கட்டுரைகள் · அரசியல் · கருத்துக் கட்டுரை
இலங்கையின் வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியத்தை முன்னிறுத்தும் முதலமைச்சர் வேட்பாளர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்?
தனிநபர் புகழைத் தாண்டி, தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளையும் தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தையும் முன்னிறுத்தும் தலைமையே இன்றைய தேவை!
இலங்கையின் வடக்கு–கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் உள்ளத்து எண்ணங்களில் தமிழ் தேசிய அரசியல் இன்னமும் உயிருடன் இருக்கிறது. ஆனால், அந்த தமிழ் தேசியம் அரசியல் ரீதியான இலக்கை நோக்கி செல்கிறதா என்ற கேள்வி இன்று முக்கியமான தாகியுள்ளது.
அந்த வகையில் அந்த தமிழ் மக்களில் இருந்து அந்த மக்களின பிரதிநிதியாக வருபவரிடம் தமிழ் தேசியம் என்பது தேர்தல் காலங்களில் மேடைகளில் முழங்கப்படும் கோஷமாக மட்டும் இருக்கக் கூடாது.
மாறாக அது தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள், நில உரிமைகள், மொழி, வாழ்வாதாரம், வரலாற்று அடையாளம் மற்றும் எதிர்கால அரசியல் இருப்பு ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கான ஒரு தொடர்ச்சியான அரசியல் செயற்பாடாக இருக்க வேண்டும்.
அந்த வகையில் வடமாகாண சபைத் தேர்தல் நடைபெறும் சூழலில், தமிழ் தேசிய அரசியலை முன்னிறுத்தும் முதலமைச்சர் வேட்பாளரைத் தெரிவுசெய்வது என்பது ஒரு கட்சியின் தேர்தல் வெற்றியை மட்டும் சார்ந்த முடிவல்ல, அது வடமாகாண மக்களின் அரசியல் எதிர்காலத்துடன் தொடர்புடைய முக்கியமான தீர்மானமாகும்.
எனவே, அந்தப் பொறுப்புக்குத் தெரிவுசெய்யப்படுபவர் தமிழ் தேசியத்தை வெறும் தேர்தல் முழக்கமாக முன்வைப்பவராக இல்லாமல், அதன் அடிப்படைக் கொள்கைகளைப் புரிந்துகொண்டு, அவற்றுக்கு ஏற்ப தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளையும் அபிலாஷைகளையும் முன்னிறுத்தி வழிநடத்தக்கூடிய தலைவராக இருக்க வேண்டும்.
வடக்கு–கிழக்கு மக்களின் அரசியல் உரிமைகள் தொடர்பாகத் தெளிவான நிலைப்பாடு கொண்டிருக்க வேண்டும்.
காணி அபகரிப்பு குறித்த குற்றச்சாட்டுகள், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், இராணுவமயமாக்கல் தொடர்பான மக்களின் கவலைகள், அரசியல் கைதிகள் தொடர்பான கோரிக்கைகள், தமிழ் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் ஆகியவற்றில் தொடர்ச்சியாகச் செயல்பட வேண்டும்.
அதேவேளை, மாகாண சபைக்கு உள்ள அதிகாரங்களையும் அதன் வரம்புகளையும் புரிந்துகொண்டு, கல்வி, சுகாதாரம், விவசாயம், மீன்பிடி, தொழில்வாய்ப்பு, உள்ளூராட்சி நிர்வாகம் போன்ற துறைகளில் நடைமுறைப் படுத்தக்கூடிய திட்டங்களை முன்வைக்க வேண்டும்.
தமிழ் தேசிய அரசியலும் மக்களின் அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல. மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதும் அவர்களின் அரசியல் உரிமைகளைப் பாதுகாப்பதும் ஒரே அரசியல் பொறுப்பின் இரு பகுதிகளாகும்.
தமிழ் தேசிய அரசியலின் முக்கியமான சவால்களில் ஒன்று கட்சிகளுக்கிடையிலான கருத்து வேறுபாடுகளும் அரசியல் பிளவுகளுமாகும்.
இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் மற்றும் பிற தமிழ் அரசியல் சக்திகள் வெவ்வேறு அணுகுமுறைகளைக் கொண்டிருக்கின்றன.
இந்த வேறுபாடுகளை மறைத்துவிட வேண்டும் என்பதல்ல; அவற்றுக்கு மத்தியிலும் பொதுவான அரசியல் இலக்குகளை உருவாக்கக் கூடிய வழிகளை ஆராயாய வேண்டியது இலங்கையின் வடக்கு கிழக்கில் தமிழ் தேசியன் பேசும் அரசியல் கட்சிகளின் வரலாற்றுத் தேவை ஆகும் என்ற வகையில், வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசிய அரசியல் சக்திகள் ஒன்றுபட்ட வேலைத்திட்டத்தை உருவாக்க முடியுமானால், அதனால் தமிழ் மக்களுக்கு முன்வைக்கப்படும் அரசியல் தெரிவுகள் தெளிவடையும்.
