கட்டுரைகள் · பொது
தீபாவளி தமிழர்களுக்கான பண்டிகை அல்ல எனத் திரித்துக் கூறும் திராவிட மாயையிலிருந்து வெளியே வாருங்கள்!

சுவாமி சங்கரானந்தா
பிரதம ஆசிரியர் – ஈழ மண்ணின் சுவடுகள்
2026ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7ஆம் திகதி
தீபாவளி நெருங்கிவிட்டால், அது தமிழர்களுக்கான பண்டிகை அல்ல என்ற பழைய வாதத்தைச் சில திராவிடச் சிந்தனையாளர்கள் மீண்டும் முன்வைக்கத் தொடங்கிவிடுகின்றார்கள். தமிழர்களின் மத நம்பிக்கைகளையும் சமயப் பண்டிகைகளையும் தங்களுடைய அரசியல் சித்தாந்தத்திற்கு ஏற்றவாறு பிரித்து, எது தமிழர் பண்டிகை, எது தமிழர் பண்டிகை அல்ல என்று தீர்மானிக்க முயல்வது இன்றும் தொடர்கின்றது.
தமிழன் என்றால் அவன் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவனாகத்தான் இருக்க வேண்டுமா? அல்லது ஒரு குறிப்பிட்ட அரசியல் சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டவனாகத்தான் இருக்க வேண்டுமா?
தமிழ் என்பது ஒரு மொழி. தமிழர் என்பது அந்த மொழியைத் தாய்மொழியாகவும் தங்களுடைய அடையாளமாகவும் கொண்ட மக்கள். தமிழர்களில் இந்துக்களும் இருக்கின்றார்கள், இஸ்லாமியர்களும் இருக்கின்றார்கள், கிறிஸ்தவர்களும் இருக்கின்றார்கள். வேறு மதங்களைப் பின்பற்றுபவர்களும் எந்த மதத்தையும் பின்பற்றாதவர்களும் இருக்கின்றார்கள். மத நம்பிக்கைகளும் வழிபாட்டு முறைகளும் வேறுபடுவதால் அவர்களுடைய தமிழின அடையாளம் இல்லாமல் போய்விடுவதில்லை.
ஏக இறைவனை வணங்கும் இஸ்லாமியத் தமிழர்களுக்கு ரமழான் நோன்பின் நிறைவில் கொண்டாடப்படும் ஈத் பெருநாள் அவர்களுடைய மத நம்பிக்கையோடு இணைந்த பண்டிகையாக இருக்கின்றது. கிறிஸ்தவத் தமிழர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் கிறிஸ்மஸ் அவர்களுடைய மத நம்பிக்கையோடு இணைந்த பண்டிகையாக இருக்கின்றது.
அதேபோன்று சிவன், திருமால், முருகன், விநாயகர், சக்தி எனப் பல்வேறு தெய்வங்களைப் போற்றி வழிபடும் இந்துத் தமிழர்களுக்கு, பொங்கல், சித்திரைப் புத்தாண்டு, தீபாவளி போன்ற பண்டிகைகள் அவர்களுடைய மத நம்பிக்கைகளோடும் வழிபாட்டு மரபுகளோடும் இணைந்த திருவிழாக்களாக இருக்கின்றன.
இஸ்லாமியத் தமிழன் ஈத் பெருநாளைக் கொண்டாடுவதால் தமிழன் அல்லாமல் போய்விடுவதில்லை. கிறிஸ்தவத் தமிழன் கிறிஸ்மஸ் கொண்டாடுவதால் தமிழன் அல்லாமல் போய்விடுவதில்லை. அப்படியிருக்க இந்துத் தமிழன் தீபாவளியைக் கொண்டாடுவதால் மட்டும் அவனுடைய தமிழின அடையாளமும் இல்லாமல் போகாது என்ற உண்மையைத் தீபாவளி தமிழர்களுக்கான பண்டிகை அல்ல என்று கூறும் திராவிடச் சிந்தனையாளர்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
1938ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் திகதியிட்ட ‘குடி அரசு’ இதழில், பெரியார் என்று அழைக்கப்படும் ஈ.வெ. இராமசாமி தீபாவளியைக் கடுமையாகப் பரிகாசித்து எழுதியிருந்தார். தீபாவளியின் புராணப் பின்னணியை ஏற்க மறுத்த அவர், இந்துக்கள் அப்பண்டிகைக்காகச் செய்யும் செலவுகளையும் விமர்சித்திருந்தார்.
