world
திருப்பலியின் போது பாதிரியார் மீது விழுந்த பாரிய சிலுவை – ஈக்வடாரில் அதிர்ச்சியூட்டும் மரணம்!

2026 அக்டோபர் மாதம் 19 ஆம் திகதி | உலகச் செய்திகள்
ஈக்வடார் நாட்டில் கத்தோலிக்க தேவாலயமொன்றில் திருப்பலி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, சுவரில் பொருத்தப்பட்டிருந்த பாரிய மரச் சிலுவை திடீரெனக் கீழே விழுந்ததில் கத்தோலிக்கப் பாதிரியார் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
2026 அக்டோபர் மாதம் 17 ஆம் திகதி சனிக்கிழமை மாலை, ஈக்வடாரின் குவாயாகில் (Guayaquil) நகரிலுள்ள புனித நிரந்தர சகாய அன்னை தேவாலயத்தில் (Our Lady of Perpetual Help Church) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் 53 வயதான பாதிரியார் பற்றிசியோ அல்பிரடோ சான்செஸ் மொலினாரி (Patricio Alfredo Sánchez Molinari) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
திருப்பலியை நடத்திக்கொண்டிருந்த பாதிரியார், பக்தர்களை நோக்கி நின்றிருந்தபோது, அவருக்குப் பின்னால் சுவரில் பொருத்தப்பட்டிருந்த இயேசு கிறிஸ்துவின் உருவம் கொண்ட பாரிய மரச் சிலுவை திடீரெனக் கழன்று அவரது தலையில் விழுந்துள்ளது.
இதனால் பலத்த காயமடைந்த பாதிரியார் கீழே சரிந்து விழுந்தார். அங்கிருந்த பக்தர்கள் அதிர்ச்சியடைந்து அவருக்கு உதவ முன்வந்ததுடன், உடனடியாக அவசர மருத்துவ உதவியையும் கோரியுள்ளனர். எனினும், இந்த விபத்தில் அவர் உயிரிழந்தார்.
குறிப்பாக, இந்தத் திருப்பலி சமூக வலைத்தளத்தில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டுக்கொண்டிருந்ததால், விபத்து நிகழ்ந்த காட்சிகளும் பதிவாகியுள்ளன. பின்னர் அந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளன.
பாதிரியாரின் மரணத்தை குவாயாகில் கத்தோலிக்கப் பேராயம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளதுடன், அவரது குடும்பத்தினருக்கும் சமயச் சமூகத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.
உயிரிழந்த பாதிரியார், கத்தோலிக்கத் திருச்சபையின் ரெடெம்ப்டரிஸ்ட் (Redemptorist) துறவறச் சபையைச் சேர்ந்தவர் ஆவார்.
இந்த விபத்தையடுத்து அக்டோபர் மாதம் 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு அவரை நினைவுகூரும் சிறப்புத் திருப்பலியில் பங்கேற்குமாறு பேராயமும் ரெடெம்ப்டரிஸ்ட் சபையும் அழைப்பு விடுத்திருந்தன.
தேவாலயச் சுவரில் பொருத்தப்பட்டிருந்த பாரிய சிலுவை எவ்வாறு கழன்று விழுந்தது என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. விபத்துக்கான காரணம் தொடர்பாக அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை.

வாசகர் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…