கட்டுரைகள் · அரசியல்
இன்னும் அறிவிக்கப்படாத அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் தானே போட்டியிடப் போவதாக அறிவித்த ‘அதிபர்’ சீமான்!

சுவாமி சங்கரானந்தா
பிரதம ஆசிரியர் – ஈழ மண்ணின் சுவடுகள்
2026ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் திகதி அன்று திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அம்பாசமுத்திரம் தொகுதியில் உள்ள அரசு பள்ளிக்கு குழந்தைகள் தின விழாவில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் விஜயம் செய்யவுள்ள நிலையில், “சீமானின் வெற்றி தமிழ்நாட்டின் வெற்றி” என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் அம்பாசமுத்திரம் தொகுதிக்குட்பட்ட பாபநாசம், விக்கிரமசிங்கபுரம், சிவந்திபுரம் ஆகிய பகுதிகளில் அதிக அளவில் ஒட்டப்பட்டுள்ளன.

கடந்த அக்டோபர் மாத இறுதியில் திருநெல்வேலியில் பத்திரிகையாளர்களின் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த நாம் தமிழர் கட்சியின் ‘அதிபர்’ சீமான், அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் தானே போட்டியிட முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்திருந்த நிலையில், நாம் தமிழர் கட்சியினரால் ஒட்டப்பட்டுள்ள இந்தச் சுவரொட்டிகள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இசக்கி சுப்பையா, தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். இதையடுத்து, அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், இதுவரை இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பைத் தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை. என்றாலும், தேர்தலை அறிவிக்கும் அதிகாரம் உள்ளவராகத் தன்னை எண்ணிக்கொண்டு, சீமானே தன்னை நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக அறிவித்திருப்பது வியப்பைத் தரவில்லை.
‘அதிபர்’ சீமானின் பொது வேட்பாளர் விருப்பத்தைத் திராவிடம் மதிக்கவில்லை!
திராவிட அரசியலைக் கடுமையாக விமர்சித்து, தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுப்பதாகக் கூறிவரும் நாம் தமிழர் கட்சியின் ‘அதிபர்’ சீமான், அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் திமுகவும் அதிமுகவும் தனக்கு ஆதரவு வழங்கினால் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாகக் கடந்த அக்டோபர் மாதம் 30ஆம் திகதி பசும்பொன்னில் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
அதுமட்டுமல்லாமல், பசியோடு இருப்பவனுக்குப் பிரியாணி கொடுத்தால் வேண்டாம் என்று சொல்வானா என்ற உதாரணத்தையும் கூறி, திராவிடக் கட்சிகளின் தேர்தல் ஆதரவை ஏற்றுக்கொள்வதில் தனக்குத் தயக்கமில்லை என்பதையும் வெளிப்படுத்தியிருந்தார்.
ஆனால், தமிழ்த் தேசியம் பேசிக்கொண்டு திராவிடக் கட்சிகளை விமர்சிக்கும் சீமானின் இந்த விருப்பத்தைத் திராவிடக் கட்சிகள் மதிக்கவில்லை.
குறிப்பாக, 2026ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் திகதி செய்தியாளர்களிடம் பேசிய திமுக செய்தித் தொடர்புக் குழுத் தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன், திராவிட இயக்கத்திற்கு எதிராகக் கட்சியைத் தொடங்கி, திமுகவைத் தொடர்ந்து கடுமையாக விமர்சித்துவரும் சீமானுக்கு அம்பாசமுத்திரத்தில் ஆதரவு அளிக்கும் எண்ணம் திமுகவுக்கு இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
அத்துடன், தங்களுக்கே வெற்றி வாய்ப்பு இருக்கும்போது சீமானை ஏன் ஆதரிக்க வேண்டும் என்ற கேள்வியையும் எழுப்பியிருந்தார்.
அதேபோன்று, அதிமுக தரப்பிலும் சீமானைப் பொது வேட்பாளராக ஆதரிக்கும் யோசனை நிராகரிக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின.

ஆக மொத்தத்தில், திராவிடத்தை எதிர்த்துப் பேசும் ‘அதிபர்’ சீமானுக்கு, சட்டமன்றத்திற்குள் நுழைவதற்குத் திராவிடக் கட்சிகளின் ஆதரவை ஏற்றுக்கொள்வதில் எந்தத் தயக்கமும் இல்லை. ஆனால், சீமானின் இந்த விருப்பத்தைத் திராவிடக் கட்சிகள் மதிக்கத் தயாராக இல்லை என்பதுதான் வேடிக்கை!
திராவிடத்தை ஒழிப்பதாகக் கூறிக்கொண்டு அரசியல் நடத்தும் சீமான், அதே திராவிடக் கட்சிகளின் ஆதரவுடன் சட்டமன்றத்திற்குள் நுழைய விரும்புவது அவருடைய தமிழ்த் தேசிய அரசியலின் இன்னுமொரு விசித்திரமான முகமாகவே எனக்குத் தெரிகிறது.
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் ‘அதிபர்’ சீமானைப் பொது வேட்பாளராக அறிவித்தால் அவர் வெற்றி பெறுவாரா?
தமிழ்நாடு, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதி (எண் 225) 2026ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகளின்படி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் டாக்டர் இசக்கி சுப்பையா 65,589 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

