செய்திகள் · இலங்கை
சவூதி அரேபிய சிறையில் சிவராசா அனோஜன் மீது தாக்குதல் எனத் தகவல் – பாதுகாப்பை உடனடியாக உறுதிப்படுத்த கோரிக்கை

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கைத் தமிழரான சிவராசா அனோஜன் சிறைச்சாலையில் ஏனைய கைதிகளால் தாக்கப்பட்டுள்ளதாகவும், அவரது தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கவலைக்குரிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், இந்தத் தாக்குதல் குறித்த தகவலை சவூதி அரேபிய சிறைச்சாலை அதிகாரிகளோ, இலங்கை வெளிவிவகார அமைச்சோ அல்லது சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகமோ இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியதாகத் தகவல் இல்லை.
இதனால் அனோஜனின் தற்போதைய உடல்நிலை மற்றும் சிறைச்சாலைக்குள் அவரது பாதுகாப்பு தொடர்பாக அவரது குடும்பத்தினர் மற்றும் அவருக்காக செயற்பட்டு வருபவர்கள் மத்தியில் கடும் கவலை ஏற்பட்டுள்ளது.
கல்முனை நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜன், சவூதி அரேபியாவில் தொழில்புரிந்து வந்த நிலையில், சமூக ஊடகத்தில் வெளியிட்ட கருத்தொன்று இஸ்லாம் மதத்தையும் முகமது நபியையும் அவமதிக்கும் வகையில் அமைந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு 2026ஆம் ஆண்டு ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார்.
சவூதி அரேபியாவின் அல்-அஹ்சா குற்றவியல் நீதிமன்றம் ஆரம்பத்தில் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் மூன்று மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதித்தது.
இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மேல்முறையீட்டு நடவடிக்கைகளின் போது, சவூதி அரசுத் தரப்பும் கடுமையான தண்டனை கோரி மேல்முறையீடு செய்தது. அதன் பின்னர் 2026ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் திகதி மேல்முறையீட்டு நீதிமன்றத்தினால் அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதை இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பின்னர் பாராளுமன்றத்தில் உறுதிப்படுத்தியிருந்தார்.
இதற்கிடையில் அனோஜன் அண்மையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் தடுத்து வைக்கப்படும் சிறைப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர். சில நாட்கள் அவருடன் தொடர்புகொள்ள முடியாமல் இருந்த பின்னர், தனது சகோதரருடன் தொடர்புகொண்ட அனோஜன் இந்த சிறை மாற்றம் குறித்து தெரிவித்ததாக முன்னதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்தப் பின்னணியிலேயே தற்போது அவர் சிறைச்சாலையில் தாக்கப்பட்டுள்ளதாகவும் தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
இந்தத் தகவல் உண்மையானதாக இருந்தால், அது மிகவும் பாரதூரமான விடயமாகும்.
ஒருவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு அல்லது நீதிமன்றம் வழங்கியுள்ள தண்டனை எதுவாக இருந்தாலும், அரச காவலில் இருக்கும் ஒருவரின் உயிரையும் உடல் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உள்ளது.
எனவே அனோஜன் தாக்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவலின் உண்மைத் தன்மையை சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் உடனடியாக உறுதிப்படுத்த வேண்டும்.
அவர் காயமடைந்திருந்தால், அவருக்கு தாமதமின்றி உரிய மருத்துவ சிகிச்சை வழங்கப்படுவதையும் உறுதிசெய்ய வேண்டும். தாக்குதல் இடம்பெற்றிருந்தால், அது எவ்வாறு நடைபெற்றது, அதில் யார் தொடர்புபட்டுள்ளனர், சிறைச்சாலைக்குள் அவரது பாதுகாப்புக்கு மேலும் அச்சுறுத்தல் உள்ளதா என்பவை தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
அதேவேளை, அனோஜனின் மரண தண்டனையை எதிர்த்து சட்ட மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இலங்கை அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நான்கு பேர் கொண்ட சட்டக்குழு 2026ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 6ஆம் திகதி சவூதி அரேபியா செல்லவுள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அசார்ட் நவாவி, ஜனாதிபதி சட்டத்தரணிகளான பைசர் முஸ்தபா மற்றும் உபுல் குமாரப்பெரும, சட்டத்தரணி ஹபீல் பாரிஸ் ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெறுகின்றனர்.
சவூதி அரேபியாவில் நியமிக்கப்பட்டுள்ள சட்டத்தரணிகளுடன் அவர்கள் ஆலோசனை நடத்தி, சவூதி உச்ச நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்படவுள்ள மேல்முறையீட்டுக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளனர்.
இதற்குப் புறம்பாக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சார்பில் சவூதி அரேபிய மன்னரிடம் கருணை மனு முன்வைப்பதற்கான இராஜதந்திர முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த சட்ட மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகள் நடைபெற்று வரும் மிகவும் முக்கியமான தருணத்தில், அனோஜனின் சிறைச்சாலை பாதுகாப்பு குறித்த புதிய தகவல்கள் மேலும் கவலையை ஏற்படுத்துகின்றன.
எனவே இலங்கை அரசாங்கம், வெளிவிவகார அமைச்சு மற்றும் ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் இந்த விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு, சிவராசா அனோஜனின் தற்போதைய உடல்நிலை மற்றும் பாதுகாப்பு குறித்து அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்துவதுடன், அவரது உயிருக்கும் உடல் பாதுகாப்பிற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
மேலும் ஒரு பாரதூரமான சம்பவம் நடைபெறுவதற்கு முன்னர் அவரது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும்.

வாசகர் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…