spirituality
கந்த சஷ்டிப் பெருவிழா ஆரம்பம்! முருகப்பெருமானின் திருவருளைப் பெறுவோம்!

சுவாமி சங்கரானந்தா
2026ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் திகதி
அன்பு உறவுகளே!
தமிழ்க் கடவுளாகவும், ஞானத்தின் வடிவமாகவும், சிவபெருமானின் அருள்மைந்தனாகவும் போற்றப்படும் முருகப்பெருமானுக்குரிய கந்த சஷ்டிப் பெருவிழா கனடாவில் இன்று ஆரம்பமாகின்றது.
ஐப்பசி மாத வளர்பிறையில் ஆறு நாட்கள் அனுஷ்டிக்கப்படும் கந்த சஷ்டி விரதம், சைவ சமயத்தின் சிறப்புமிக்க விரதங்களில் ஒன்றாகும். முருகப்பெருமான் சூரபத்மனை வெற்றிகொண்ட திருநாளை நினைவுகூரும் இப்பெருவிழா, தீமையை நன்மை வெல்வதையும், அறியாமையை ஞானம் வெல்வதையும் உணர்த்துகின்றது.
சைவ சித்தாந்த அடிப்படையில் நோக்கும்போது, முருகப்பெருமானின் வேல் ஞானத்தின் அடையாளமாகவும், சூரபத்மன் ஆணவத்தின் அடையாளமாகவும் விளங்குகின்றன. மனிதனின் உள்ளத்தில் குடிகொண்டிருக்கும் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களிலிருந்து விடுபட்டு இறையருளைப் பெறுவதற்கான ஆன்மீகப் பயணமாகவும் இந்த விரதத்தை நாம் கருதலாம்.
இந்த ஆறு நாட்களிலும் முருகப்பெருமானை நினைந்து விரதமிருந்து, கந்த சஷ்டிக் கவசம், திருப்புகழ், கந்தர் அனுபூதி போன்ற அருட்பாடல்களைப் பாராயணம் செய்து வழிபடுவது சைவ அடியார்களின் மரபாகும்.
இந்தப் புனிதமான கந்த சஷ்டிப் பெருவிழாவை முன்னிட்டு, முருகப்பெருமானின் திருவருள், பெருமை, ஞானம், கருணை ஆகியவற்றைப் போற்றி, அடியார்களின் உள்ளங்களில் முருகபக்தியை வளர்க்கும் நோக்கத்துடன் அடியேன் சுவாமி சங்கரானந்தா அருளிய புதிய படைப்பான ‘திருமுருகத் திருவந்தாதி’யின் நூற்றியொரு பாடல்களும், ஒவ்வொன்றாகத் தனித்தனி விளக்கவுரையுடன் முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படவுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.
முருகப்பெருமானின் திருவருளால் அனைவரது வாழ்விலும் அமைதியும், ஆரோக்கியமும், ஆனந்தமும் நிலைத்திருக்கப் பிரார்த்திக்கின்றேன்.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
சுவாமி சங்கரானந்தா 🙏

வாசகர் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…