமையான குற்றங்களுக்கு மரண தண்டனையையும் அனுமதிக்கலாம் என்று விளக்கியுள்ளனர்.
ஆனால், சஹீஹ் அல்-புகாரி 6848-இல் தஅஸீர் என்ற பெயரில் மரண தண்டனை வழங்க வேண்டும் என்று நேரடியாகக் கூறப்படவில்லை.
இந்நிலையில், 2026 அக்டோபர் மாதம் 14 ஆம் திகதி, சவூதி அரேபியாவின் மக்கா பகுதியில் பங்களாதேஷ் பிரஜைகள் இருவருக்கும் தஅஸீர் முறையின் கீழ் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
பள்ளிவாசல் ஒன்றில் ஒழுக்கக்கேடான செயலில் ஈடுபட்டதாக அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. அந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாகவும், குற்றத்தின் தீவிரத்தையும் புனித இடத்தின் மரியாதையையும் கருத்தில் கொண்டு மரண தண்டனை வழங்கப்பட்டதாகவும் சவூதி அரேபிய உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
ஆனால், அவர்கள் செய்ததாகக் கூறப்படும் செயலின் முழுமையான விபரங்களைச் சவூதி அதிகாரிகள் பொதுவெளியில் வெளியிடவில்லை. அவர்களுக்கு எவ்வாறான சட்ட உதவி வழங்கப்பட்டது, விசாரணை எந்த அளவுக்கு வெளிப்படையாக நடைபெற்றது என்பன போன்ற முக்கியமான கேள்விகளுக்கும் போதுமான விளக்கங்கள் கிடைக்கவில்லை.
இத்தகைய நிலையில், இரண்டு மனித உயிர்கள் பறிக்கப்பட்டதை இஸ்லாமியச் சட்டம் நீதியை நிலைநாட்டியதற்கான சான்று என்று எவ்வாறு கூற முடியும்?
குற்றம் நடந்ததாகக் கூறப்படும் இடம் புனிதமானது என்பதற்காக மட்டும் மரண தண்டனை நியாயமானதாகிவிடுமா?
ஒருவர் செய்த குற்றத்தின் தன்மையையும், அவருக்கு எதிரான ஆதாரங்களையும், விசாரணையின் நேர்மையையும், வழங்கப்படும் தண்டனையின் அளவையும் ஆராயாமல், மதச்சட்டத்தின் பெயரால் தண்டனை வழங்கப்பட்டுவிட்டது என்பதற்காக அதனை நீதியின் வெற்றியாகக் கொண்டாட முடியுமா?
தஅஸீர் முறையில் மரண தண்டனை வழங்குவதற்கு முகமது நபியின் எந்த ஹதீஸில் நேரடியாகக் கட்டளையிடப்பட்டுள்ளது?
சில இஸ்லாமியச் சட்ட அறிஞர்கள் வழங்கிய விளக்கங்களின் அடிப்படையில் மனித உயிர்களைப் பறிப்பதை, ஒட்டுமொத்த இஸ்லாமிய மார்க்கத்தின் நீதியாக எவ்வாறு நியாயப்படுத்துகின்றீர்கள்?
இங்கு உங்களிடம் நான் கேட்பது மிகவும் எளிமையான கேள்விதான்.
முகமது நபியின் திருமண வாழ்க்கை தொடர்பாக ஹதீஸில் பதிவாகியுள்ள நடைமுறையை இன்றைய குழந்தைகள் பாதுகாப்பு நெறிகளின் அடிப்படையில் உங்கள் சொந்தக் குழந்தைகளின் வாழ்க்கையில் பின்பற்ற மாட்டீர்கள் என்றால், அதே நபியின் வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டு வளர்ச்சியடைந்த மதச்சட்டங்களின் பெயரால் மனிதர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படுவதை மட்டும் எவ்வாறு நியாயப்படுத்துகின்றீர்கள்?
அதிலும், தஅஸீர் தொடர்பான 6848 ஆவது ஹதீஸில் மரண தண்டனை வழங்க வேண்டும் என்று நேரடியாகக் கூறப்படாத நிலையில், பின்னாளில் உருவாக்கப்பட்ட சட்ட விளக்கங்களின் அடிப்படையில் இரண்டு மனித உயிர்கள் பறிக்கப்பட்டதை இஸ்லாமிய நீதி நிலைநாட்டப்பட்டதாக எவ்வாறு கொண்டாடுகின்றீர்கள்?
குழந்தைகளின் பாதுகாப்பிற்கு இன்றைய மனிதநேயத்தை ஏற்றுக்கொள்ளும் நீங்கள், மனித உயிர்களைப் பறிக்கும் தண்டனையை மட்டும் மதத்தின் பெயரால் நியாயப்படுத்துவது ஏன்?
இரண்டுமே ஒரே நபியின் வாழ்க்கை மற்றும் போதனைகள் தொடர்பாக ஹதீஸ் நூலில் இடம்பெற்றுள்ள பதிவுகள் என்றாலும், அவை வெவ்வேறு விடயங்களைப் பற்றியவை. ஆனால், ஒரு விடயத்தில் இன்றைய மனிதநேயத்தின் அடிப்படையில் தீர்மானம் எடுக்கும் நீங்கள், மற்றொரு விடயத்தில் மட்டும் பழங்கால மதச்சட்டங்களின் விளக்கங்களை மனித உயிர்களைவிட உயர்வாகக் கருதுவது ஏன் என்பதே எனது கேள்வி.
அத்தோடு, மறுமையில் இறைவன் தண்டனை வழங்குவான் என்று Mazin Need அவர்களைப் போன்று நீங்களும் நம்புகின்றவர்களாக இருந்தால், உங்களிடம் இன்னுமொரு கேள்வியைக் கேட்க விரும்புகின்றேன்.
