தமிழ் இணையச் சஞ்சிகைவரலாறு · அரசியல் · உலகப் பார்வை

ஈழ மண்ணின் சுவடுகள்

வரலாற்றைப் பதிவு செய்வோம் · ஆதாரங்களைப் பாதுகாப்போம்

விளம்பரம்

செய்திகள் · கனடா · கருத்து

ஈழத் தமிழர் என்ற எமது அடையாளத்தை மறுக்க நீங்கள் யார்?

கனேடிய நடிகை மைத்திரேயி ராமகிருஷ்ணன் அவர்கள், தனது பூர்வீகம் குறித்தும் ஈழத் தமிழ்ப் பெண் என்ற தனது அடையாளம் குறித்தும் நேர்காணல் ஒன்றில் பேசும்போது,

“எனக்குத் தமிழ் சரளமாகப் பேசத் தெரியாது” என்றும்,

“ஆனால், ஓர் ஈழத் தமிழ்ப் பெண்ணாக இருப்பதை நான் நேசிக்கின்றேன்” எனவும்,

“எனது குடும்பத்தையும், எனது பண்பாட்டு வரலாற்றையும் நான் நேசிக்கின்றேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

விளம்பரம்

அவரது இந்தக் கருத்துக்கு எதிராகச் சமூக வலைத்தளங்களில் சிலர் வெளிப்படுத்தி வரும் வெறுப்புணர்வுகளைப் பார்க்கும்போது, ஈழத் தமிழர் என்ற எமது அடையாளம் தொடர்பாகச் சில விடயங்களை இங்கு பதிவு செய்ய விரும்புகின்றேன்.

மைத்திரேயி ராமகிருஷ்ணன் படம்

அன்பு உறவுகளே!

மைத்திரேயி ராமகிருஷ்ணன் அவர்கள் கனடாவில் பிறந்து வளர்ந்த ஒரு பெண். தான் பிறந்து வளர்ந்த நாட்டின் அடையாளத்தோடு, தனது பெற்றோரின் பூர்வீக மண்ணுக்குரிய ஈழத் தமிழர் என்ற அடையாளத்தையும் அவர் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.

இதில் என்ன தவறு இருக்கின்றது?

ஒருவர் தனது தாய்மொழியைச் சரளமாகப் பேசத் தெரியாத காரணத்தால், தனது பூர்வீக இன அடையாளத்தை இழந்துவிடுகின்றாரா?

அல்லது, தான் பிறந்து வளர்ந்த நாட்டின் குடியுரிமையைப் பெற்றுக்கொண்டால், தனது பெற்றோரின் பூர்வீக வரலாற்றையும் பண்பாட்டையும் மறந்துவிட வேண்டுமா?

இல்லையே!

இன்று உலகின் பல்வேறு நாடுகளிலும் புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களின் பிள்ளைகள், தாம் பிறந்து வளர்ந்த நாடுகளின் மொழிகளையும் பண்பாடுகளையும் உள்வாங்கி வளர்கின்றார்கள்.

அவர்களில் பலருக்குத் தமிழ்மொழியைச் சரளமாகப் பேசத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், அதற்காக அவர்கள் தமது பூர்வீக வரலாற்றையும் இன அடையாளத்தையும் நேசிப்பதற்கான உரிமையை இழந்துவிடுவதில்லை.

அந்த வகையில், கனேடிய நடிகை மைத்திரேயி ராமகிருஷ்ணன் அவர்கள் தன்னை ஓர் ஈழத் தமிழ்ப் பெண்ணாக வெளிப்படையாக அடையாளப்படுத்திக் கொண்டிருப்பதற்கு, புலம்பெயர்ந்த தேசத்தில் வாழும் ஓர் ஈழத் தமிழனாக நானும் எனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இன்று கனடா, பிரித்தானியா, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, அவுஸ்திரேலியா என உலகின் பல்வேறு நாடுகளிலும் ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்றார்கள்.

அவர்களில் பலர் தாம் வாழும் நாடுகளின் குடியுரிமையைப் பெற்றுக்கொண்டுள்ளார்கள். நானும் கனடாவில் வாழும் ஓர் ஈழத் தமிழன்.

நாம் வாழும் நாடுகளின் குடியுரிமையைப் பெற்றுக்கொண்டாலும், எமது பூர்வீக மண்ணின் வரலாறும், எமது மொழியும், எமது பண்பாடும், எமது இன அடையாளமும் எம்மைவிட்டு மறைந்துவிடுவதில்லை.

எனவே, உலகின் பல்வேறு நாடுகளிலும் புலம்பெயர்ந்து வாழும் எமது தமிழ் உறவுகளே!

நாம் எந்த நாட்டில் வாழ்ந்தாலும், எந்த நாட்டின் குடியுரிமையைப் பெற்றுக்கொண்டாலும், எமது பூர்வீக அடையாளமான ஈழத் தமிழர் என்ற அடையாளத்தை மறந்துவிடாமல் பாதுகாப்போம்.

எமது பிள்ளைகளுக்கும் அவர்களது பூர்வீக மண்ணின் வரலாற்றையும் பண்பாட்டையும் கற்றுக்கொடுப்போம். அவர்கள் தாம் பிறந்து வளர்ந்த நாடுகளின் குடிமக்களாக வாழும் அதேவேளையில், தமது பூர்வீக அடையாளத்தை அறிந்தவர்களாகவும் வளர்வதற்கு வழியமைப்போம்.

