செய்திகள் · இலங்கை
22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் விசேட பெரும்பான்மையுடன் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்!

இலங்கையின் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் செப்டம்பர் 25ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பில் ஆதரவாக 158 நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிராக 63 உறுப்பினர்களும் வாக்களித்தனர். குழுநிலைத் திருத்தங்களுக்குப் பின்னர் நடைபெற்ற மூன்றாம் வாசிப்பு வாக்கெடுப்பிலும் 158 பேர் ஆதரவாகவும் 63 பேர் எதிராகவும் வாக்களித்தனர்.
இந்த அரசியலமைப்புத் திருத்தத்தின் முக்கிய அம்சமாக உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 65 இலிருந்து 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 63 இலிருந்து 65 ஆகவும் உயர்த்தப்படுகிறது.
இலங்கையின் நீதிமன்றங்களில் சுமார் 11 இலட்சம் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் குறிப்பிடும் அரசாங்கம், அனுபவமுள்ள நீதிபதிகளின் சேவையை மேலும் இரண்டு ஆண்டுகளுக்குப் பெற்றுக்கொள்வதும், நீதித்துறையின் செயல்திறனை மேம்படுத்துவதும் விரிவான நீதித்துறைச் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக இருப்பதாக விளக்குகிறது.
ஆனால் எதிர்க்கட்சிகளும் சட்டத்துறை சார்ந்த சில தரப்பினரும் நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் நடைமுறை நீதித்துறையின் சுயாதீனத்தன்மை தொடர்பான கேள்விகளை எழுப்புவதாகக் கூறி எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துடன், கீழமை நீதிமன்றங்கள் தொடர்பான மாற்றங்களை உள்ளடக்கிய நீதித்துறைச் சட்டத் திருத்தமும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வாசகர் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…