அவருக்கு அடுத்ததாக, காங்கிரஸ் கட்சி வேட்பாளரான வி.பி. துரை 55,344 வாக்குகளைப் பெற்று, 10,245 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
இவர்கள் இருவருடனும் நெருக்கமான வாக்கு எண்ணிக்கையுடன் தமிழக வெற்றிக் கழக வேட்பாளரான எஸ். ராஜகோபால் 53,611 வாக்குகளைப் பெற்றிருந்தார். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட டாக்டர் வி. சிவசங்கரன் 14,906 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார்.
இந்த நிலையில், திமுகவும் அதிமுகவும் தாம் போட்டியிடாமல் தன்னைப் பொது வேட்பாளராக முன்நிறுத்தினால் அவர்களின் ஆதரவை ஏற்றுக்கொள்வதாக அறிவித்த ‘அதிபர்’ சீமானுக்கு, அத்தகைய ஆதரவு கிடைத்தால்கூட அவர் அந்தத் தேர்தலில் வெற்றி பெறமாட்டார் என்பதே எனது அரசியல் மதிப்பீடாகும்.
ஏன் ‘அதிபர்’ சீமானால் தமிழக வெற்றிக் கழகத்தைத் தோற்கடிக்க முடியாது?
அம்பாசமுத்திரம் தொகுதியில் தேர்தல் ஆணையத்தால் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால், அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பின்னர் ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்ட இசக்கி சுப்பையாவே மீண்டும் தவெக சார்பில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆக மொத்தத்தில், ஒரு உதாரணத்திற்காக, அவருக்குக் கிடைத்த 65,589 வாக்குகளில் 50 விழுக்காடு கட்சிக்காகக் கிடைத்த வாக்குகள் என எடுத்துக்கொண்டாலும், அவருக்குத் தனிப்பட்ட செல்வாக்கால் கிடைத்த வாக்குகள் சுமார் 32,795 எனலாம்.
அதைப்போல, கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்று இரண்டாவது இடத்தைப் பெற்ற காங்கிரஸ் கட்சி இப்போது தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியில் இருப்பதால், காங்கிரஸ் வேட்பாளர் வி.பி. துரை பெற்ற 55,344 வாக்குகளை திமுக, காங்கிரஸ் மற்றும் வேட்பாளரின் தனிப்பட்ட ஆதரவு என்று மூன்றாகப் பிரித்தால், கிட்டத்தட்ட 18,448 வாக்குகள் காங்கிரஸ் கட்சிக்கானவை எனலாம்.
இப்போது மூன்றாவது இடத்தைப் பெற்ற தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் நெல்லை ராஜகோபால், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக இருப்பதால், ஒரு உதாரணத்திற்கு அவர் பெற்ற மொத்த 53,611 வாக்குகளும் வரும் இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கே செல்லும் எனலாம்.
இந்தக் கற்பனைக் கணக்கீட்டின்படி, இசக்கி சுப்பையாவின் தனிப்பட்ட ஆதரவு 32,795 வாக்குகள், காங்கிரஸ் கட்சி ஆதரவு 18,448 வாக்குகள், தமிழக வெற்றிக் கழகத்தின் முந்தைய வாக்குகள் 53,611 என மொத்தம் சுமார் 1,04,854 வாக்குகள் தவெக தரப்புக்குக் கிடைக்கக்கூடும் என்று ஒரு கணக்கை முன்வைக்கலாம்.
இதற்கு மாறாக, அதிமுக வேட்பாளரின் முந்தைய வாக்குகளில் மீதமுள்ள 32,794 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளரின் வாக்குகளில் மீதமுள்ள 36,896 வாக்குகளும் திமுக–அதிமுக ஆதரவு பெறும் பொது வேட்பாளருக்குச் செல்கின்றன என்று எடுத்துக்கொள்வோம்.
அத்துடன், நாம் தமிழர் கட்சியின் சிவசங்கரனுக்குக் கிடைத்த 14,906 வாக்குகளும் முழுமையாக சீமானுக்கே கிடைக்கும் என்று கருதினாலும், அவரது தரப்புக்குக் கிடைக்கக்கூடிய மொத்த வாக்குகள் சுமார் 84,596 ஆகும்.
இந்தக் கணக்கீட்டின்படி பார்த்தால்கூட தமிழக வெற்றிக் கழகத்தின் தரப்பிற்கு 1,04,854 வாக்குகளும், திமுக–அதிமுக ஆதரவுடன் போட்டியிடும் சீமானுக்கு 84,596 வாக்குகளுமே கிடைக்கும்.
இந்த நிலையில், திராவிடப் புரோக்கர் சீமானின் பொது வேட்பாளர் கனவு அவருக்கு வெற்றியை ஈட்டித்தராது என்பதே எனது அரசியல் மதிப்பீடாகும்.
எனது பார்வையில், தமிழ்நாட்டில் தமிழ்த் தேசியத்தைக் கேவலப்படுத்தி அரசியல் செய்துவரும் சீமானுக்கு, திமுகவும் அதிமுகவும் தங்கள் முழுமையான ஆதரவை வழங்கினால்கூட, அவர் வெற்றி பெறமாட்டார் என்பதே எனது உறுதியான கருத்தாகும் என்பதைப் பதிவு செய்து, நாம் தமிழர் கட்சியின் உலகளாவிய குண்டர்களின் புத்தியில் எட்டுமாறு, திராவிடப் புரோக்கர் ‘அதிபர்’ சீமான் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் தோற்கடிக்கப்படுவார் என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
சுவாமி சங்கரானந்தா
பிரதம ஆசிரியர் – ஈழ மண்ணின் சுவடுகள்

வாசகர் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…