canada
‘அவர்களை என்றும் மறக்கமாட்டோம்’ – அல்பேர்ட்டாவில் உயிரிழந்த நான்கு கனடிய இராணுவ வீரர்களுக்கு நாடெங்கும் அஞ்சலி!

2026 அக்டோபர் மாதம் 18 ஆம் திகதி | கனடா
கனடாவின் அல்பேர்ட்டா மாகாணத்தில் உள்ள வெயின்ரைட் (Wainwright) இராணுவப் பயிற்சி முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த நான்கு கனடிய இராணுவ வீரர்களுக்கும் நாடு முழுவதிலும் இருந்து அஞ்சலிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினர், சக இராணுவத்தினர், அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் தமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துள்ளனர்.
2026 அக்டோபர் மாதம் 17 ஆம் திகதி இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் நான்கு இராணுவ வீரர்கள் உயிரிழந்ததுடன், மேலும் 39 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் குறைந்தது 19 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக அல்பேர்ட்டா மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த இராணுவ வீரர்களின் பெயர்களைக் கனடியப் பாதுகாப்புத் திணைக்களம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
அவர்கள், சார்ஜன்ட் மோர்கன் வோங் (Sergeant Morgan Wong), இராணுவ வீரர் ஷோன் ஃபாரெல் (Private Shaun Farrell), இராணுவ வீரர் ஏடன் கோல்டிங் (Private Aidan Goulding), இராணுவ வீரர் ஹேடன் லிக்கெமார்க் (Private Hayden Lykkemark) ஆகியோராவர்.
இவர்களில் 23 வயதான ஏடன் கோல்டிங்கின் தாயார் சோனியா மொங்க் (Sonia Monk), தனது மகனின் மரணம் தொடர்பாகக் கனடிய ஊடகங்களிடம் உருக்கமாகப் பேசியுள்ளார்.
தனது மகன் எங்கு சென்றாலும் குடும்பத்தினருக்குத் தெரிவிப்பதுடன், தங்கள் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கின்றார் என்பதையும் வெளிப்படுத்துவார் என அவர் தெரிவித்துள்ளார்.
தீ விபத்து குறித்த செய்தி கிடைத்ததும் தனது மகனைத் தொடர்புகொள்ளப் பலமுறை முயன்றதாகவும், ஆனால் அவரிடமிருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
அன்றிரவு சுமார் 11 மணியளவில் இராணுவ அதிகாரிகள் வீட்டுக்கு வந்து மகனின் மரணச் செய்தியை அறிவித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
வாகனப் பழுதுபார்க்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த ஏடன் கோல்டிங், தனது நாட்டுக்குச் சேவையாற்ற வேண்டும் என்ற விருப்பத்துடன் 2026 பெப்ரவரி மாதத்திலேயே இராணுவத்தில் இணைந்திருந்தார்.
தனது மகன் எப்போதும் மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கக்கூடியவர் என்றும், இராணுவப் பணியை மிகவும் நேசித்தவர் என்றும் அவரது தாயார் நினைவுகூர்ந்துள்ளார்.
இதேவேளை உயிரிழந்த சார்ஜன்ட் மோர்கன் வோங், தனது கடமையுணர்வாலும் சக மனிதர்களுக்கு உதவும் பண்பாலும் மதிக்கப்பட்டவர் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
எட்மன்டனைச் சேர்ந்த 26 வயதான மோர்கன் வோங், ஏற்கனவே லாட்வியாவில் கனடிய இராணுவப் பணியில் ஈடுபட்டிருந்ததுடன், மீண்டும் ஐரோப்பாவுக்குச் செல்லத் தயாராகியிருந்தார்.
அவரது மறைவு தொடர்பாக இரங்கல் தெரிவித்த லோயல் எட்மன்டன் படைப்பிரிவு சங்கம், உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கும் காயமடைந்தவர்களுக்கும் தமது ஆதரவை வெளிப்படுத்தியதுடன், ‘அவர்களை நாம் என்றும் நினைவில் கொள்வோம்’ எனத் தெரிவித்துள்ளது.
உயிரிழந்த ஷோன் ஃபாரெல் சஸ்காட்சுவான் மாகாணத்தைச் சேர்ந்தவர். அவரது மரணம் தொடர்பாக இரங்கல் தெரிவித்த அம்மாகாண முதலமைச்சர் ஸ்கொட் மோ, நாட்டுக்குச் சேவையாற்ற முன்வந்த ஒரு நம்பிக்கைக்குரிய இளைஞரை இழந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தைச் சேர்ந்த ஹேடன் லிக்கெமார்க் மற்றும் ஏடன் கோல்டிங் ஆகியோரின் மரணம் தொடர்பாகவும் அம்மாகாண முதலமைச்சர் டேவிட் எபி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
கனடியப் பிரதமர் மார்க் கார்னி, அமைதிக்காலத்தில் கனடிய மண்ணில் நாட்டின் ஆயுதப்படையினர் சந்தித்த மிக மோசமான துயரச் சம்பவங்களில் இதுவும் ஒன்று எனத் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்குத் தேவையான ஆதரவை கனடிய அரசாங்கம் தொடர்ந்து வழங்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
மூன்றாம் சார்ல்ஸ் மன்னரும் ராணி கமிலாவும் இந்த அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தங்களது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளனர்.
கனடியப் பாதுகாப்பு அமைச்சர் டேவிட் மெக்கின்டி, கனடிய இராணுவத் தலைமை அதிகாரிகள், எதிர்க்கட்சித் தலைவர் பியர் பொலியேவ் உள்ளிட்ட பலரும் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
கனடா முழுவதிலும் உள்ள கூட்டாட்சி அரசாங்கக் கட்டடங்களில் தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன.
கனடிய முன்னாள் படைவீரர்களுக்கான றோயல் கனடியன் லீஜியன் அமைப்பும் உயிரிழந்த வீரர்களை நினைவுகூர்ந்து, நாடெங்கும் உள்ள தனது கிளைகளில் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிடுவதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் தீ விபத்துக்கான காரணம் தொடர்பாக இராணுவ அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடுமையான காற்றின் காரணமாகப் புல்வெளியில் பரவிய தீ, இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் இருந்த பகுதியை மிக வேகமாகச் சூழ்ந்ததாக ஆரம்பகட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீ உருவானதற்கான துல்லியமான காரணம் இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.
உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு ஆதரவாகக் கனடிய மக்கள் ஒன்றிணைந்து நிற்கும் நிலையில், இந்த அனர்த்தம் நாடு முழுவதிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாசகர் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…