அந்த பங்களாதேஷ் பிரஜைகள் இருவரையும் மரண தண்டனைக்கு உட்படுத்தாமல், அவர்கள் செய்ததாகக் கூறப்படும் குற்றங்களுக்கான இறுதித் தண்டனையை மறுமையில் உங்கள் இறைவனே வழங்கட்டும் என்று விட்டிருக்கலாமே என்று உங்களுக்கு எண்ணம் வரவில்லையா?
என்னைக் கண்டிக்க மறுமைத் தண்டனையை முன்வைக்கும் நீங்கள், அவர்களைத் தண்டிக்க மட்டும் மரண தண்டனையை நியாயப்படுத்துவது ஏன்?
இதுதான் உங்கள் மதநம்பிக்கைக்கும் தண்டனை குறித்த உங்கள் வாதத்திற்கும் இடையிலான முரண்பாடு!
குற்றம் செய்தவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துவதையும், அவர்களுக்குரிய தண்டனையை வழங்குவதையும் நான் எதிர்க்கவில்லை. ஆனால், தவறு செய்தவர்களைத் திருத்தி வாழவைக்கும் வாய்ப்பை மறுத்து, அவர்களுடைய உயிரைப் பறிப்பதை நீதியின் வெற்றியாகக் கொண்டாடுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
ஒரு மனிதன் தவறு செய்துவிட்டான் என்பதற்காக அவனுடைய உயிரைப் பறிப்பதுதான் நீதியென்றால், மனிதநேயம் என்பதற்கு என்ன பொருள்?
தவறு செய்த மனிதனைத் திருத்த முடியாதா? அவனுக்குத் தண்டனை வழங்குவதற்குச் சிறைத்தண்டனை உள்ளிட்ட மாற்று வழிகள் இல்லையா? மனித உயிரைப் பறிப்பதுதான் இறுதியான தீர்வாக இருக்க வேண்டுமா?
உறவுகளே!
ஒரு மதத்தைச் சேர்ந்த தனிநபர் செய்யும் குற்றத்திற்கு ஒட்டுமொத்த மதச் சமூகத்தையும் பொறுப்பாக்க முடியாது என்ற உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கின்றேன்.
ஆனால், மதத்தின் பெயரால் ஓர் அரசாங்கம் மனித உயிர்களைப் பறிக்கும்போது, அந்தச் சட்டத்தின் அடிப்படையையும் அதற்குக் கொடுக்கப்படும் மதரீதியான நியாயங்களையும் கேள்விக்குட்படுத்தாமல் இருக்க முடியாது.
தனிநபர் செய்த குற்றத்திற்கும் மதத்திற்கும் தொடர்பில்லை என்று கூறும் நீங்கள், அதே தனிநபருக்கு மதச்சட்டத்தின் கீழ் மரண தண்டனை வழங்கப்படும்போது மட்டும் அதனை மதம் நீதியை நிலைநாட்டியதற்கான சான்றாக முன்வைப்பது ஏன்?
குற்றத்திற்குப் பொறுப்பு தனிநபருடையது என்றால், தண்டனையின் நீதித்தன்மையையும் அந்தக் குற்றத்தின் அடிப்படையில் மதிப்பிட வேண்டுமே தவிர, மதத்தின் பெருமையாகக் கொண்டாட வேண்டிய அவசியம் என்ன?
மதநம்பிக்கை என்பது தனிமனித உரிமை. ஒருவர் எந்த மதத்தையும் பின்பற்றலாம். தனது இறைவனை வழிபடலாம். தனது மதநூல்களைப் புனிதமாகக் கருதலாம்.
ஆனால், அந்த நம்பிக்கையின் பெயரால் முன்வைக்கப்படும் சட்டங்களும் அறநெறிகளும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவை அல்ல.
எனது இந்தக் கேள்விகள் உங்கள் தனிப்பட்ட மதநம்பிக்கையைப் பறிப்பதற்காகவோ, இஸ்லாமிய மக்களை அவமதிப்பதற்காகவோ முன்வைக்கப்படவில்லை.
குழந்தைகளின் உரிமைகளையும் மனித உயிர்களின் மதிப்பையும் பாதுகாக்க வேண்டும் என்ற எனது மனிதநேயக் கருத்தின் அடிப்படையிலேயே இவற்றை முன்வைக்கின்றேன்.
மதத்தைவிட மனிதநேயம் உயர்ந்தது. மதநம்பிக்கைகளைவிடக் குழந்தைகளின் பாதுகாப்பு முக்கியமானது.
ஆகவே, 1400 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்கள் இன்றைய நாகரிக வளர்ச்சியை அடைந்திராத காலத்தில் கூறப்பட்ட கருத்துகளை, அவை இன்றைய மனிதநேயத்திற்கும் அடிப்படை உரிமைகளுக்கும் முரணாக இருந்தாலும் சட்டமாக்கி, மனித உயிர்களைப் பறிக்கும் கொடூரமான அரச சட்டங்களுக்கு மதத்தின் பெயரால் ஆதரவளித்து சமூகக் குற்றம் இழைக்காதீர்கள்.
மதம் என்பது மனிதர்களை நல்வழிப்படுத்தி, தவறு செய்தவர்களைத் திருத்தி வாழவைக்க வழிகாட்ட வேண்டுமே அன்றி, அவர்களைக் கொல்வதற்கு வழிகாட்டக்கூடாது.
மனித உயிர்களைப் பறிப்பதை நீதியாகக் கொண்டாடும் மதநம்பிக்கையைவிட, அந்த உயிர்களைக் காப்பாற்ற நினைக்கும் மனிதநேயமே உயர்ந்தது.
சுவாமி சங்கரானந்தா 🙏

வாசகர் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…