அந்த ஒற்றுமை ஒரு முதலமைச்சர் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதில் மட்டும் முடிந்துவிடக் கூடாது.
தமிழ் தேசிய கட்சிகளின் ஒற்றுமை!
மாகாண சபையில் முன்னெடுக்க வேண்டிய கொள்கைகள், அதிகாரப் பகிர்வு தொடர்பான நிலைப்பாடுகள், மக்களின் பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றிலும் பொதுவான திட்டம் இருக்க வேண்டும்.
முதலமைச்சர் வேட்பாளர் யாராக இருக்க வேண்டும்?
ஒரு குறிப்பிட்ட பெயரை முன்கூட்டியே அறிவிப்பதைவிட, வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான அரசியல் அளவுகோல்களை முதலில் தீர்மானிப்பதே பொருத்தமானது.
வேட்பாளர் தமிழ் தேசிய அரசியல் தொடர்பாகத் தெளிவான கொள்கையைக் கொண்டிருக்க வேண்டும். மக்களுடன் நேரடித் தொடர்பு கொண்டவராகவும், அரசியல் மற்றும் நிர்வாக அனுபவம் உடையவராகவும் இருக்க வேண்டும். வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் உள்ள மக்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு செயல்படக்கூடியவராக இருக்க வேண்டும்.
மேலும், கட்சிகளுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்தவும், மாகாண சபையின் அதிகாரங்களை மக்களின் நலனுக்காகப் பயன்படுத்தவும், மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தும்போது தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளைப் புறக்கணிக்காமல் செயல்படவும் கூடியவராக இருக்க வேண்டும்.
தனிப்பட்ட புகழ், சமூக ஊடகங்களில் கிடைக்கும் கவனம் அல்லது தேர்தல் காலப் பேச்சாற்றல் ஆகியவற்றை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இந்தப் பொறுப்பைத் தீர்மானிக்கக் கூடாது.
புதிய தலைமுறைக்கும் இடமளிக்க வேண்டும்!
தமிழ் தேசிய அரசியல் என்பது பழைய தலைமுறையினரின் அனுபவத்தை மட்டும் சார்ந்திருக்க முடியாது. அதேவேளை, அனுபவமுள்ள அரசியல் தலைவர்களை முற்றிலும் புறக்கணிப்பதும் சரியான அணுகுமுறையல்ல.
அனுபவமும் புதிய சிந்தனையும் இணைந்த தலைமையே உருவாக்கப்பட வேண்டும். இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், மீனவர்கள், தொழில்முனைவோர், போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் ஆகியோரின் கருத்துகள் அரசியல் முடிவெடுக்கும் செயல்முறையில் இடம்பெற வேண்டும்.
முதலமைச்சர் வேட்பாளர் ஒருவர் முன்வைக்கப்படும் போது, அவருடன் இணைந்து செயல்படும் குழுவும் முக்கியமானது. கல்வி, பொருளாதாரம், சட்டம், நிர்வாகம் மற்றும் சமூக முன்னேற்றம் போன்ற துறைகளில் திறமையுள்ளவர்களைக் கொண்ட குழு இல்லாமல், தனிநபரால் மட்டும் மாகாணத்தின் எதிர்காலத்தை மாற்ற முடியாது.
முடிவாக…
வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியத்தை முன்னிறுத்தும் வேட்பாளரைத் தெரிவுசெய்வது, யார் அதிகமாகத் தமிழ் தேசியம் பேசுகிறார் என்பதைத் தீர்மானிக்கும் போட்டியாக இருக்கக் கூடாது.
யார் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்காகத் தொடர்ச்சியாகச் செயல்படுகிறார், யார் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை முன்வைக்கிறார், யார் தமிழ் அரசியல் சக்திகளுக்கிடையே பொதுவான வேலைத்திட்டத்தை உருவாக்க முடியும் என்பதன் அடிப்படையில் இந்தத் தெரிவு அமைய வேண்டும்.
தமிழ் தேசியம் என்பது ஒரு தேர்தல் சின்னமோ, ஒரு கட்சியின் தனியுரிமையோ அல்ல. அது தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள், அடையாளம், வாழ்வாதாரம் மற்றும் எதிர்காலம் தொடர்பான பொறுப்பாகும்.
வடமாகாணத்தின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர், அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு செயல்படத் தயாராக உள்ளவராக இருக்க வேண்டும். அத்தகைய வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு, தமிழ் தேசிய அரசியல் சக்திகள் தங்களுக்குள் ஒரு தெளிவான அரசியல் வேலைத்திட்டத்தை உருவாக்க வேண்டும்.
தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் இலக்கைத் தீர்மானிப்போம். தனிநபரை முன்னிறுத்துவதற்கு முன் தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தை முன்னிறுத்துவோம். அதுவே வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசிய அரசியலுக்கான அடித்தளமாக அமைய வேண்டும்.
சுவாமி சங்கரானந்தா🙏


வாசகர் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…