canada
டொராண்டோ கல்விச் சபைக்கு அனு ஸ்ரீஸ்கந்தராஜா, ரவிச்சா ரவிந்திரன் தெரிவு!

டொராண்டோ கல்விச் சபைக்கு அனு ஸ்ரீஸ்கந்தராஜா, ரவிச்சா ரவிந்திரன் தெரிவு!
கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் 2026ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மற்றும் கல்விச் சபைத் தேர்தல்களில், டொராண்டோ மாவட்டக் கல்விச் சபைக்கு (Toronto District School Board – TDSB) தமிழ்ப் பெண்களான அனு ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் ரவிச்சா ரவிந்திரன் ஆகிய இருவரும் தெரிவாகியுள்ளனர்.
ஏற்கெனவே உள்ளூராட்சித் தேர்தலில் மூன்று தமிழர்கள் வெற்றி பெற்றுள்ள நிலையில், தற்போது கல்விச் சபைத் தேர்தலிலும் இரண்டு தமிழ்ப் பெண்கள் வெற்றி பெற்றிருப்பது கனடாவில் தமிழர்களின் அரசியல் மற்றும் சமூகப் பங்களிப்பில் மற்றுமொரு முக்கிய நிகழ்வாக அமைந்துள்ளது.
டொராண்டோ மாவட்டக் கல்விச் சபையின் 12ஆவது வட்டாரத்தில் போட்டியிட்ட அனு ஸ்ரீஸ்கந்தராஜா 13,049 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இது பதிவான செல்லுபடியான வாக்குகளில் 27.5 வீதமாகும். இவருக்கு அடுத்தபடியாகப் போட்டியிட்ட சஃபியா அன்சாரி 7,651 வாக்குகளைப் பெற்றுள்ளார். இதன்படி அனு ஸ்ரீஸ்கந்தராஜா 5,398 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
2018ஆம் ஆண்டு முதன்முதலாக டொராண்டோ மாவட்டக் கல்விச் சபை உறுப்பினராகத் தெரிவான அனு ஸ்ரீஸ்கந்தராஜா, 2022ஆம் ஆண்டுத் தேர்தலிலும் வெற்றி பெற்றிருந்தார். தற்போது மூன்றாவது தடவையாக மீண்டும் தெரிவாகியுள்ளார்.
யோர்க் பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றிவரும் இவர், சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் உரிமைகள், கல்வி, சமூக நீதி உள்ளிட்ட துறைகளில் ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகின்றார். கல்விச் சபையின் கொள்கை மற்றும் நிர்வாகக் குழுவின் துணைத் தலைவராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
இவரது கணவரான பார்த்தி கந்தவேல், டொராண்டோ மாநகரசபையின் 20ஆவது வட்டாரமான ஸ்கார்பரோ தென்மேற்குப் பகுதியில் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
2018ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விச் சபைத் தேர்தலில் பார்த்தி கந்தவேலும் அனு ஸ்ரீஸ்கந்தராஜாவும் ஒரே நேரத்தில் டொராண்டோ மாவட்டக் கல்விச் சபை உறுப்பினர்களாகத் தெரிவாகியிருந்தனர். அப்போது டொராண்டோ கல்விச் சபைக்கு ஒரே தேர்தலில் தெரிவான முதலாவது தம்பதியினர் என்ற வரலாற்றுச் சிறப்பையும் பெற்றிருந்தனர்.
தற்போது கணவர் டொராண்டோ மாநகரசபை உறுப்பினராகவும், மனைவி டொராண்டோ மாவட்டக் கல்விச் சபை உறுப்பினராகவும் மீண்டும் தெரிவாகியுள்ளனர்.
இதேவேளை, டொராண்டோ மாவட்டக் கல்விச் சபையின் 11ஆவது வட்டாரத்தில் போட்டியிட்ட மற்றுமொரு தமிழ்ப் பெண்ணான ரவிச்சா ரவிந்திரன் 11,770 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இது பதிவான வாக்குகளில் 27.4 வீதமாகும்.
இவருக்கு அடுத்தபடியாகப் போட்டியிட்ட கர்டிஸ் ஜாக் 10,101 வாக்குகளைப் பெற்றுள்ளார். இதன்படி ரவிச்சா ரவிந்திரன் 1,669 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
நிதிச் சேவைகள், இளைஞர் மேம்பாடு மற்றும் சமூகச் செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் ரவிச்சா ரவிந்திரன், மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் கல்வி வழிகாட்டல், நிதி அறிவூட்டல், தொழில் மற்றும் வாழ்க்கைத் திறன் மேம்பாடு உள்ளிட்ட செயற்பாடுகளில் பங்களித்து வருகின்றார்.
2025ஆம் ஆண்டு கனடாவின் தமிழ் சமூக அமைப்பான Tamil Canadian Centre for Civic Action வழங்கிய ‘30 வயதுக்குட்பட்ட 30 தமிழர்கள்’ என்ற அங்கீகாரத்தையும் இவர் பெற்றிருந்தார்.
மாணவர்களுக்கு நடைமுறை வாழ்க்கைத் திறன்களை வளர்த்தல், மனநல ஆதரவை மேம்படுத்தல், பெற்றோர்களுக்கும் கல்விச் சபைக்கும் இடையிலான தொடர்புகளை வலுப்படுத்தல், கல்வி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தல் ஆகியவற்றைத் தனது தேர்தல் முன்னுரிமைகளாக முன்வைத்திருந்தார்.
2026ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தத் தேர்தலில் டொராண்டோ மாவட்டக் கல்விச் சபையின் உறுப்பினர் வட்டாரங்கள் 22 இலிருந்து 12 ஆகக் குறைக்கப்பட்டிருந்த நிலையில், அனு ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் ரவிச்சா ரவிந்திரன் ஆகிய இருவரும் தத்தமது வட்டாரங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.
கனடாவின் உள்ளூராட்சி மற்றும் கல்வி நிர்வாக அமைப்புகளில் தமிழர்களின் பிரதிநிதித்துவம் தொடர்ந்து நிலைபெற்று வருவதையும், குறிப்பாகத் தமிழ்ப் பெண்கள் பொதுநிர்வாகத்திலும் சமூகத் தலைமைத்துவத்திலும் பங்கேற்று வருவதையும் இந்தத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன.
2026ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 27ஆம் திகதி நிலவரப்படி, டொராண்டோ மாநகராட்சி வெளியிட்டுள்ள தேர்தல் முடிவுகள் உத்தியோகபூர்வமற்றவையாகும். தேர்தல் அதிகாரிகளின் இறுதி உறுதிப்படுத்தலுக்குப் பின்னரே அவை அதிகாரப்பூர்வ முடிவுகளாக அறிவிக்கப்படும்.

வாசகர் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…