அந்தக் கட்டுரையின் இறுதியில், உண்மையான தமிழ் மக்கள் என்று தாம் குறிப்பிடும் திராவிடர்கள் தீபாவளியைக் கொண்டாடக்கூடாது என்ற தனது விருப்பத்தையும் வெளிப்படுத்தியிருந்தார்.

இங்கேதான் பெரியாரிடமும் அவருடைய கருத்துகளை இன்றுவரை பின்பற்றுபவர்களிடமும் ஒரு கேள்வியை எழுப்ப வேண்டியிருக்கின்றது.
தீபாவளியைக் கொண்டாடும் தமிழன் உண்மையான தமிழனா இல்லையா என்பதைத் தீர்மானிப்பதற்குப் பெரியார் யார்?
தமிழர்களின் சமய நம்பிக்கைகளையும் பண்டிகைகளையும் தீர்மானிக்கும் அதிகாரத்தை அவருக்கு வழங்கியது யார்?
பல தலைமுறைகளாகத் தங்களுடைய முன்னோர்கள் வழிபட்ட தெய்வங்களை வழிபடுவதற்கும், குடும்பங்களில் கொண்டாடப்பட்ட பண்டிகைகளைத் தொடர்ந்து கொண்டாடுவதற்கும் தமிழர்கள் ஓர் அரசியல் தலைவரின் கருத்துகளை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.
பெரியாரின் மத மறுப்புக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாத இந்துத் தமிழர்களும் தமிழர்கள்தான்.
அவர்களுடைய மத நம்பிக்கைகளை மூடநம்பிக்கை என்று பரிகாசிப்பதாலோ, அவர்கள் கொண்டாடும் பண்டிகைகளுக்குப் புராணக் கதைகள்தான் அடிப்படை என்று கூறுவதாலோ அவர்களுடைய சமய வரலாற்றை அழித்துவிட முடியாது.
திராவிட இயக்கம் தோன்றுவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் சிவனையும் திருமாலையும் முருகனையும் சக்தியையும் வழிபட்டு வந்திருக்கின்றார்கள்.
சைவ நாயன்மார்களும் வைணவ ஆழ்வார்களும் தமிழில் இறைவனைப் பாடியிருக்கின்றார்கள்.
தேவாரமும் திருவாசகமும் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தமும் தமிழ் மொழியின் சமய இலக்கியங்களாக இன்றும் விளங்குகின்றன.
இந்து சமயத்திற்கும் தமிழர்களுக்கும் உள்ள இந்த நீண்டகாலத் தொடர்பை மறைத்துவிட்டு, தமிழர்களின் சமய வரலாற்றைத் திராவிட இயக்கம் தோன்றிய காலத்திலிருந்து எழுத முடியாது.
இதே திராவிடச் சிந்தனையாளர்கள் பொங்கலைத் தமிழர்களின் பொதுவான பண்டிகையாக முன்னிறுத்துகின்றார்கள். ஆனால் தீபாவளி என்று வந்துவிட்டால் அது தமிழர்களுக்கான பண்டிகை அல்ல என்று கூறுகின்றார்கள்.
