நையாண்டி / கருத்து
சட்டத்தரணி சுவஸ்திகா அருள்லிங்கம் அவர்களே! உங்கள் மனித உரிமைக் குரல் ஒரு பக்கம் மட்டும்தானா?

சுவாமி சங்கரானந்தா
பிரதம ஆசிரியர் – ஈழ மண்ணின் சுவடுகள்
நையாண்டி – அரசியல் கருத்துக் கட்டுரை
“வடக்கு வாழ் முஸ்லிம் சமூகத்திற்கு 35 வருடங்களுக்கு முன்னால் நடந்தது ‘இடப்பெயர்வும்’ அல்ல ‘இடப்பெயர்ப்பும்’ அல்ல. அது வெளியேற்றம். புலிகளால் துப்பாக்கி முனையில் நடத்தப்பட்ட இனச்சுத்திகரிப்பு. வரலாற்றை மறைத்து சகவாழ்வை தேடமுடியாது.” என்று கூறும் சுவஸ்திகா அருள்லிங்கம் அவர்களே!
வடக்கில் இனக்கலவரம் ஒன்று ஏற்பட்டு முஸ்லிம்கள் பாதிக்கப்படாமல் இருக்க, முஸ்லிம்களின் பாதுகாப்பு கருதி 1990ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலிருந்து விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களில் பலர்,
புத்தளம், கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் வர்த்தகம், தொழில் மற்றும் பிற பொருளாதார நடவடிக்கைகளில் முன்னேறியுள்ளனர் என ஆசிய அபிவிருத்தி வங்கி 2014ஆம் ஆண்டு வெளியிட்ட ஆய்வில் தெரிவித்துள்ளது என்ற வகையில், அவர்கள் விடுதலைப் புலிகளால் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு நல்வாழ்வு வாழ்கின்றார்கள் என வரலாறு கூறுகின்றது.
ஆனால் சட்டத்தரணி அவர்களே, ஆயுதம் தாங்கிய முஸ்லிம்களால் 1985ஆம் ஆண்டிலிருந்து கிட்டத்தட்ட ஒரு சகாப்த காலமாகக் கொல்லப்பட்ட பல ஆயிரக்கணக்கான தமிழர்களின் மரணங்களுக்கு இன்றுவரை நீதியும் கிடைக்கவில்லை, நிவாரணமும் கிடைக்கவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?
இலங்கையில் பயங்கரவாத அமைப்பு என்று தடை செய்யப்பட்டு, இப்போது இயங்கு நிலையில் இல்லாத விடுதலைப் புலிகள், முஸ்லிம்களின் பாதுகாப்பு கருதி அவர்களை வெளியேற்றியதை இனச்சுத்திகரிப்பு எனக் கூறும் நீங்கள்,
அப்பாவித் தமிழர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் படுகொலை செய்த இஸ்லாமிய ஆயுததாரிகளை ஏன் கண்டிப்பதில்லை என்பதற்கான பதிலை,
ஒரு மனித உரிமை வழக்கறிஞராகத் தர்க்க ரீதியான ஆதாரங்களுடன் தருவீர்களா என்ற கேள்வியை உங்கள் முன் வைக்கின்றேன்.
தமிழ் இனத்தில் பிறந்து அந்த இனத்தைச் சுத்திகரித்து அழித்த சிங்களப் பேரினவாதிகளின் தவறுகளையும் இஸ்லாமிய ஆயுததாரிகளின் தவறுகளையும் பேசாமல், தடை செய்யப்பட்டு அதன் தலைமை அழிக்கப்பட்டு, தற்போது இயங்கு நிலையில் இல்லாத விடுதலைப் புலிகள் அமைப்பைப் பற்றிப் பேசுவது என்பது,
இப்போதும் உயிருடன் இருக்கும், தமிழ் மக்களைக் கொன்ற கொலையாளிகளைப் பாதுகாப்பதற்காகவா என்ற கேள்வியையும் உங்கள் முன் வைக்கின்றேன்.
சுவாமி சங்கரானந்தா
பிரதம ஆசிரியர் – ஈழ மண்ணின் சுவடுகள்

வாசகர் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…