செய்திகள் · இந்தியா · தமிழ்நாடு
மதுராந்தகம் 86.26%, தாராபுரம் 80.30% – இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவு
தமிழ்நாட்டின் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நேற்று, அக்டோபர் மாதம் 6ஆம் திகதி நிறைவடைந்த நிலையில், மதுராந்தகத்தில் 86.26 சதவீதமும் தாராபுரத்தில் 80.30 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.
இரு தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பமாகி மாலை 6 மணி வரை நடைபெற்றது. இறுதி நேரத்தில் வாக்குச்சாவடிகளுக்கு வந்த வாக்காளர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு வாக்களிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது.
மதுராந்தகம் தொகுதியில் மொத்தம் 2,13,788 வாக்காளர்கள் உள்ள நிலையில், 1,84,423 வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் 91,131 ஆண் வாக்காளர்களும் 93,258 பெண் வாக்காளர்களும் 34 மூன்றாம் பாலின வாக்காளர்களும் வாக்களித்துள்ளனர். இதன்படி மதுராந்தகத்தின் வாக்குப்பதிவு 86.26 சதவீதமாக பதிவாகியுள்ளது.
மதுராந்தகத்தில் தவெக சார்பில் மரகதம் குமரவேல், திமுக சார்பில் இ. பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுகந்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் கோ. ஜானகிராமன் உள்ளிட்ட மொத்தம் 28 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
வாக்குப்பதிவின் ஆரம்ப நேரங்களில் மதுராந்தகத்தில் வாக்காளர் வருகை சற்று மந்தமாக இருந்தபோதிலும் பிற்பகலில் வாக்குப்பதிவு வேகமடைந்தது. சில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறுகளால் தாமதம் ஏற்பட்டது. மாற்று இயந்திரங்கள் பொருத்தப்பட்ட பின்னர் வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்றது.
தாராபுரம் தொகுதியில் 2,23,306 வாக்காளர்கள் உள்ள நிலையில், இறுதி நிலவரப்படி 80.30 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தவெக சார்பில் சத்யபாமா, திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லட்சுமணன், நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா உள்ளிட்ட மொத்தம் 22 வேட்பாளர்கள் இங்கு போட்டியிடுகின்றனர்.
தாராபுரத்தின் சில வாக்குச்சாவடிகளில் கட்சிகளுக்கிடையிலான ஆட்சேபனைகள் காரணமாக வாக்குப்பதிவில் தற்காலிக இடையூறுகளும் ஏற்பட்டன. கொழிஞ்சிவாடி வாக்குச்சாவடியில் வயதான வாக்காளர் ஒருவருக்கு தேர்தல் அலுவலர் உதவிய விதம் தொடர்பாக எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து குறிப்பிட்ட அலுவலர் வேறு வாக்குச்சாவடிக்கு மாற்றப்பட்டார். அதன் பின்னர் வாக்குப்பதிவு தொடர்ந்தது.
இந்த இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளிலும் வாக்குப்பதிவு 80 சதவீதத்தைத் தாண்டியுள்ள போதிலும், கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலுடன் ஒப்பிடுகையில் வாக்குப்பதிவு குறைந்துள்ளது.
வாக்குப்பதிவு முடிவடைந்ததைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உரிய பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. வாக்குகள் 2026ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 9ஆம் திகதி காலை 8 மணி முதல் எண்ணப்படவுள்ளதுடன், அன்றைய தினமே இரண்டு தொகுதிகளின் முடிவுகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் புதிய அரசு அமைந்த சில மாதங்களிலேயே நடைபெறும் இந்த இரண்டு இடைத்தேர்தல்களும் ஆளும் தமிழக வெற்றிக் கழகம், திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான அரசியல் கட்சிகளின் தற்போதைய மக்கள் ஆதரவை மதிப்பிடும் முக்கிய அரசியல் போட்டியாகக் கவனிக்கப்படுகின்றன.


வாசகர் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…