பொங்கலும் தீபாவளியும் இந்துத் தமிழர்களின் மத நம்பிக்கைகளோடு இணைந்த பண்டிகைகளாக இருக்கும்போது, ஒன்றை மட்டும் தமிழர்களின் பண்டிகையாக ஏற்றுக்கொண்டு மற்றொன்றை ஒதுக்குவதில் என்ன நியாயம் இருக்கின்றது?
தைப்பொங்கலன்று சூரிய பகவானுக்குப் பொங்கல் படைத்து வழிபடுவதும், மாட்டுப் பொங்கலன்று உழவுக்குத் துணையாக இருக்கும் கால்நடைகளைச் சிறப்பிப்பதும் இந்துத் தமிழர்களிடையே காலங்காலமாகப் பின்பற்றப்படும் மரபுகளாகும். பொங்கலுக்கு உழவோடும் அறுவடையோடும் தொடர்பு இருப்பதை எவரும் மறுக்கவில்லை. அதேவேளையில் அதனோடு இணைந்த இந்து சமய வழிபாட்டு மரபுகளையும் மறைத்துவிட முடியாது.
பிற மதங்களைச் சேர்ந்த தமிழர்கள் பொங்கலைக் கொண்டாடுவதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் அதற்காகப் பொங்கலின் இந்து சமயப் பின்னணியை நீக்கிவிட்டு, அதனை மதத்துடன் தொடர்பில்லாத பண்டிகையாக மட்டும் சித்தரிக்க வேண்டிய அவசியமில்லை.
சித்திரைப் புத்தாண்டு, தீபாவளி, தைப்பூசம், சிவராத்திரி, நவராத்திரி, கந்தசஷ்டி போன்ற பண்டிகைகளும் இந்துத் தமிழர்களின் சமய வாழ்வில் இடம்பெற்றுள்ளன. அவற்றைக் கொண்டாடுவதற்குத் தமிழர்கள் யாரிடமும் அனுமதி பெற வேண்டியதில்லை.
தீபாவளியின் புராணப் பின்னணியைப் பொறுத்தவரையில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு மரபுகள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் நரகாசுரனை கிருஷ்ணன் வென்றதாகக் கூறப்படும் புராண மரபுடன் தீபாவளி தொடர்புபடுத்தப்படுகின்றது.
வடஇந்தியாவின் சில பகுதிகளில் இராமர் அயோத்திக்குத் திரும்பிய நிகழ்வோடு தீபாவளி கொண்டாடப்படுகின்றது.
இத்தகைய புராண மரபுகளை ஒருவர் ஏற்றுக்கொள்ளலாம், ஏற்றுக்கொள்ளாமலும் இருக்கலாம்.
ஆனால் அவற்றை ஏற்றுக்கொண்டு பண்டிகையைக் கொண்டாடும் மக்களைத் தமிழர்கள் அல்ல என்று கூறுவதற்கு எந்த நியாயமும் இல்லை.
தமிழ் இந்துக் குடும்பங்களில் தீபாவளி என்பது வெறும் புராணக் கதையோடு மட்டும் நின்றுவிடும் பண்டிகையல்ல. அதிகாலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்து, புத்தாடை அணிந்து, இறைவனை வழிபட்டு, இனிப்புகளையும் பலகாரங்களையும் உறவினர்களோடு பகிர்ந்துகொள்ளும் மகிழ்ச்சியான நாளாகவும் அது இருந்து வருகின்றது.
திருமணமான தம்பதியினர் கொண்டாடும் முதல் தீபாவளியைத் ‘தலைத் தீபாவளி’ என்று சிறப்பித்துக் கொண்டாடும் மரபும் தமிழர்களிடையே இருக்கின்றது.
பெற்றோர்கள், பிள்ளைகள், உறவினர்கள் என்று குடும்பத்தினர் ஒன்றுகூடி மகிழும் இத்தகைய வழக்கங்கள் தமிழ் இந்துக்களின் குடும்ப வாழ்வோடு இணைந்திருக்கின்றன.