இங்கு ஈழம் என்ற பெயரை எதிர்த்து இனவெறுப்பைக் கக்கும் சில சிங்களத் தேசியவாதிகளுக்கு நான் ஒன்றைக் கூற விரும்புகின்றேன்.

ஈழம் என்ற சொல் இன்று புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு பெயரல்ல. அது இலங்கைத் தீவைக் குறிக்கத் தமிழர்கள் வரலாற்று ரீதியாகப் பயன்படுத்தி வந்த பெயர்களில் ஒன்றாகும்.

அந்த வகையில், ஈழத் தமிழர் என்பது இலங்கைத் தீவைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழர்களின் இன, மொழி மற்றும் பண்பாட்டு அடையாளமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இதனை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இன்னுமொரு விடயத்தையும் இங்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

இலங்கையில் செயற்பட்டுவரும் அரசியல் கட்சிகளின் பெயர்களிலும்கூட ஈழம் என்ற சொல் இடம்பெற்றுள்ளதை நீங்கள் அறியவில்லையா?

தமிழீழ விடுதலை இயக்கம் (TELO),

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF),

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP)

எனப் பல்வேறு அரசியல் இயக்கங்களினதும் கட்சிகளினதும் பெயர்களில் ஈழம் என்ற சொல் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு இலங்கையின் அரசியல் வரலாற்றிலும் ஈழம் என்ற பெயர் பயன்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில், ஒரு கனேடிய நடிகை தன்னை ஓர் ஈழத் தமிழ்ப் பெண் என்று அடையாளப்படுத்திக் கொண்டதற்காக ஏன் இவ்வளவு எதிர்ப்புகளை வெளிப்படுத்துகின்றீர்கள்?

ஈழத் தமிழர் என்ற அடையாளத்தை வெளிப்படுத்திக் கொள்வது, மற்றோர் இனத்தின் அடையாளத்தை மறுப்பதாக அமைந்துவிடுமா?

அல்லது, ஒரு பெண் தனது பூர்வீக மண்ணின் வரலாற்றையும் பண்பாட்டையும் நேசிப்பதாகக் கூறுவது, மற்றவர்களின் உரிமைகளைப் பறிப்பதாக அமைந்துவிடுமா?

நீங்கள் உங்களைச் சிங்களவர்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்வதையும், உங்கள் மொழியையும் பண்பாட்டையும் நேசிப்பதையும் நாம் எதிர்க்கவில்லையே!

அவ்வாறான நிலையில், எமது பூர்வீக மண்ணின் வரலாற்றையும் பண்பாட்டையும் நேசித்து, எம்மை ஈழத் தமிழர்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்வதற்கு எதிராக ஏன் இனவெறுப்பை வெளிப்படுத்துகின்றீர்கள்?

உங்களுக்கு உங்கள் இன அடையாளத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கான உரிமை இருப்பதைப் போலவே, எமக்கும் எமது பூர்வீக இன அடையாளத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கான உரிமை இருக்கின்றது.

எனவே, ஈழம் என்ற சொல்லின் வரலாற்றையும், ஈழத் தமிழர் என்ற அடையாளத்தின் பண்பாட்டுப் பின்னணியையும் புரிந்துகொண்டு, இன அடிப்படையிலான வெறுப்புணர்வுகளைத் தவிர்ப்பதே சிறந்ததாகும்.

ஒருவருடைய திரைப்படத்தையோ, நடிப்பையோ அல்லது கருத்துகளையோ விமர்சிப்பதற்கு அனைவருக்கும் உரிமை இருக்கின்றது.

ஆனால், ஒருவர் தனது பூர்வீக இன அடையாளத்தை வெளிப்படுத்திக் கொண்டதற்காக அவரை அவமதிப்பதும், அவரது தொழில் வாழ்க்கைக்குப் பாதிப்பை ஏற்படுத்த முயல்வதும் ஏற்றுக்கொள்ளத்தக்க செயல்கள் அல்ல.

இறுதியாக, உலகின் பல்வேறு நாடுகளிலும் புலம்பெயர்ந்து வாழும் எமது ஈழத் தமிழ் உறவுகளுக்கு நான் கூற விரும்புவது ஒன்றுதான்.

நாம் எமது பூர்வீக மண்ணிலிருந்து புலம்பெயர்ந்து வந்திருக்கலாம். எமது பிள்ளைகள் வேறு நாடுகளில் பிறந்து வளர்ந்திருக்கலாம். நாம் வாழும் நாடுகளின் குடியுரிமையைப் பெற்றவர்களாகவும் இருக்கலாம்.

ஆனால், எமது பூர்வீக மண்ணின் வரலாற்றையும், எமது முன்னோர்களின் பண்பாட்டு மரபுகளையும், ஈழத் தமிழர் என்ற எமது அடையாளத்தையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கின்றது.

அந்த வகையில், தனது பூர்வீக மண்ணின் அடையாளத்தை வெளிப்படையாகக் கூறியுள்ள கனேடிய நடிகை மைத்திரேயி ராமகிருஷ்ணன் அவர்களுக்கு, ஓர் ஈழத் தமிழனாக எனது ஆதரவை மீண்டும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நாம் பிறந்து வளர்ந்த மண்ணை விட்டு வேறு தேசங்களுக்குப் புலம்பெயர்ந்திருக்கலாம். ஆனால், எமது பூர்வீக மண்ணின் வரலாறும் பண்பாட்டு அடையாளமும் எம்மைவிட்டுப் புலம்பெயர்ந்துவிடவில்லை!

சுவாமி சங்கரானந்தா 🙏

விளம்பரம்
← கனடா பகுதி