இவ்வளவு குடும்ப மரபுகளோடு தொடர்புடைய தீபாவளியைத் தமிழர்களுக்குத் தொடர்பில்லாத பண்டிகை என்று கூறுவது, அந்தப் பண்டிகையைக் கொண்டாடும் தமிழ் இந்துக்களின் வாழ்வியல் மரபுகளையும் புறக்கணிப்பதாகும்.
என்னைப் பொறுத்தவரையில், தமிழர்களின் சமய நம்பிக்கைகளைத் திராவிட அரசியல் சித்தாந்தத்திற்கு ஏற்றவாறு மாற்ற முயல்வதும், அந்தச் சித்தாந்தத்திற்கு ஒத்துவராத பண்டிகைகளைத் தமிழர்களுக்குத் தொடர்பில்லாதவை என்று கூறுவதும் ஏற்றுக்கொள்ள முடியாத அணுகுமுறையாகும் என்பதை திராவிட நீட்சியில் பயணிக்கும் நாம் தமிழர் கட்சியினரும் புரிந்துகொள்ள வேண்டும்.
தமிழ் மொழி எந்த ஓர் அரசியல் இயக்கத்திற்கும் மட்டும் சொந்தமானதல்ல. அதேபோன்று தமிழர்களின் சமய நம்பிக்கைகளையும் பண்பாட்டு மரபுகளையும் தீர்மானிக்கும் அதிகாரமும் எந்த அரசியல் தலைவருக்கும் இல்லை என்பதை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் விளங்கிக்கொள்ள வேண்டும்.

தமிழனாக இருப்பதற்கு ஒருவன் தன்னுடைய மத நம்பிக்கையை மறுக்க வேண்டியதில்லை. தன்னுடைய முன்னோர்கள் வழிபட்ட தெய்வங்களைத் துறக்க வேண்டியதில்லை. ஓர் அரசியல் சித்தாந்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயமும் இல்லை.
இஸ்லாமியத் தமிழனும் கிறிஸ்தவத் தமிழனும் இந்துத் தமிழனும் தத்தமது மத நம்பிக்கைகளோடு தமிழர்களாக வாழ்கின்றார்கள். அவர்களுடைய சமய நம்பிக்கைகளை வைத்துத் தமிழின அடையாளத்தை மறுப்பது நியாயமல்ல.
தீபாவளியைக் கொண்டாட விரும்பாதவர்கள் கொண்டாடாமல் இருக்கலாம். ஆனால் அதைக் கொண்டாடும் இந்துத் தமிழர்களிடம், அது உங்களுக்கான பண்டிகை அல்ல என்று கூறி அவர்களுடைய சமய நம்பிக்கைகளையும் குடும்ப மரபுகளையும் இழிவுபடுத்த வேண்டாம்.
தமிழர்களிடையே மத வேறுபாடுகளும் அரசியல் கருத்து வேறுபாடுகளும் இருக்கலாம். அவற்றைக் கடந்து ஒருவருடைய சமய நம்பிக்கையை மற்றொருவர் மதித்து வாழ்வதுதான் தமிழர்களிடையே ஒற்றுமையை வளர்க்கும் என்பதை பதிவு செய்து,
2026ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் திகதி தீபாவளித் திருநாளைக் கொண்டாடும் உலகெங்கும் வாழும் தமிழ் இந்து உறவுகளுக்கும், தீபாவளியைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது அன்பான தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இந்தத் தீபாவளி அனைவருடைய இல்லங்களிலும் மகிழ்ச்சியையும் மனநிறைவையும் கொண்டுவரட்டும். குடும்பங்களில் அன்பும் ஒற்றுமையும் பெருகட்டும்.
அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்!
சுவாமி சங்கரானந்தா 🙏
நிறுவனர் மற்றும் ஆன்மீக வழிகாட்டி
சைவ சனாதன சேவை மையம் – கனடா

வாசகர் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…